solai sundaraperumal

சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் அவர்களுடன் நிகழ்த்தப்பட்ட இந்நேர்காணல் அவரது மறைவையட்டி மீள்நினைவாக தற்போது வெளியிடப்படுகிறது.

தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் எந்த அளவிற்கு செந்நெல் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன?

இளமைக் காலம் எனக்கு வறுமையான காலமே. அப்பா ஓர் எளிய கல் உடைக்கும் தொழிலாளி. கொத்தனார் வேலை, கோயில்களில் ‘சுதை வேலை’ போன்றவற்றைச் செய்வார். ஆனால், எங்கள் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பமே. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவனூர் ஆலங்குடிதான் எங்கள் சொந்த ஊர். என் நாவல்களிலெல்லாம் இவ்விரண்டு ஊர்களையும் பதிவு செய்வேன்.

எங்கள் அப்பாவினுடைய தாத்தாவிற்கு ஒரு ஊரே சொந்தமாக இருந்தது. எங்கள் ஊரில் தலித்துகளுக்கும். வெள்ளாளர்களுக்கும் எந்தவிதவொரு சமூக முரண்பாடும் இல்லாமல் இருந்தது, ஊர் மட்டுமல்ல; அந்த வட்டமே. 16ஆம் நூற்றாண்டிலிருந்தே இப்படி இருந்து வருகிறது. வெள்ளாளர்கள் நிலம் வச்சிருப்பாங்க; உழைப்பாளிகளாகவும் இருப்பாங்க.

விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. சகல வசதியுடனான நாலுகட்டு. ஐந்து கட்டு வீடு இருக்கும். ஆனால் அனைவருமே உழைப்பாளர்கள். ஒரு குடும்பத்தில் 5, 6 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வசிப்பார்கள். தலித்துகளுக்கு சகல உரிமைகளையும் வசதிகளையும் செய்து தருவார்கள். கூலி தவிர சோறும் சமைத்துப் போடுவார்கள். எந்த வெள்ளாளரும் குடைபிடித்துக் கொண்டு நாட்டாமை செய்ததில்லை. தலித்துகளுடன் சேர்ந்து வயலில் உழைப்பார்கள்.

எங்கள் வட்டாரத்தில் இருந்த நில உடைமை வெள்ளாளர்களுக்கும் பிற பகுதியில் உள்ள நில உடைமையாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. பிற பண்ணையாளார்களைவிட எங்கள் வட்டத்து வெளர்ளாள நில உடைமையாளர்கள் தலித்துகளை நாகரிகமாக நடத்தினார்கள்.

அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் தலித்துகள் வீடு கட்டிக் கொள்ளவும், ஆடு-மாடுகள், மரங்கள் வளர்க்கவும் அவற்றை அனுபவிக்கவும் உரிமைகள் இருந்தன. தலித்துகளுக்கு காலை உணவாகக் கஞ்சியும், மோரும், எலுமிச்சைச்சாறும் பிழிந்து தருவார்கள். பிற பண்ணைகளில் தலித்துகளுக்கு இவ்வுரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.

இவ்வித பண்ணைகளில் ஆடு - மாடுகள் வளர்க்க மட்டுமே உரிமைகள் தரப்பட்டிருந்தன. கன்று ஈன்றவுடன் அவை பண்ணையாளர்களுக்குச் சொந்தமாகிவிடும். பெரும் பண்ணையார்கள் (50, 100, 200, 500) பல வேலி நிலங்களுக்குச் சொந்தமாக இருக்க எங்கள் வட்டாரத்து வெள்ளாள நில உடைமையாளர்கள் யாருக்குமே இரு வேலிக்கு அதிகமாக நிலங்கள் இருந்ததில்லை. பிற பண்ணையார்கள் ஆண்டைகள் என்றழைக்கப்பட்ட எங்கள் பகுதியில் நில உடைமையாளர்கள் ஐயா என்றே அழைக்கப்பட்டனர்.

இதுபோன்ற வெள்ளாள சமூக அமைப்புள்ள குடும்பத்திலிருந்தே நான் வந்தேன். ஆனால் இவ் வெள்ளாளர் சமூகத்திற்குள்ளேயே வர்க்கப் பிரிவுகள் இருந்தன. மொத்தம் மூன்று அடுக்குகள் இருந்தன, அடித்தட்டு வெள்ளாள உழைப்பாளி, நிலவுடைமை வெள்ளாளர் வீட்டினுள் போய் வரலாம். அவர்களுடன் மணஉறவு வைத்துக் கொள்ளவும் கூட சூழல் இருந்தன.

இரண்டாவது அடுக்கிலுள்ள வெள்ளாளர்கள் உழைக்கும் வெள்ளாளர்களுக்கும், தலித்துகளுக்கும் நில உடைமை வெள்ளாளர்களுக்கும் இடையிலான அலுவலர்களாக இருந்தார்கள். உதாரணமாக எங்கள் பெரியப்பா இரு வேலி நிலமுடைய ஒரு வெள்ளாளர் நில உடைமை குடும்பத்திற்கு ‘காரியகாரு’ எனும் அலுவலராகப் போய்ச் சேர்ந்தார். காரியக்காரருக்குக் கீழ் 10, 15 குடும்பங்கள் பணியாற்றுவார்கள். பெரியப்பா மேல்தட்டு வீட்டுப்பெண்ணை மணந்து கொண்டார்.

ஆனால் மேல்தட்டு வர்க்கத்துடன் சேர்ந்தவுடன் தலித்துக்களை புறக்கணிக்க ஆரம்பித்தார். இப்படி முதல் தட்டை அடைந்தவுடன் அடுத்தடுத்து வெள்ளாளர்களுக்குள்ளேயே உள்ள வர்க்கங்களையும் தலித்துகளையும் ஒன்றாகப் பார்த்தார் (நடத்தினார்). அப்பாவோட அக்கா, பெரிய பண்ணை. அவர்களைச் சார்ந்துதான் நாங்கள் இருந்தோம். ஆனால் கூலி வேலையாளாகப் போக அப்பா விரும்பவில்லை. கொத்தனார் தொழிலைக் கற்றுக்கொண்டு சம்பாதித்து நிலம் வாங்கினார். நான் வயல் வேலை செய்துகொண்டே படித்தேன். உழவிற்கு எருமை கடாக்களையே ஏரில் பூட்டுவோம்.

வெள்ளாளர் சமூகத்தில் பெண்களுக்கு உரிமை இருந்தன. திருமணம் நடக்கும்போது பேச்சுவார்த்தையில் மணப்பெண்ணிற்கும் பெண்ணின் தாய்க்கும் சபையில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த உரிமை இருந்தது. நான் சொல்வது 100 ஆண்டுகளுக்கு முன்பு; பிற சமூகங்களில் இந்தப் போக்கைக் காணமுடியாது.

எங்கள் குடும்பத்திலேயே ஒரு பெண் தலித் ஆணை திருமணம் செய்து கொண்டார். அந்த ஆண் வெள்ளாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அதைத்தான் செந்நெல் நாவலில் ‘கண்ணுச்சாமி - செல்வி’ பாத்திரங்களாகப் படைத்துள்ளேன். அம் மணமகனுக்கு நிலமும் ‘பத்தாயமும்’ சீதனமாகத் தரப்பட்டன. எங்கள் வட்டாரத்தின் ஒட்டுமொத்த சமூகப் படிநிலை அமைப்பு கீழ் தந்துள்ளபடி இருந்தது. இதன் பிரதிபலிப்பை நாவலில் காணலாம்.

முதலியார், நாயுடு  -      முதல் தட்டு

வெள்ளாளார்             -      இரண்டாம் தட்டு

உழைக்கும் வெள்ளாளர் -      இடைத்தட்டு

பள்ளார்-பறையார்       -      அடித்தட்டு

(முதல் தட்டு & இரண்டாம் தட்டு = மேல்தட்டு)

உழைக்கும் வெள்ளாளர்களுக்கும், தலித்துகளுக்கும் ஓர் இணக்கமான உறவு இருந்தது. இவர்கள் ஆள்பலம் கொண்டவர்கள். நிலஉடைமை வெள்ளாளர்கள் தலித்துகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குவார்கள். இவ்விரு இனமும் சேர்ந்து பெரு நிலக்கிழார்களை எதிர்த்துள்ளன.

செந்நெல் நாவலின் ‘முன்னத்தி ஏர்’ எனும் பகுதி உண்மைச் சம்பவங்களின் வெளிப்பாடா?

அப்பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. அப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள அழகேசன் எனும் பாத்திரம் நான்தான். மலர் எனும் பாத்திரமும் உண்மையே. எங்கள் குடும்பத்தில் எங்கள் அப்பா ஒரு கூலிக்காரராயிருந்ததால் எங்களுக்கு / எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. எல்லோரும் ஒதுக்கி வைக்கிற அந்தச் சூழல்ல ஒரேயரு பெண் மட்டும்தான் எனக்கு ஆறுதலான உறவாய் இருந்தார்.

உறவு என்றால் சிறுபிள்ளையாயிருந்த காலத்திலிருந்தே. அந்தப் பெண்தான் எனக்கும் பல தின்பண்டங்களை அறிமுகப்படுத்தினார். எனக்குத் தெரிந்த உணவுப்பண்டங்கள் முறுக்கு, கெட்டி உருண்டை, அதிரசம் இவைதான். இப் பெண்ணின் அன்பு கிடைத்த பிறகுதான் பிற தின்பண்ட வகைகள் தெரியவந்தன. அந்தச் சிறு வயதில் அப்பெண்ணைப் பார்க்க நாகப்பட்டினம் பார்க்க போய்க்கொண்டிருக்கும்போதுதான் நான் பயணித்த பஸ்ஸின் எதிரே கரிக்கட்டையாக எரிந்து தீர்ந்த மனித உடல்களை மாட்டு வண்டிகள் சுமந்து போய்க்கொண்டிருந்தன. அதைத்தான் முன்னத்தி ஏரில் நான் பதிவாக்கியுள்ளேன்.

வண்டிகள் கூட எங்கள் வட்டாரத்தில் வர்க்கத்தை பிரதிபலித்தன. கூடுவண்டி என்றால் அது நிலச்சுவான்தார்களுடையது; கீற்று வண்டி இடைத்தட்டு வர்க்கத்தினுடையது. தலித்துகள் சாக்கு கட்டிய வண்டிகளிலேயே போய் வந்துகொண்டிருந்தார்கள். அன்றைக்கு சாக்கு கட்டிய வண்டிகளில்தான் கரிக்கட்டையான தலித் உடல்களை எடுத்துச் சென்றார்கள். இது என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அச்சம்பவத்தில் உண்மையிலேயே எத்தனைப் பேர்?

உண்மையான எண்ணிக்கை 44. வயதினடிப்படையில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள். 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள். 60, 70 வயதிற்குட்பட்ட ஆண்கள். கைக்குழந்தைகளை கொண்டிருந்த பெண்கள். மூன்று குழந்தைகள்; பால் குடிக்கும் குழந்தை, 3 வயது குழந்தை, மற்றொன்று 7 வயது குழந்தை. இம்மூன்று குழந்தைகளுடன் தாயும் இறந்துள்ளார்.

அன்றைய ஏடுகள் தவறான செய்திகளைத் தந்தன. 24 பேருன்னு தினமணி செய்தி தந்தது; தினத்தந்தி 32 என்று. மந்திரிகள் சொன்னது சற்றேறக்குறைய 30 என்று. கம்யூனிஸ்ட்காரங்களுக்கே 44 என்று சரியாத் தெரியாது. வெளிவந்தவை அரசு சார்பான செய்திகள் மட்டுமே. கவிஞர் வெண்மணி 42 என்கிறார்.

எந்த நோக்கத்துடன் நாவலை எழுதினீர்கள்?

(என்னோட நோக்கமே உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை, வாழ்ந்த பாத்திரங்களை அடிப்படையாகக்கொண்டு யதார்த்தத்தைக் குறைக்காமல் document செய்ய வேண்டும் என்பதே) அந்த சமூகத்தோடு, அழுக்கு, கலை எல்லாம் சேர்ந்து கதையில் வரவேண்டுமென்று நினைத்தேன். வடிவேலு, கண்ணுச்சாமி, செல்வி எல்லாம் இறந்தோர் பட்டியலில் உண்டு. கந்தசாமிய சிலபேர் கதையில் சேர்க்க வேண்டாம்னு சொன்னாங்க. நான் விரும்பினேன். அவரை வெறும் கம்யூனிஸ்ட்காரனாப் பார்க்கல. ஒரு களப்போராளியா பாக்குறேன்.

மணலி கந்தசாமி, வடிவேலு போன்ற வாழ்ந்த பாத்திரங்கள் கம்புச்சண்டைகளை பிறருக்கு கற்றுத் தருவதாகக் கதையில் சொல்லப்பட்டுள்ளது. தங்களுக்கு ‘கம்புச் சண்டை’ எனும் கலை தெரியுமா?

ஆமாம். எனக்குத் தெரியும். 16, 17 வயதுகளில் நான் ராமையா வாண்டையாரு என்ற தலையாரியிடம் கற்கத் தொடங்கினேன். ஆனால் என் உடல்வாகு அதை மேலும் கற்கத் தடையாயிருந்தது. இதிலேயே மூன்று வகை இருக்கு. நாலு வீடு கட்டி விளையாடுவது; இரண்டு வீடு கட்டி விளையாடுவது என உண்டு. நாலு வீடு கட்டி விளையாடுவது

கீழைத்தஞ்சைக்காரர்கள்; இரண்டு வீடுகட்டி விளையாடுவது மதுரைக்காரரர்கள். இதைத்தான் மேலைத்தஞ்சைக்காரர்கள் கற்றுக்கொண்டனர். நாலு வீடு கட்டி விளையாடுபவர் ஒரு அடிதான் வாங்குவார். ஆனால் அவரை மீண்டும் அடிக்க முடியாது. ஏனென்றால் இது slow process. இரண்டு வீடு கட்டி விளையாடுபவர் உடனே குத்திப் பாய்ச்சுவார். நாலு வீடு கட்டி விளையாடுபவர் யோசனை பண்ணி குத்திப்பாய்ச்சுவார். ஆனால் குத்திப்பாய்ச்சினால்

இரண்டு வீடு கட்டி விளையாடுபவரால் தடுக்க முடியாது. இப்போது இக்கலைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன. திராவிட. பொதுவுடைமை இயக்கங்கள் இவற்றை கணக்கில் எடுக்கத் தவறி விட்டன. ஒரத்தநாடு பக்கத்தில் கம்பு வாத்தியார்கள் அலங்காரமாக கம்புச்சுத்துவார்கள். ஆனால் அடி வாங்குவார்கள். தமிழ்நாட்டிற்குச் சொந்தமான இச் சிலம்பாட்ட போர்க்கலையை கம்யூனிஸ்டுகள் கையிலெடுத்து சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்கள். அதை நிறுவவே கந்தசாமி பாத்திரம் நாவலில் சேர்க்கப்பட்டது.

‘களிக்கம் போடுவது’ பற்றி. அதாவது நிலச்சுவான்தார்கள் தம் கீழ்ப்படியாதவர்களை தண்டிக்கும் முறை பற்றி நாவலில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தண்டிக்கப்படுகிற ஆண் / பெண் ஆடைகள் கழற்றப்பட்டு கை, கால்கள் பின்பக்கம் கட்டப்பட்டு உடலில் ஒன்பது வாசல் வழியே மிளகாயும் உப்பும் அரைத்த கலவை செலுத்தப்படும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?

சந்தித்துள்ளேன். அவர்களை பேட்டியும் எடுத்துள்ளேன். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இம்முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். என் தாத்தா ஒருவர் நிலச்சுவான்தாரர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தக் காலத்திலேயே சாதியப் பாகுபாடின்றி அனைவரையும் சமமாகப் பார்த்துள்ளார். பிற இன மக்கள் வீடுகளில் அமர்ந்து சமமாக சாப்பிட்டுள்ளார். எல்லா இனப்பெண்களுடனும் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார். அதனாலேயே இப்பாதிப்புக்கு உள்ளானார்.

கீழ்வெண்மணிச் சம்பவத்தை மையக்கருவாகக் கொண்டு 1975இல் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் குருதிப்புனல் எனும் நாவலை வெளியிட்டார். அது அப்போதே சாதக. பாதகமான கருத்துக்களைப் பெற்றது. அந்நாவல் படைப்பு பற்றி தங்களின் கருத்தென்ன?

பிராய்டிசத்தை மையமாக வைத்து இந்நாவலை அவர் எழுதியுள்ளார். அந்நாவலின் கதைப்பாத்திரமான அதாவது கீழ் வெண்மணிச் சம்பவத்தில் மூலகர்த்தாவான கோபால கிருஷ்ண நாயுடுவிற்கு ஆண்மைத்தன்மை இல்லாததால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அந்த 44 பேர் சாவிற்குக் காரணமாக அவர் இருந்திருக்கலாம் என்பது இ.பாவினுடைய கற்பனை. இந்த விஷயத்தை நான் அவரிடமே கேட்டேன். அவர் தந்த பதில் என்பது ‘இந்தச் சம்பவத்தை யாருமே பேசவில்லை என்பதால் அதை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதணும்னு ஆசைப்பட்டேன். நாவல் முழுக்க கற்பனைதான்’ என்றார்.

ஆனால் என்னிடம் ஒப்புக் கொண்ட இக்கருத்தை வெளியிலும் சொல்வாரா என்பது எனக்குத்தெரியாது. அடுத்து அவர் சொன்னது. ‘நானும் கம்யூனிஸ்டுதான். ஆனால் போராட்டமும் புரட்சியும் மக்களுக்குள்ளிருந்து வரவேண்டுமேயழிய வெளியிலிருந்து உள்ளுக்குப் போகக் கூடாது’ என்பது. கோ.கி.நாயுடு திருமணமாகாதவர்தான். மக்கள் சொன்ன கருத்துப்படி ஆண்மையற்றவரல்ல; பல பெண்களுடனும் பாலியல் உறவு கொண்டிருந்துள்ளார்.

திருமணம் தன்னிச்சையான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என்பதால் செய்து கொள்ளவில்லை என்றே என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. இ.பா. தம் நாவலில் காட்டியுள்ளபடி கோ.கி.நாயுடுவிற்கும் தி.மு.க. மந்திரிகளுக்கும் தொடர்பில்லை. அவர் பண்ணையார்களுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்தார்.

இ.பா. சொன்னதற்கு மாறாக கீழைத்தஞ்சையில் ‘உழவர் கிளர்ச்சி / போராட்டம் மக்களுக்குள்ளிருந்து கனன்ற ஒன்று.’ சிவா எனும் பாத்திரப்படைப்பின் மூலம் சாதீய சமரசத்தை உள்ளடக்குவதற்காக மேல்சாதியிலிருந்து அக்கறையுடன் கீழிறங்கி வந்து இப்பிரச்சினையை அணுகுவதாகக் காட்டுகிறார். அதற்கு நேர் எதிராக உள்ளூர்க்காரார்களையும் கம்யூனிஸ்டுக்காரர்களையும் மோசமாகக் காட்டியிருப்பார்.

கோ.கி.நாயுடு எனும் பாத்திரத்தை தெளிவாக இ.பா. படைக்கவில்லை. கோ.கி. நாயுடுவின் மறுமுகத்தைப் பார்க்க வேண்டும். அவர் குடிக்க மாட்டார். பிறரைக் குடிக்க வைப்பார். பொதுவாக பெரிய ரௌடிகள் குடிக்க மாட்டார்கள். தன் கீழ் உள்ளவர்களைக் குடிக்க வைப்பார்கள். கோ.கி. நாயுடு, தலித்துகளின் சிறுதெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவேயில்லை. குடியானவர்கள், தலித்துகள் எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் மாரியம்மன். மேல் சாதிக்காரர்களின் கடவுள் ஈஸ்வரன். இவற்றையெல்லாம் இ.பா. விட்டுவிட்டார்.

கீழ்வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் வர்க்கப்போராட்டமல்ல எனச் சொல்லவே இ.பா. விரும்பியுள்ளார். கோ.கி.நா. அடிப்படையில் ஆதிக்க மனோபாவம் கொண்டவர். யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அனைத்து வகை சாதிகளைச் சார்ந்த பெண்களையும் தன்னுடன் பாலுறவுக்கு உட்படுத்தியுள்ளார். தன் குடும்பத்திற்குள்ளேயே தாம் விரும்பிய பெண்ணை அடையும் வழியை வகுத்து விடுவார். காங்கிரஸ் சார்பாக இருந்தாலும் கட்சியிலிருப்பவர்கள் இவரை எதிர்த்தால் அதையும் மீறிப்போவார்.

கதைகள்/நாவல் எழுதத் தொடங்குவதற்கான உந்து சக்தி?

நான் எழுதத் துவங்குவதற்கு முன்பு தஞ்சாவூர் வட்டாரத்திலுள்ள படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். இதில் என்னவொரு மோசம் நடந்துள்ளதென்றால் தஞ்சைப் படைப்பாளிகளின் ஒட்டுமொத்த இலக்கியப் பார்வையில் நெல்லை உற்பத்தி செய்கின்ற ‘உழவர் வாழ்க்கை’ எதிலுமே பதிவு செய்யப்படவில்லை.

இந்த விஷயம்தான் என்னைப் பாதித்தது. வயலில் இறங்கி வேலைபார்த்த சிறு நிலவுடைமையாளனும் அவனை நம்பியுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் பதிவாகவில்லை. தி.ஜாவின் ‘அம்மா வந்தாள்’ கதையில் ஓரிடத்தில் ஒரு உழைப்பாளி சும்மா வந்து நிப்பார். அதுவும் ஒரு சோரம் போன விஷயத்துக்காக.

எழுத்தில் கூட ஒரு மேட்டிமைத்தனம் இருப்பதை உணர்ந்தேன். விடுபட்ட இந்த இடத்திற்கான காரணம் என்னவென்று பலரிடம் கேட்டேன். யாருமே சரியான பதில் சொல்லல. நீ வேணா எழுதிப்பாரேன்னு ‘நையாண்டி’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பிறகுதான் எழுதத் தொடங்கினேன்.

தொடக்கத்தில் யாரும் ஆதரவு தரல. தி.ஜா மாதிரி எழுத நினைச்சு சரிவராமப் போயிட்டு. அது எனக்கு ஒத்துவராத விஷயமாகப் போயிட்டு. இனிமே எழுதுவதற்கான களமாக என் ஊரை மட்டுமே கொள்வது என்று முடிவெடுத்தேன். ‘மண் உருவங்கள்’ன்னு ஒரு தொகுதி முதன் முதலில் வெளியிட்டேன். எழில் முதல்வனும், பாலாவும்தான் முதன் முதலில் அதப் படிச்சிட்டு தஞ்சை எழுத்து வட்டத்துல ஒரு புதிய தளம் வெளில வந்திருச்சுன்னு சொன்னாங்க.

பிறகுதான் நான் போறது சரின்னு நினைச்சேன். அந்தக் காலத்துல ஒரு பொழுதுபோக்காக ‘குருதிப்புனலை’ படித்துள்ளேன். அப்பவெல்லாம் ஒரு தாக்கமும் மனசில இல்ல. ஆனால் அதற்கு முன்பே நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது வெண்மணிச் சம்பவம் நடந்திச்சு. அதுதான் எனக்கு உடனடி உந்து சக்தியாயிருந்துச்சு.

தங்கள் செந்நெல் நாவலில் இரு கலப்பு மணங்களைச் செய்துள்ளீர்கள். செல்வி (உழைக்கும் வெள்ளாளர்) கண்ணுச்சாமி (தலித்) ஜோடி; வேம்பு (மேல் சாதி / தட்டு) (நாயுடு) சிங்காரம் (தலித்) ஜோடி இங்கு மேல்சாதி இனப்பெண்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆணை மணப்பதாகக் காட்டியுள்ளீர்கள். இது கீழ் நிலை. மேல்நிலை ஒருங்கிணைவு. இதையே இ.பா குருதிப்புனலில் காதலைத் திருப்பிப் போடுவார்.

ஐயங்கார் பெண், நாயுடு ஆணை மணப்பதாகக் காட்டியிருப்பார். நீங்கள் தொடக்கத்தில் தி.மு.க பின்னணியில் இருந்து வந்துள்ளதாகச் சொன்னீர்கள். திராவிட இயக்கக்காரர்கள் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் காதல் திருமணங்கள் சமூக விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறீர்களா?

இல்லை. காதல் திருமணங்கள் சாதிகளை உடைக்கும் ஒரு கருவியாக இருக்கலாம். ஆனால் முழுமையான சமூக விடுதலையைத் தரும் என்று கட்டியங்கூற முடியாது. காதல் திருமணங்கள் இரண்டு, மூன்று சாதிகளைத் திரட்டி ஒரு வர்க்கத்தை உருவாக்கலாம். சாதிகளிடையேயான இறுக்கத்தை உடைக்கலாம். சமூக விடுதலைக்கு வழிவிடுமா? என்பது போகப் போகத்தான் தெரியும். இது ஒரு வர்க்கப் போராட்ட நாவல். ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பானதோ சமூக சார்பானதோ அல்ல. சமூகக் கட்டுமானத்தில் கீழிலிருந்து வர்க்கம் மேலெழும்புகிற process தான் மையப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக நாவலாசிரியர்கள், அவர்கள் நாவல் பற்றி...

தி.ஜானகிராமனின் நாவல்கள் குறிப்பாக மோகமுள் கதையம்சம் பொருந்திய நாவல். காவிரி சமவெளியின் மேட்டுக்குடிகளின் கலைநுட்பச் செய்திகள், பண்பாட்டுக் கூறுகள் அவற்றின் சரிவுகளை இவர் அளவிற்கு வேறு யாரும் செய்யவில்லை. ஆனால் சமூக அக்கறை கொண்ட நாவல் என்று சொல்ல முடியாது. மௌனியின் சிறுகதையெல்லாம் படிச்சிங்கன்னா புதுமைப்பித்தனெல்லாம் அப்புறம்தான்.

பு.பித்தன் சில தளங்களை விஸ்தாரப்படுத்தியுள்ளார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் மௌனி ஒவ்வொரு சிறுகதைகளையும் சமூகத்தோட உள் கட்டுமானத்தை உள் வாங்கி இறுக்கமா மனசுக்குள்ள வச்சிருக்கார். குடை என்ற ஒரு கதை நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் மூவருமே சமூகத்தை அக்கறையுடன் பார்த்தவர்கள் என்று சொல்ல மாட்டேன். இப்போது சமூக அக்கறையுடன் நிறையபேர் எழுத வருகின்றனர்.

வர்க்கப்போராட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் சிறப்பானது தொ.மு.சியின் பஞ்சும் பசியும். தமிழில் எழுதப்பட்ட எல்லா வார்க்கப் போராட்ட நாவல்களும் ரஷ்ய நாவல்களின் பாதிப்பால் எழுதப்பட்டவை. தமிழில் எழுதப்பட்ட வர்க்கப்போராட்ட நாவல்கள் எல்லாத்துக்கும் ஒரு ரஷ்ய மூல நாவலைச் சொல்லலாம்.

செந்நெல்லிற்கு அப்படி ஒரு மூலத்தைச் சொல்ல முடியாது. பின் நவீனத்துவக் கூறுகளை உள்வாங்கிய நாவல் இது. இது மொழிநடையில் மாற்றம் செய்துள்ளேன். கட்டமைப்புக் காட்சி முறையை நான் பின்பற்றவில்லை. கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட செய்திகளினடிப்படையில் எழுதப்பட்டது செந்நெல்.

சந்திப்பு: முனைவர் கி.இரா.சங்கரன் | ஒருங்கிணைப்பு: சண்முகம் சரவணன்

- சோலை சுந்தரபெருமாள்

Pin It