ஜூலை மாத இறுதியில் “உங்கள் நூலகம்” இதழுக்கு இக்கட்டுரையை அனுப்பியிருந்த தோழர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் 5-8-2017 அன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் அகால மரணமடைந்து விட்டதால் அவரது எழுத்தியக்கத்தில் இது இறுதிக் கட்டுரையாக அமைந்துவிட்டது.
என் புன்னகையை வேரோடு பிடுங்கிச்
சென்றுவிட்ட போதும்
மீண்டும் என்னால் புன்னகைக்க முடிகிறது
உன்னைக்கொல்ல வேறுவழியில்லை எனக்கு.
இது கவிஞர் மனுஷியின் குரல்.
2017ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி
யுவ புரஸ்கார் விருது பெற்றவர் கவிஞர் மனுஷி.
குட்டி இளவரசியின் சொற்கள், முத்தங்களின் கடவுள் தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவந்த மூன்றாவது கவிதை நூலான ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் இந்த விருதைப் பெறுகிறது.
இச்சூழலில் கவிதை சார்ந்த தகுதிப்பாடு பற்றி அவசியமற்ற வசைச் சொற்களோடு உரத்த குரலில் பொதுவெளியில் ஓரிரு குரல்கள் கேட்கின்றன. இக்குரல்கள் வர்ணாசிரம சாதீயப் படிநிலை சொல்கிற மேலானது / கீழானது அரசியலை மையப்படுத்தும் மனோபாவத்தின் குரலாகும். இது ஒற்றைப்படுத்தப் பட்ட எழுத்து முறை மட்டுமே உன்னதமானது, தானற்ற, தன்சார்பற்ற பிற அனைத்துமே கீழானதென்கிற இந்துத்துவ சார்பு அதிகார அரசியலை இலக்கியத் தளத்தில் நிறுவும் குரலாக வெளிப்படுகிறது. இந்த நோக்கிலே எழுப்பப் படும் வெற்றுக்கூச்சல்களை புரட்டிப்போடும் ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகளை மனுஷி தன் கவிதைப் பரப்பெங்கும் சுழலவிடுகிறார்.
தழைக்கும் முத்தங்களால் இரவு கவிதையாகிறது. குழந்தைகளின் மீதான கொலைகளின் வாதை பிரபஞ்ச ஓலமாகக் கேட்கிறது.தொழில்நுட்ப முதலாளித்துவம் உருவாக்கிய உறவின் சிதைவுகளில் சொற்களற்ற உலகில் ஸ்மைலிகள் மட்டுமே உரையாடிக் கொண்டிருக்கின்றன. காதலுக்காக ஒப்புக்கொடுத்தலில் நிகழ்ந்த ஏமாளித் தனம் மனசெங்கும் வெறுமையைப் பரப்பிச் செல்கிறது. மனித உறவுகளின் துர்மரணத்திற்கு பதிலீடாக பறவை களையும், விலங்குகளையும் சிநேகமிக்க உறவுகளாக மறு படைப்பு செய்கின்றன.
ஆண் திமிரை தீவிர மொழி சார்ந்து குத்திக் கிழிக்கும் சொற்களில் கோபம் கொப்பளிக்கிறது. நடுவீதியில் அணிலை, வீட்டுக்குள் சிறகடித்த பட்டாம் பூச்சியை, தொட்டிச் செடியின் மலரை, ஜன்னலோர சிட்டுக்குருவிகளை, நாய்க்குட்டியை, வாசற்படியை சுற்றிவரும் பூனையை, தோட்டத்தில் நட்டுவைத்த செடிகளை நேசித்த அவள் கழுத்தில்தான் உங்கள் கத்தியை வைத்து அழுத்துகிறீர்கள். அவளின் குருதியைத் தான் பழச்சாறென அருந்தி தாகத்தை தணித்துக் கொள்கிறீர்கள். இது ஆணின் முன்னும் பணிய மறுக்கும் எதிர்ப்பின் மொழி.
எளிய சொற்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட மாறா துயருறு கொண்ட ரகசியங்கள் மனுஷியின் கவிதைப்பரப்பெங்கும் அலைபாய்கின்றன.பறவையின் சுவடை பின்தொடர்ந்து செல்லும் நிழலாக தன்னை உருவகப்படுத்தும் கவிதை சொல்லியிடம் தனிமையின் விடுபடா துயரம் நிறைந்திருக்கிறது. காதல், பிரிவு, துயரம் இழுத்துச்சென்று கடலில் மூழ்கடிக்கிறது. நடுங்கும் கரங்களை இறுகப்பற்றும் போது சொற்கள் நடுங்கு கின்றன. இழப்பின் வலிகளாக மணல்வீடு சிதைந்து கிடக்கிறது. மாமழைக்காலம் சுவடுகளை அழிக்கிறது. காகிதத்தால் செய்யப்பட்ட கப்பலோடு காத்திருத்தல் தொடர்கிறது. விட்டு விடுதலையாகி பிரபஞ்சமெங்கும் பறத்தலின் சுதந்திரம் முன்னே சிறகவிழ்க்கிறது.
உன்னைக் காத்திருக்கவே செய்கிறேன்
என்னைக் காத்திருக்கச் செய்துவிட்டு
என காத்திருத்தலின் நெடிய துயரத்தை எழுதிச் செல்கிறது.
நட்பு, காதல், உறவு எனத் தொடரும் பன்மைத் தன்மையான பிரிதலின் துயரமாக இருக்கிறது. நம்பியவைகள் கைகூடாமல் போக ஏமாற்றத்தின் விளிம்பில் தள்ளி விடுகின்றன. இதன் அடையாளத்தில் அரசியல் குரலும் இணைந்திருக்கிறது. கவிதையின் உணர்வடுக்குகள் வாசகனுக்கு சொல்லிச் செல்லும் உலகம் வேறானது. ஒயின் போத்தல் கொலைக்கான காரணம், சித்தார்த்தனின் மந்திரச்சொல், நிலாவின் புத்தன், சாத்தானுடன் தேநீர் அருந்துதல், ஆறு என்றே சொன்னார்கள் என விரியும் கவிதைகளில் புனைவுத் தளத்தின் படைப்பாக்க முறையை உணர்த்துகின்றன.
இந்துத்துவ அரசியலுக்கு எதிரான என் உணவு என் உரிமைக் கவிதை புராணவியல் வரலாற்றைக் கட்டு டைத்து மாட்டிறைச்சி தடை அரசியலுக்கு எதிரான பொருத்தப்பாடுடைய அர்த்த உற்பத்தியையும் உணர்வுத்தளத்தில் அதியற்புதமாக உருவாக்கிவிடுகிறது.
வேசியென கூச்சலிடுங்கள்
கொல்வதெற்கென ஆயுதங்களை தூக்கி வாருங்கள்
அதிகார போதை தலைக்கேறி
தொண்டைத்தண்ணீர் வற்ற உளறிக் கொட்டுங்கள்
இப்போதும் சொல்கிறேன்
பிள்ளைக்கறி கேட்டவனே உங்கள் கடவுள்
பிறன் மனைவியைப் புணர துடித்தவனே உங்கள் கடவுள்
பக்தனை தீயிட்டுக் கொளுத்தியவனே உங்கள் கடவுள்
இன்னும் சொல்கிறேன்
வேடனின் கையால் எச்சில் மாமிசம் வாங்கித் தின்றவனே
உங்கள் கடவுள்
அவனை முதலில் கொன்று விடுங்கள்
என் உணவை நான்
சமைத்து உண்டு பசியாறிக் கொள்கிறேன்
நேரடி மொழி சார்ந்த ஈழப் போராளி திலீபனும் இந்த ஆதிக்காதலில் பங்கெடுத்துக் கொள்வதைப் பார்க்கலாம்.
பெண்ணிய வாசிப்பு நிறைந்த பிரதி நிர்பயாக்களின் தேசம். இது புராணவியல் தொன்மங்களில் அநீதி இழைக்கப்பட்ட அனுசுயா, ரேணுகா, அகலிகை, சூர்ப்பனகை, சீதை, கண்ணகி, மாதவி, சமகாலத்தின் நிர்பயா, விநோதினிகள், ஆயுதப்போராளி இசைபிரியா என ஒடுக்கப்பட்ட பெண்வெளியை அகழ்ந்து படைப் பாக்கித் தருகிறது.
நிகழ்தளத்தின் ஒரு பெண் கால்மேல் கால் போட்டு உட்காரும் நடத்தையில் கூட அதிகாரத்துவம் கட்டமைத்த ஒழுங்கமைவுக்கு எதிரான நுண்அரசியலை பெண்வெளியின் தடம் பதிந்த எழுத்தாகிறது.
பெண்ணியத்திற்குள் இயங்கும் சாதீய அரசி யலையும் மிக எளிய மொழியில் உரையாடிச் செல்லும் மனுஷி,
ஒருவேளை நீங்கள் கருதுவது போல்
நான் கவுண்டச்சி அல்லவென்று தெரிந்தால்
நீங்கள் முகம் சுழிக்கலாம்
என்னுடனான உரையாடலை துண்டித்துக் கொள்ளலாம்.
என் கவிதைகள் கூட தீட்டுக்கு உரியதாகலாம்
புறமும், அகமும், வன்மையும், மென்மையும் கலந்த மொழியை தேவைக்கேற்ப கையாளும் எடுத்துரைப்பியல் முறை மனுஷியின் கவிதைகளின் விஷேசித்த அம்சம்.
எனவேதான் அவரின் கவிதை ஒன்று, சிறுபறவையின் மரணத்திற்காக சவக்குழியைத் தோண்டிய இந்தக் கைகளை என்ன செய்வதென கேட்டு திகைத்து நிற்கிறது.
மனுஷியின் கவிதைகளின் பல் குரல் தொனி யதார்த்த மாகவும், நுண்அனுபவமாகவும், புனைவுவெளியாகவும் வெளிப்பட்டிருக்கும் நுட்பத்தை வாசிப்பனுபவம் கொண்ட தேர்ந்த வாசகன் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்...