பெண்களின் சிக்கல்கள் என்று பேசப்படும் போது அவற்றிற்குக் காரணமான சமூக அமைப்பு, குடும்ப நிறுவனம், அதிகாரம், ஆதிக்க உடைமை, மனப்போக்குகள் ஆகிய ஆண் நிலைப்பாடுகள் முதன்மையாகின்றன. தனுஷ்கோடி ராமசாமி பாதிக்கப்பட்ட பெண்களின் நடப்பியல்புகளை அவர்களின் தன்மை மாறாமல் தனது புனைகதைகளில் சித்தரிக்கிறார். சமூகத்தில், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றைப் புரட்சி சிந்தனைகளாக வெளிப்படுத்துகிறார். த.ராவின் புனைகதைகளில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.பெண்ணிய நிலைகளன் சிறுகதைகள்
ரோஷம், ரெட்டியார் சத்திரம், பரவசம், சுதந்திரம் சிறையிலே, அழகின் ரகசியம், தடங்கள், சேதாரம், கந்தகக் கிடங்கிலே, சூரசம்ஹாரம், இளையநிலா, அன்புள்ள, தரகன்பாடு, நேசம், சேதாரம், சைத்தான்களின் வேதம், தேவதைகள் தழுவினார்கள். வழிகள், புதிய பூ முதலிய சிறுகதைகள் சமகாலப் பெண்களின் நிலை பற்றிய த.ராவின் பதிவுகளாக அமைகின்றன.
குடும்ப நிர்வாகம்
சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் குடும்பங்கள் மேன்மையுற வேண்டும். நிறை, குறைகள் பகுத்தறிந்து உறவுகளை ஒருங்கிணைத்து, குடும்பங்களைக் கட்டுக்கோப்போடு கொண்டு செல்ல வேண்டும். அதில் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். கிராமப்புற பெண்கள் தங்கள் சூழலுக்கு ஏற்பக் குடும்பப் பொறுப்புகளோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தடங்கள், இளையநிலா, ரெட்டியார்சத்திரம் ஆகிய கதைகளில் இதனை வெளிப்படுத்துகிறார்.
இளையநிலாவில் ஆவடத்தாய் மிகுந்த மனவேதனையில் இருக்கிறாள். அச்சூழலிலும் தன் குடும்பத்தை எண்ணி ஏங்குகிறாள்.
ஆவடத்தாய், அண்டை வீட்டாருடன் நடந்த சண்டையில் கைது செய்யப்படுகிறாள். காவல் நிலையத்தில் காவல் துறையினர் அவளைச் சீண்டுவதும், அத்துமீறுவதுமாக நடந்து கொள்கின்றனர். அவர்களைக் கண்டிக்கிறாள். லாரி ஓட்டுனரான தன் கணவனை எண்ணி வேதனைப்படுகிறாள். "இந்த அர்த்த ராத்திரியிலே எந்த பூமியிலே நீங்க லாரிய ஓட்டிட்டுப் போறீங்களோ, மத்த டிரைவர்களைப் போல எந்த தப்பான பழக்கத்துக்கும் போக மாட்டீங்க..... எஞ்சீமான்.... படிக்காச வச்சு நல்லா சாப்பிடுங்கண்ணா அதுவும் கேக்க மாட்டீங்க. நாலு காசு சேத்து வச்சாத்தானே..... நாளைக்கு நம்ம புள்ளைய நல்லாப் படிக்க வச்சு நல்ல நெலமைக்குக் கொண்டு வரலாம்ணு சொல்லிருவீங்க..." (ப.182) என்று கணவன் மற்றும் மகனை நினைத்து அவள் மனம் கொதித்தது என்கிறார் த.ரா. வாழ்வின் துயரநிலையிலும் குடும்பத்தை எண்ணி வருந்தும் பெண்களின் உளப்போக்கு சித்தரிக்கப்படுகிறது.
பெண்களின் ஆளுமைத்திறம்
பெண்ணிற்குத் தோன்றுகின்ற எண்ணம், அறிவாற்றல், குறிக்கோள்,இலட்சியம், உணர்ச்சி ஆகியவற்றின் தொகுப்பிலிருந்து அவளுக்கு ஏற்படும் தனித்துவத்தைப் பெண்ணின் ஆளுமைத் திறன் எனலாம். விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் முதலியன பெண்களுக்கு உரியன. ரோஷம், பரவசம், அழகின் ரகசியம் முதலிய கதைகள் பலவீனத்தால் எழுச்சி பெற்று இலட்சியத்திற்காகப் போராடும் பெண்களை எடுத்துக்காட்டுகின்றன.
ரோஷம் சிறுகதையில் மாரியம்மாளின் கணவன், வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறான். மாரியம்மாளிடம் விவாகரத்துக் கேட்கிறான். ஜீவனாம்சம் கொடுப்பதைப் பிச்சையிடுவதாகக் கூறி மாரியம்மாளை அவமானப்படுத்துகிறான். அதற்குப் பதில் கடிதமாக மாரியம்மாள், “அவன் மாட மாளிகையும், தோட்டம்துறவும், கொடுத்தாலும் அவனுடைய நீசக்கல்வி, விபச்சார சட்டத்தினாலே தேடின அவன் சொத்து எனக்கோ நான் பெத்த செல்வங்களுக்கோ வேண்டாம்.." (ப-77) என ஆவேசப்படுகிறாள். வீணடித்தவன் முன்பு வாழ்ந்து காட்ட முடிவு செய்கிறாள்.
அழகின் ரகசியம் சிறுகதையில், தோல்வியிலிருந்து பிறக்கும் இலட்சிய நோக்குடைய ஒரு பெண்ணின் சூளுரை அமைந்துள்ளது. ருக்மணி ஓர் ஆசிரியை. காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றவள். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடன் பணியாற்றிய தமிழாசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு ஏற்படுகிறது. அவரிடம் தன் நிலையைக் கூறுகிறாள்.
பிள்ளைகளை அவர் நிழல்
'நான் சும்மாவிடப் போறதில்ல. என் செல்லப் கூடப்படாம வளப்பேன். ரொம்ப உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவேன் நானும் பட்டப்படிப்பு படிச்சு, சட்டம் படிப்பேன். நான் கேஸ் போட்டு, நானே அவரோட வக்கீல் நாணும்படி வாதாடி, ஜெயிச்சு அவர எங்காலடியில் விழச்செய்வேன்" (பக்-487) எனக் குமுறுகிறாள்.
த.ராவின் கதைகளில் கணவனால் நிராகரிக்கப்பட்ட பெண்கள், தங்கள் எதிர்காலத்தை வெறும் வாய்ச்சண்டையால் தீர்மானிக்கவில்லை. உணர்வு மரித்து வாழாமல் நியாயத்திற்காக எதிர்த்துப் போராடுகின்றனர். உணர்வு கலந்து எதிர்காலச் சிந்தனைகளை இருத்தும் ஆளுமையின் விரிவும், ஆவேசப் புலப்பாடும் கொண்ட பெண் மாந்தர்களை த.ரா.இக்கதைகளில் எடுத்துக்காட்டுகிறார்.
தாய்மையுணர்வு
தாய்மை என்பது இணையில்லாத உன்னத உயர்நிலை, மாசற்ற அன்பினை அள்ளி வழங்குகின்ற அட்சயப்பாத்திரம், நிலைத்த பேறுடைய உயர் குணமாகும். பெண்களின் இத்தகைய உயர் குணங்களைப் பகுத்துணர்ந்து, த.ரா. தன் படைப்புகளில் காட்டுகிறார். சுதந்திரம் சிறையிலே மற்றும் கந்தகக் கிடங்கிலே போன்ற கதைகள், தாய்மையின் மேன்மையினை விளக்கிச் சொல்கின்றன. சுதந்திரம் சிறையிலே கதையில் ஆசிரியர் முத்துப்பட்டன் போராட்டக் குழுக்களோடு சிறையில் அடைக்கப்படுகிறார். அச்சமயம் கோரைப்பள்ளம் கிராமத்தில் இருந்த அவர் தாய் இறந்து விட்டதாகச் செய்தி வருகிறது. தன் தாயை நினைத்து முத்துப்பட்டன் அழுகிறார்.
“அம்பது, அறுபது ஊர் மாடுகளை மேய்ச்சு எனக்குக் கஞ்சி ஊத்தி வளர்த்தாளே... எங்க ஆத்தா... எத்தனை தடவ புஸ்தகம் பீஸ்கட்டன்னு எங்க ஆத்தா வாத்திமாருக, கால்களிலே நெடுஞ்சாங்கிடையா விழுந்திருக்கா.. கையெழுத்து வாங்கக் கணக்குப்பிள்ளை கால்லே, ரெவென்யூ இன்ஸ்பெக்டர் கால்லே... விழுந்தாளோ... என்னப் படிக்க வச்சு ஆளாக்க... ஊர்லே எடுத்த பல சோறு என் ஒடம்புக்கு ஆகாதுன்னு ஆழாக்கு அரிசி தேடி தனி ஒல வச்சு சோறு பொங்கிப் போட்டியே... ஆத்தா” (ப-235) என்று தோளில் தொங்கிய துண்டைக் கைகளில் அள்ளி, அதிலே முகம் புதைத்து அழுகிறார்.
வரதட்சணைக் கொடுமை
பிராமணப் பெண்களுக்கு நேரும் அவலநிலையினை எதிர்த்து த.ரா கோவில் நிகழ்ச்சியில் பேசுகிறார். அதனைக் கேட்ட முருகனூர் கோவில் பட்டர், பிராமண சமூகத்திற்கு அரசு சலுகைகள் இல்லாததால் பல குடும்பங்கள் வறுமையில் வாழும் நிலை ஏற்படுகிறது. ஏழை பிராமணப் பெண்களின் வாழ்க்கையில் வேலை, திருமணம் என்பது கனவாகவே இருக்கின்றன, பெண்கள் தவறான வழிக்குப் போகும் நிலையும் உருவாகிறது என்று கூறுவதாக ஆசிரியர் த.ரா குறிப்பிடுகிறார்.
வரதட்சணையால் பெண்களுக்கு ஏற்படும் துயர நிலையினை சூரசம்ஹாரம், அன்புள்ள, தரகன்பாடு மற்றும் பரவசம் முதலிய சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன.
மேலும்.. உங்களை அந்தப் பகவானாகவே நம்பிச் சொல்கிறேன்... எம் பொண்ணை நான் விபச்சாரியா அலைய விட சம்மதிக்கலே... அதனாலே... அதனாலே... ஏங்கி ஏங்கி மூச்செறிந்து பேச முடியாது திண்டாடி விழிகள் பிதுங்கி நீர் சொரிந்தார். எனக்கு தலைச்சன் ஆண் பிறந்தவுடனே.. கும்பகோணம் மகாமகத்துக்குப் போய்ட்டு வர்றேன்னு என் ஆத்துக்காரிக்கிட்ட பொய் சொல்லிட்டு... தேனிக்குப் போய் குடும்பக் கட்டுப்பாடு... வாஷக்டமி ஆபரேஷன் பண்ணிட்டேன் என்று தட்டுத் தடுமாறி கூறுகிறார்.
பெண்ணுக்குத் திருமணம் என்றால் வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பதனை இச்சமூகம் வரித்துக் கொண்டுள்ளது. வரதட்சணை கொடுக்க வழியின்றித் திருமணம் நடக்காமல் பெற்றோர்களுக்குத் தலைக்குனிவு ஏற்படுகிறது. பிறகு பெண்ணின் வாழ்க்கை உருக்குலைந்து விடுகிறது. இதற்குப் பயந்து பெண் குழந்தையே வேண்டாம் என முடிவு எடுக்கும் பட்டர் போன்றவர்களின் செயலும், மனநிலையும், வரதட்சணைக் கொடுமையின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.
பெண்கள் போகப்பொருளாக்கப்படுதல்
சேதாரம் கதையில் வருகின்ற ராமுத்தாய், அவள் சகோதரி சீதா, இருவரும் தீப்பெட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். அங்குள்ள ஆண்கள் பற்றி ராமுத்தாய், “தீப்பெட்டி ஆபீஸிக்கு வேலைக்கு வர்ற பெண்கள் எல்லாம் பெரிய முதலாளி, சின்ன முதலாளி, கணக்குப்பிள்ளைகள்.... எல்லாப் பயல்களும் என்கிறாள். எல்லாத்துக்கும் உடன்படனும்ணு அலைறாங்க..." (ப.206)
அவளுடன் வேலை பார்த்த கோபால் நேர்மையாளன். சீதாவை விரும்புகிறான். திடீரென ஒருநாள் கோபாலை அழைத்த அவன் முதலாளி அவனிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து சீதாவை ஒருநாள் தனக்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறுகிறார். அப்படிச் செய்தால் மேலும் பல சலுகைகள் அளிப்பதாகவும் கூறுகிறார்.
வேலை செய்யும் இடங்களில் உள்ள ஆண் தொழிலாளர்கள், அங்குள்ள பெண்களைச் சீண்டுவது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஆசைக்கு மறுக்கும் பெண்களைத் துன்புறுத்துவதோடு வேலை நீக்கமும் செய்து விடுகின்றனர். இவ்வாறு பெண்களைப் போகப் பொருளாக எண்ணுவதால் பணியிடங்களில் பெண்களுக்கு அச்சமும் பாதுகாப்பற்ற நிலையும் உருவாகின்றன.
கந்தகக் கிடங்கிலே சிறுகதையில் பூமாலை, தன் மகனுக்குக் காய்ச்சல் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறாள். வரும் வழியில் நடக்க இயலாமல் மூடிக்கிடந்த பெட்டிக்கடை முன் அமர்ந்திருக்கிறாள். இவளைக் கண்ட கடைக்காரனிடம், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அண்ணாச்சி என்கிறாள். அதற்கு அவன் பனியாக இருக்கிறது உள்ளே வா என்கிறான். அவன் கண்ணும் பேச்சும் அசிங்கத்தை மிதித்தது போல் இருந்ததாகப் பூமாலை உணர்கிறாள். உடனே தன் மகனை வாரிச் சுருட்டி மார்போடு அணைத்துக் கொண்டு வெளியேறுகிறாள். பெண் என்றாலே போகப்பொருள் என வரித்துக் கொண்ட ஆண்களின் அவச்செயலைத் த.ரா.தம் சிறுகதைகளில் சுட்டிக்காட்டுகிறார்.
பாலியல் வன்கொடுமை
பெண் உரிமைப் போராட்டங்கள் சமூக மாற்றத்திற்கு ஏற்பத் தங்களது கோரிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றன. சமூக நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஏழைப் பெண்கள் இக்கொடுமைகளுக்கு ஆளாகும் பொழுது, வசதிபடைத்த பதவியில் இருக்கும் ஆண்களை, எதிர்க்கத் துணிவின்றி தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர் அல்லது மன உளைச்சலோடு வாழ்க்கை நடத்துகின்றனர். பெண்ணினத்திற்கானப் பாதுகாப்புச் சட்டங்கள், இறுக்கப்படுதலின் அவசியத்தைத் த.ரா.வின் கதைகள் உணர்த்துகின்றன.
இளையநிலா, நேசம், சைத்தான்களின் வேதம் போன்ற சிறுகதைகள், பெண்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளை எடுத்துரைக்கின்றன.
இளையநிலா கதையில், ஆவடத்தாய் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவரப்படுகிறாள். அவளது வடிவழகு, வெள்ளை நிறம் வரிசையான அழகான பற்கள், அகன்ற விழிகள், வறுமையைத் தாண்டி பொங்கிநிற்கும் இடையழகில் தலைமைக் காவலர் மயக்கம் கொள்கிறார். விசாரணை என்ற பெயரில் அவள் காவல்துறையினரால் கற்பழிக்கப்படுகிறாள். அங்கு ஓர் அறைக்குள் தள்ளி விடுகின்றனர். அங்கிருந்த அந்தப் பெரிய மனிதன் முகம் சிவந்து, கூறிட்டு நிற்கும் வெறிப் பார்வையோடு புகைமண்டலத்தில் இருப்பது தெரிந்தது. அந்த அறை முழுவதும் நவநாகரீகப் படுக்கைகள், திரவிய வாசனை, ஓவியங்கள், அழகுப் பொருள்கள் என நிறைந்திருக்கின்றன.
அது அதலபாதாள சுடுகாடாகவும், அவன் பிணந்தின்னும் கோரப் பிசாசாகவும்.... வாசனைகள் சகிக்க முடியாத அழுகிய பிண நாற்றமாக அவள் உடல், உள்ளம் முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியது. ‘ஓ' வென அலறிக்கொண்டு வெறி பிடித்தவளைப் போல வெளியே பாய்ந்தாள். கூந்தலை இறுகப் பற்றி இழுத்து இரண்டு போலீஸ்காரர்களும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து பெட்ரூமுக்குள் போட்டுப் பூட்டினார்கள்' (பக் 183,184) என இக்காட்சி சித்தரிக்கப்படுகின்றது.
காவல் துறையும், நீதிமன்றங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கும், பாதுகாப்பு அளிப்பதற்கும் அமைக்கப்பட்டதாகும். அபலைப் பெண்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் இவர்களே சட்டத்தின் முன் குற்றவாளிகள் ஆவர். மக்களால் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
பெண்ணடிமைத்தனம்
சின்னம்மா, நர்சரிப் பள்ளியில் ஆயா வேலை பார்க்கிறாள். இருபத்து மூன்று வயதில் விதவையாகி, அண்ணன் வீட்டில் தங்கி இருக்கிறாள். பள்ளிக்கூடத்தைப் பெருக்குவது, தண்ணீர் எடுத்து வைப்பது, குழந்தைகளைக் கவனித்து கொள்வது என எடுபிடி வேலைகள் அனைத்தையும் செய்கிறாள். ஓய்வில்லாத உழைப்பு, மாதம் முப்பது ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். பத்து ஆண்டுகள் கழித்து எழுபத்து ஐந்து ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள். இதுதான் இன்றைய பெண்களின் நிலையாக உள்ளது. உழைப்பிற்கேற்ற ஊதியம் பெண்களுக்குச் சரிவரக் கிடைக்கவில்லை.
'தேவதைகள் தழுவினார்கள்' சிறுகதையில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் எதிர் வீட்டில் உள்ள பெண்ணின் திருமண வாழக்கை பற்றிப் பேசப்படுகிறது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் அவள் அடிக்கடி தாய் வீட்டிற்கு வந்து விடுகிறாள். அவளின் நிலையை ஆசிரியர்,
...அந்தப் பெண்ணும் அந்தப் பெண்ணின் பெற்றோரும்......அந்த மாப்பிள்ளை குடும்பத்திற்கு பயந்து அவர்கள் பின்னால் ஓடறதும்....அவர்கள் பாதங்களுக்குப் பூஜைகள் செய்து திரியறதும்....பெரிய கொடுமை. இதைவிடப் பெருங்கொடுமை....மாறி மாறி பிறந்த வீட்டிற்கு அந்தப் பெண் கண்களைக் கசக்கிட்டு வந்து ஏங்கி அழுவது (ப.403) எனக் குறிப்பிடுகிறார். பெண் வீட்டார், வசதிபடைத்தவர்களாக இருப்பினும் மாப்பிள்ளையின் குடும்பத்திற்கு பயந்து அடிமைப்பட்டு வாழ்கின்றனர். அத்துடன், அவள் மன அதிர்விற்கு ஆளாகிறாள். பயம் பிடித்து, நடை பிணமாகிறாள். கடைசியில் விடுதலையாகி பிறந்த வீட்டிற்கு நிரந்தரமாக வந்து விடுகிறாள்.
கனவுகளோடு மணவாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கும் பெண்ணின் எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றன. பிரச்சனைகளை சமாளிக்கும் வழி அறியாது, மன அமைதி வேண்டி தாய் வீட்டிற்குச் செல்கிறாள். ஆண்களால் அடிமைப்படுத்தப்படும் பெண்களின் துயரநிலையை ஆசிரியர் தம் கதையில் எடுத்துரைக்கிறார்.
ஆண்களால் பெண்கள் வஞ்சிக்கப்படுதல்
வழிகள் சிறுகதையில், அல்லி காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்று வருகிறாள். விடுமுறைக்காகக் கிராமத்திற்கு வருகிறாள். பேருந்து பயணத்தின் போது எழுத்தாளன் வெண்ணிலவன் நட்பு கிடைக்கிறது. ஒவ்வொரு சந்திப்பின் போதும் சங்க இலக்கியம், நவீன இலக்கியம், கவிதைகள், நாவல்கள் பற்றிப் பேசுகிறான். நாளடைவில் அல்லியின் அழகை வருணிக்கத் தொடங்குகிறான். காதலிப்பது போல் நடித்து அவளை அடையத் திட்டமிடுகிறான். இறுதியில், கண்ணகி, கோவலன் ஒப்புமைகளோடு அவள் வாழ்க்கையைச் சீர்குலைத்து விடுகிறான். அல்லி கர்ப்பமடைகிறாள். வெண்ணிலவனைத் தேடி அலைகிறாள். அவன் யாரிடமும் சொல்லாமல் தங்கியிருந்த அறையைக் காலி செய்து விட்டு எங்கோ சென்று விடுகிறான். அல்லி தற்கொலைக்குத் துணிகிறாள்.
ஆண்களின் நயவஞ்சகச் செயலை அறியாத பெண்கள் கற்பினை இழந்து சமூக மதிப்பிழந்து அல்லலுறுகின்றனர். "திருமணமாகாமல் கன்னித்தன்மை இழந்துவிட்ட பெண் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும் நீதி விசாரணையின் அக்யூஸ்"டு நெ.1 ஆக நிற்பது அவளது கற்பின்மையே! காமம் புருஷலட்சணம்." (1997:21) என மைதிலி சிவராமன் குறிப்பிடுகின்றார். இழந்த கற்பிற்காகப் பெண்கள் நீதிமன்றங்களுக்குச் சென்றால் மிஞ்சுவது அவமானமே ஆகும்.
முடிவுரை
த.ரா.வின் சிறுகதைகளில் பெண்கள் விடா முயற்சியும், கடுமையான உழைப்பும் கொண்ட குடும்பத் தலைவிகளாகத் திகழ்கின்றனர்.
எதிர்காலச் சிந்தனைகளைகளோடு இருந்தும் சிறந்த ஆளுமைப்பண்பு மிக்க பெண்மாந்தர்களை த.ரா தம் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை தம்படைப்பில் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
வரதட்சணைக் கொடுமைக்குப் பயந்து பெற்றோர் பெண் பிள்ளைகளை வெறுப்பதும், பெண்கள் முதிர்கன்னியாகிப் போகும் நிலையின் கொடுமையையும் த.ரா.தம் கதைகளில் பதிவுசெய்துள்ளார்.
பெண் என்றாலே போகப் பொருள் என்று எண்ணும் ஆண்களை தம்கதைகளில் ஆசிரியர் சாடியுள்ளார்.
பாலியல் வன்கொடுமையையும், பெண்ணடித்தனத்தையும், பெண் ஆண்களால் வஞ்சிக்கப்படுவதையும், ஆணாதிக்கத்தையும் தம் கதைகளில் சுட்டிக்காட்டி தம் எதிர்ப்பைப் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
துணைநூற்பட்டியல்
1. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகள், இரா.காமராசு, 2008
2. தமிழகராதி, தமிழப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முனைவர் பெ.மாதையன், 1997
3. பெண் ஏன் அடிமையானாள்?, ஈ.வெ.இராமசாமி, 2019
- கா. சத்தியா, இணைப்பேராசிரியர்,முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளின் கலைக் கல்லூரி(த), மதுரை.
& முனைவர் சு.சந்திரா, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளின் கலைக் கல்லூரி(த), மதுரை.2