ஆய்வுச்சுருக்கம்
சமூகத்தினரால் பெண்களுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ள நடத்தைக் கூறுகள், பண்புகள், கடமைக்கூறுகள் ஆகியவற்றைப் ‘பெண்மை’ என்று வரையறுக்கலாம். பெண்ணின்மீது கலாச்சார ரீதியாக ஏற்றி வைக்கப்படும் சில பண்புகள், சில நடத்தைகளைப் பெண்மை என்ற சொல் அடையாளப்படுத்துகின்றது. பெண் என்பவள், நாணத்துடனும் தலைகவிழ்ந்தும் அடக்க ஒடுக்கமாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆடவரின் முன்பாகச் சத்தமாகச் சிரிக்கக்கூடாது, கால்நீட்டி அமரக்கூடாது என்றும் பலவகையான பண்புகளைப் பெண்ணின்மீது இச்சமூகம் திணித்துள்ளது. குழந்தை எவ்வாறு சமூகவயமாக்கப் படுகிறதோ, சமய, சாதிய அடிப்படையில் வளர்க்கப்படுகிறதோ அதே போன்று, பெண்ணும் சமூகக் கட்டமைப்பிற்குள் பெண்மை எனும் பண்பாட்டு ரீதியான கடமைகளுக்கு அடிமையாக்கப்படுகின்றாள். இவற்றினடிப்படையில், பெண்மையின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்ற உடலமைப்பு, ஆடை அணிகலன்கள் குறித்தும் பெண்மை சார்ந்த சிக்கல்களைப் பற்றியும் ஆண்மை ஒ பெண்மை என்ற எதிரெதிர்ப் பாலினங்கள் குறித்தும் பெண்மையின் உணர்ச்சி வெளிப்பாடுகள் குறித்தும் கட்டமைக்கப்பட்ட மரபுகளும் மீறல்களும் மற்றும் சமூகத்தின் பண்பாட்டு அதிர்வுகள் குறித்தும் இராஜம் கிருஷ்ணன் (தமிழ்), மன்னு பண்டாரி (இந்தி) ஆகிய இருவரின் சிறுகதைகளின் வழியாக இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
முன்னுரை
தமிழின் முதன்மைச் சிறுகதைப் படைப்பாளியான இராஜம் கிருஷ்ணன், சிறந்த இந்திச் சிறுகதைப் படைப்பாளியான மன்னு பண்டாரி ஆகிய இருவரின் சிறுகதைகளில் இடம்பெறும் பெண்மை தொடர்பான சிந்தனைகள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன. இவ்விரு எழுத்தாளர்களும் சமூகச் சிந்தனையுடன் பல படைப்புகளை வழங்கியுள்ளனர். இருவரும் பெண்கள் முன்னேற்றமே இவ்வுலகத்தின் முன்னேற்றம் என்பதை உணர்ந்தவர்கள். நீண்டகாலம் இலக்கியத் துறைக்குப் பங்காற்றியவர்கள். இருவரும் பெண்ணிய உணர்வுநிலைகளிலிருந்து தத்தம் சிறுகதைகளை உருவாக்கியுள்ளனர். இராஜம் கிருஷ்ணனின் ‘களம்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மற்றும் இந்திச் சிறுகதையாசிரியர் மன்னு பண்டாரியின் மேரி பிரிய கஹானியா(ங்) (எனக்குப் பிடித்த கதைகள்) எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் ஆகியவை இக்கட்டுரைக்கான முதன்மை ஆதாரங்கள் ஆகும். 1950 - 80 களில் முன்னிலையில் இருந்த இவ்விருவரின் சிறுகதைப் படைப்புகளிலிருந்து, சமூகம் பெண்ணை - பெண்மையை எவ்விதம் கட்டமைத்தது, அதற்கான சூழல்கள் என்னென்ன என்பவற்றைச் சிந்திக்கலாம்.
பெண்மையின் அடையாளங்கள் - மரபும் மீறலும்
ஆண், பெண் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சுரக்கின்ற ஹார்மோன்களால் (ஆண்ட்ரோஜென், ஈஸ்ட்ரோஜன்) இருவருக்குமிடையே இயல்பாகவே வேறுபாடு நிலவுகின்றது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், ‘நவோமி வைஸ்டெய்ன்’ (Navomi Weistein) இக்கருத்தியலை மறுக்கின்றார். பெண்மை என்பது, ஓர் அடையாளம் சார்ந்த நடத்தையாக மட்டுமே கருதப்படுகின்றது. இது ஓர் உளவியல் ரீதியான கட்டமைப்பே தவிர, உடலியல் ரீதியானதன்று என்று குறிப்படுகின்றார் (Navomi Weistein 1971, pp.362-373).
ஆணுக்கான குணங்கள், பெண்ணுக்கான குணங்கள் ஆகியவற்றைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. பொருளதிகாரத்தில், அகத்திணையியல் தொடங்கிக் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் ஆகிய இயல்களில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பெண்களை உடல் சார்ந்தும, ஆடை அணிகலன்கள் சார்ந்தும் அடையாளப்படுத்தும் நிலைதான் சமுதாயத்தில் இன்றும் நிலவுகின்றது.
பெண்ணின் உடல்சார்ந்த அதிகாரம் பெண்களுக்கில்லை. அது ஆண்களுக்குத்தான் உண்டு என்ற அடிப்படையில் இன்றுவரையிலான பெண்ணின் நிலை அமைந்துள்ளது. பருத்த மார்பு, நீண்ட கைகள், பருத்த தோள்கள் ஆகியன ஆண்களுக்குரியன. நிலவு போன்ற முகம், ஒளி பொருந்திய நெற்றி, எள்ளுப்பூ போன்ற மூக்கு, மீன் போன்ற கண், வில் போன்ற புருவம், மாதுளைச் சுளையை ஒத்த பற்கள், சங்கு போன்ற கழுத்து, தாமரை மொட்டுப் போன்ற மார்பு, உடுக்கையை ஒத்த இடை, வாழைத் தண்டு போன்ற தொடை, நாயின் நாக்கு போன்ற பாதம், காந்தள் போன்ற மெல்விரல், மேகம் போன்ற கூந்தல், கிளி போன்ற பேச்சு, மயில் போன்ற சாயல், அன்னம் போன்ற நடை முதலியன பெண்களுக்குரியன.
‘உவமான சங்கிரகம்’ என்னும் பெயரால் மூன்று நூல்கள் உள்ளன. இவற்றின் காலம் முறையே 15,17,18 ஆம் நூற்றாண்டு. அதில் மகளிரின் முடிதொடங்கி அடிவரை உவமைகள் கூறப்பட்டுள்ளன. “கூந்தல், நெற்றி, புருவம், கண், முகம், காது, கபோலம், மூக்கு, இதழ், வாய், பல், கழுத்து, மொழி, தோள், முன்கை, அங்கை, கைவிரல், கைந்நகம், கொங்கை, கொங்கைக்கண், உதரம், உந்தி, மடிப்பு, உரோமக்கொடி, இடை, அல்குல், குறி, தொடை, முழங்கால், கணைக்கால், பரடு, குதி, புறவடி, கால்விரல், கால்நகம், கால், நடை, சாயல், மேனி, தேமல் என்னும் 40 உறுப்புகளுக்கும் உவமைகள் கூறப்பட்டுள்ளன’ (இரா.இளங்குமரன் 2006, ப.393). மேலும், பெண்களுடைய மொழிக்கு மட்டும் 14 உவமைகளும் மார்புக்கு 20 உவமைகளும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பெண்களின் உறுப்புகளுக்கு உவமை கூறுவதற்காகவே நூலை இயற்றியுள்ளனர். அந்தளவிற்குப் பெண்களை உடல்சார்ந்து ஆண்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
பெண்களின் உறுப்புகளின்மீது ஆணினத்திற்கு என்றைக்குமே தீராக் காதல் (மோகம்) உண்டு. பெண்ணின் உடல்மீதான ஆதிக்கத்தை, அரசியலை இன்றுவரை ஆண்கள் கைவிட்டபாடில்லை. ஏன் ஆடவர் உறுப்புகளுக்கு இவ்வாறு உவமைகள் தொடுக்கப்படவோ - தொகுக்கப்படவோ இல்லை? ஏனெனில், “நூல் இயற்றுதலைத் தம் கைப்பொருளாக வைத்திருந்த ஆடவர்க்கு, ஆடவர் உறுப்புகளை உவமைப் புனைவாக்கி உவகையெய்துதல் இன்பமாக இராமையால், இவ்வகை உவமைகளை எண்ணற்ற சிற்றிலக்கியங்களில் கூறிக்கூறித் தாம் பெற்ற இன்பத்தைப் பாட்டுடைத் தலைவரும் கேட்டு வருவோரும் எய்தச் செய்தனர்” (மேலது, ப.394) என்று இளங்குமரனார் கூறுகிறார். அதாவது, புலவர்கள் பெண்களின் உடலை வருணித்து வருணித்துத் தாங்கள் அடைந்த இன்பத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளனர்.
“தோல் தேய்ந்து
தொலைந்து போகும் வரை
கழுவுகிறேன் சபைக்குச் சரிப்படாத
என் கருப்பு நிறத்தை” (கருவறை வாசனை, ப.16)
என்ற கனிமொழியின் கவிதை, பெண் கருப்பாய்ப் பிறப்பதனால் ஏற்படும் துன்பத்தைப் பதிவு செய்துள்ளது. எப்படி நோக்கினும், பெண்ணுக்கு அழகு என்பதை மிகமிக இன்றியமையாததாய்த் திரும்பத்திரும்ப இச்சமூகம் வலியுறுத்துகின்றது. பெண்ணை ஓர் உயிரியாகவோ, அறிவாற்றல் நிரம்பிய ஒருத்தியாகவோ பார்ப்பதற்குத் தயாராயில்லை. அவளை ஓர் அழகுப் பதுமையாக்கிக் காட்சிப்பொருளாகக் ‘கொலு’ வைப்பதற்கே முப்பொழுதும் முனைகின்றது.
‘வெள்ளித்திரை’ என்ற சிறுகதையில், பெண்ணுக்கு அழகு என்பது முதன்மைப்படுத்தப்படும் விதத்தை இராஜம் கிருஷ்ணன் விவரிக்கிறார். “பதினேழு பதினெட்டு ஆண்டுகளுக்குமுன், அவளை மாலையிட்டு அவளை ஒரு மகவுக்கும் தாயாக்கியபின் அவளைவிடக் கவர்ச்சியையும் அழகையும் இன்னொருத்தியிடம் கண்டதால் அவளைப் புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டான், அவள் கணவன்” (ப.142). இவ்வாறாகப் பெண்ணின் உடலழகு முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது.
கருவாக உள்ளபோது, முதல் சில வாரங்களில் ஆண் குழந்தை என்பதற்கோ பெண் குழந்தை என்பதற்கோ எவ்விதமான பாலுறுப்பு வேறுபாடும் தெரிவதில்லை என மருத்துவம் குறிப்பிடுகின்றது. ஒரு குழந்தை பிறந்த உடனேயே பெண்ணுக்கான உடையைப் பெண் குழந்தைக்கும் ஆணுக்கான உடையை ஆண் குழந்தைக்கும் அணிவித்து, அப்பொழுதிலிருந்தே பால் வேறுபாட்டை அக்குழந்தைக்குக் கற்பிக்கும் பணியைச் சமூகம் தொடங்கிவிடுகின்றது. பொட்டிடுதல், பூ வைத்தல், வளையலணிதல் முதலிய செயல்களைக் குழந்தையின் ஒன்றிரண்டு வயதுவரை இருபால் குழந்தைகளுக்கும் ஒன்றாகவே செய்தாலும்கூட, பால் வேறுபாடு என்பது ஏதோவொரு வகையில் வலியுறுத்தப்பட்டே வருகின்றது.
‘பொண்ணா லட்சணமாப் பொடவ கட்டத்தெரியுதா?’ என்றும் ‘பொடவ கட்டுன பொண்ணப் பார்த்தாக் கையெடுத்துக் கும்பிடணும்போல இருக்கு’ என்றும் சமூகத்தில் நிலவும் சொல்லாடல்கள் பெண்ணுக்குரிய ஆடை இதுதான் என்று வலியுறுத்துகின்றன. ஆனால், சங்க இலக்கியங்களில் “உடுப்பவை இரண்டே” (புறம்.189) என்று ஆணுக்கும் பெண்ணுக்குமான பொதுவான உடைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில், பெண்ணுக்கான உடைகள் இன்னின்ன என்பதைச் சமூகம் வலியுறுத்தத் தொடங்கிவிட்டது. இன்றைய நவநாகரிக உலகில் ஆண் எப்படி வேண்டுமானாலும் உடையணியலாம், ஆனால், பெண் இப்படித்தான் உடையணிய வேண்டும் என்பதை மிகக் கறாராக வரையறுத்துள்ளனர்.
பெண் எப்படித்தான் பாதுகாப்பாக உடையணிந்தாலும், அவள் பாலியல் வன்முறைக்கு ஆட்படுமசூழலிலும், அவள் உடையணியும் விதத்தின்மீது புகார் கூறுவதே இவ்வாணாதிக்கச் சமூகத்தின் வழக்கமாகி விட்டது.
‘முழுமை’ என்ற சிறுகதையில் இராஜம் கிருஷ்ணன், “முன் கழுத்து, பின் முதுகு வளைவுகளும், தோளோடு ஒட்டிய தலைப்புக்களும் வெண்மை கலந்த பொன்னிறமாய், சாம்பல் பூத்த கருமையாய், பழுப்பாய் முதுகுகளும் வயிறுகளும்தான் கண்களை வந்து மூடுகின்றன. ஒவ்வொருத்தியையும் இழுத்து இரண்டு அறை கொடுத்து முதுகையும் முன்புறத்தையும் மூடச்சொல்லலாம் போலிருக்கிறது” (ப.117) என்று பெண்களின் உடையணியும் விதத்தைப் பார்த்துத் தன் சினத்தை, தமயந்தியின் அம்மா என்ற கதாப்பாத்திரத்தின் வழியாகத் தெரிவிக்கின்றார்.
மேலும், ‘கைப்பிடித்தே காதலொருவனை’ எனும் சிறுகதையில், “வேறு சாதிமதமில்லை. முடியை வெட்டிக்கொண்டு தொப்புளுக்குக்கீழ் சேலையை இழைய விட்டிருக்கவில்லை. தலைப்பைப் போர்த்திக்கொண்டு மாமியாருக்கும் மாமனாருக்கும் நமஸ்காரம் செய்தாள்” (பக்.78-79) என்று கூறுவதிலிருந்து ரஞ்சனி எனும் பெண், சமுதாயம் வரையறுத்திருக்கும் ‘பெண்’ என்ற வரையரைக்கும் மரபுக்கும் உட்பட்டிருப்பது மட்டுமில்லாமல் பெண்ணுக்குரிய உடையாகிய புடவையைக் கட்டியிருந்தாள். அதையும் உடலுறுப்பு ஏதும் வெளியே தெரியாதவண்ணம் உடுத்தியிருந்ததால் மகனுக்கு அவளை மணமுடிக்கச் சம்மதிக்கின்றனர் என்பதும் தெளிவாகின்றது.
மன்னு பண்டாரியின் ‘ஏகானே ஆகாஷ் நாஈ …’ (எல்லையற்ற வானம் …) என்ற சிறுகதையில், நன்றாக உடையுடுத்தி நல்லபடியாக அணிகலன்கள் அணிய ஆசைகொண்ட கௌரா என்ற பெண்ணை அவள் அம்மா திட்டுகிறாள். மிகவும் கூச்சப்பட்டுத் தன் அண்ணி லேகாவிடம் நல்ல புடவை கேட்கிறாள் கௌரா. லேகா, அவளுக்கு நல்ல புடவை கொடுத்து கழுத்துக்கு ஆரமும் காதுக்குத் தோடும் அணிவித்து மகிழ்கிறாள். வீட்டு விசேசத்தின்போது கௌரா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால், வீட்டிற்கு ஆசிரியரின் மகன் வருகிறான். அவன் கௌராவை விரும்புகிறானோ என்று அவளுடைய அம்மாவிற்குச் சந்தேகம். அதனால், மகளை உள்ளே அழைத்த அம்மா, “உன்னுடைய நடத்தை உன்னை நல்ல வழிக்குக் கொண்டுபோவாது கௌரா, காலையிலிருந்து நீ ஏன் இந்த மினுக்கு மினுக்கிக்கிட்டிருந்தன்னு இப்பதான் புரியுது…” (ப.66) என்று திட்டுகிறாள். பெண் இயல்பாக நன்றாக உடுத்தினால்கூட, ஆண்களுக்கு முன்பாக அவள் செல்லக்கூடாது என்றும் ஆண்களுக்கு முன் சிரித்துப் பேசக்கூடாது என்றும் கட்டுப்படுத்தப்படுகிறாள்.
“கால் விலங்குகள் போன்ற வெள்ளியணிகள், மெட்டிகள், மூக்கு, காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த பொன் சுமைகள் எல்லாவற்றையும் துறந்து எளிய உடையில் அறிவுப்பாதையில் அடிவைப்பதே முன்னேற்றம் என்று துணிந்த பெண்குலத்தை, அணிபணிகளுக்கும் அழகுச் சாதனங்களுக்கும் அடிமையாக்க இந்தப் பண்பாட்டுக் கலாசார மந்திரமே கைகொடுத்திருக்கிறது.” (ராஜம் கிருஷ்ணன் 2003, ப.220) உதட்டளவில் பெண் முன்னேற்றம் பற்றிப் பேசுபவர்கள் உண்மையில் அதை விரும்புகின்றனரா? ஏற்றுக்கொண்டுள்ளனரா? இல்லை என்பது, மரபார்ந்த சிந்தனைகளைக் கொண்ட ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து அறிய முடிகின்றது. ஏனெனில், பெண்களுக்கு விதவிதமான நகைகளையும், அலங்காரப் பொருள்களையும் வாங்கிக்கொடுத்து, பொன்விலங்கு பூட்டி அவர்களுடைய சிந்தனை, கவனம் வேறெங்கும் செல்லாதவாறு ஆண்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
இராஜம் கிருஷ்ணனின் ‘பிரச்சனை’ என்ற சிறுகதைத் தலைவி சாந்தி இந்த அணிகலன்கள் அணியும் மரபை மீறுகிறாள். “காதில், மூக்கில், கழுத்தில், கையில் ஒரு கண்ணாடி மணிச்சில்கூடக் கிடையாது. காதுகளில் இரு தங்கத் திருகாணிகள் கிடந்தன. தற்காப்பு நிதியென்று அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டாள். பின்னர் ஒன்றும் கிடையாது. நெற்றியில் பொட்டுக்கூட இல்லை.” (ப.53) என்று கூறுவதிலிருந்து, நகைகளையெல்லாம் மதிக்காத, தன்னிலை உணர்ந்த ஒரு புரட்சிப் பெண்ணான சாந்தியைக் காட்சிப்படுத்தியுள்ளார் இராஜம் கிருஷ்ணன். இம்மரபுகளையெல்லாம் மீறிவந்த ஒரு பெண் சந்திக்கும் இன்னல்களைப் ‘பிரச்சனை’ என்ற இச்சிறுகதை எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறாக, உடல், ஆடை, அணிகலன்கள் சார்ந்து பெண்ணை அடையாளப்படுத்துவதையும் அவற்றை மீறித் தன்முனைப்பாகச் செயல்படும் பெண்ணின் நிலையையும் இராஜம் கிருஷ்ணன், மன்னு பண்டாரி ஆகிய இருவரும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பெண்மை சார்ந்த சிக்கல்கள்
மனிதர்களின் மனம் பலவகையான ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இயங்கக்கூடியது. ஏதேனும் ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ பார்த்து அல்லது கேட்டுவிட்டு, அதைப்போன்றே தானும் அடைய முயற்சி செய்வது, கற்பனைகளின் வாயிலாக மேலும் வளர்ச்சிபெற்ற நிலையை அடையத் துடிப்பது, பல்வேறு கனவுகளுடனும் குறிக்கோள்களுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துவது, அதிகமான வாய்ப்புகளைத் தேடியலைந்து தன்னம்பிக்கையுடன் அவற்றைப் பயன்படுத்தி, தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுவது.
இதற்குப் பெண்ணின் மனமும் விதிவிலக்கன்று. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், திருமணம், குழந்தைப்பேறு போன்றவை பெண்களின் ஆசைகளாக, கனவுகளாக அமைகின்றன. இவை, தன் விருப்பம் சாராமல், மற்றவர்களின் விருப்பத்திற்கேற்பவே அமைந்துவிடுகின்றன. பெண்ணின் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் ஆகியன புறக்கணிக்கப்பட்டு அவை ஏக்கங்களாகவும், ஏமாற்றங்களாகவும் நின்று நிலைக்கின்றன. பெண் தற்சார்பற்றவளாகவும், தனித்து இயங்க இயலாதவளாகவும் ஆக்கப்படுகிறாள். அதனாலேயே பெண்ணினம் மிக அதிகமான மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது. புறக்காரணிகளே அவளை இயக்குகின்றன. ஆகவே, அவள் விட்டுக் கொடுப்பவளாகவும், தியாகம் செய்பவளாகவும் மாறுகிறாள், மாற்றப்படுகின்றாள். இவற்றைப் பெண்ணின் குணநலன்களெனச் சமூகம் வலியுறுத்துகின்றது.
ஆண், பெண் - எதிரெதிர்ப் பாலினங்கள்
ஆணும் பெண்ணும் எதிரெதிர்ப் பாலினங்கள் ஆதலால், இருவரையும் பழகவிடுதல் தவறு எனும் மரபான கண்ணோட்டம் சமூகத்தில் நிலவுகின்றது. ஆனால் உளவியல் ரீதியாகப் பார்த்தால், இருவரையும் பேசிப்பழக அனுமதித்தால் அவர்கள் நண்பர்களாகிவிடுவர். எதிரெதிர்ப் பாலினங்களினால் ஏற்படும் ஈர்ப்பு குறைந்து வேறுபாடுகள் அகலும் என்றெண்ணும் தாயைத் ‘திரிசங்கு’ எனும் சிறுகதையில் காட்சிப்படுத்தியுள்ளார் மன்னு பண்டாரி.
விவாதங்கள் அதிகமுள்ள இடங்களில் அன்பு குறைய வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலானோர் தான் எண்ணியதே சரி, தனது கருத்தே முதன்மையானது என்று வாதிடுவர். ஒருவேளை அவர்கள் வளர்ந்த சூழ்நிலை அப்படி இருந்திருக்கலாம், அவர்கள் சந்தித்த மனிதர்கள், வாழ்ந்த காலம் அவ்வாறு இருந்திருக்கலாம். ஆனால், அனுபவம் என்ற பெயரில் தமது கருத்துக்களைப் பிறர்மீது திணிக்கும் குணம் பலரிடம் காணப்படுகின்றது. இதைத் தவிர, வித்தியாசமாகப் பேசவேண்டும், செயல்பட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எதையாவது செய்துவிட்டுப் பின்னர் துன்புறும் போக்கும் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், ஓர் இளம்பெண்ணின் எதிர்பார்ப்புகளையும் உளப்பாங்கினையும் முன்வைக்கிறார் மன்னுபண்டாரி. தன் மகள் தனுவைக் கிண்டல் செய்த எதிர்வீட்டு மொட்டைமாடியில் குடியிருந்த டீன்ஏஜ் பையன்களைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து விருந்து வைக்கிறாள் தனுவின் தாய். தன் பெண்ணுடன் அவர்களைத் தாராளமாகப் பழக விடுகிறாள். ஆணையும் பெண்ணையும் எவ்விதமான பேதமும் காட்டாமல் கட்டுப்பாடின்றிப் பழகவிடுவதனால் இருவருக்கிடையே உள்ள நட்பு பலப்படும், இனி தன் மகளை அவர்கள் கிண்டல் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தனுவின் அம்மா இவ்வாறு செய்தார்.
மேலும், ஊர் உலகம் நம்மை - நம் குடும்பத்தைக் கேவலமாகப் பேசிவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் கவனமாயிருக்கிறார்கள். அந்தப் பயத்திலேயே தங்கள் குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகக் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தையும் கொடுக்காமல் பறித்து விடுகின்றனர். ஆனால், மன்னுபண்டாரியின் இச்சிறுகதையில், பதினைந்து வயதான தனுவும், அவள் அம்மாவும் சிறந்த நண்பர்கள். தனுவின் தாய், எப்படித் தன்னுடைய தந்தையுடன் வாதிட்டு, தனுவின் தந்தையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாள் என்பதைப் பலமுறை கூறியிருக்கிறாள். மேலும், வீட்டில் காதலைப் பற்றியும் வாழ்க்கையில் ஜாலியாக இருப்பதைப் பற்றியுமே பெரும்பாலும் விவாதம் நடைபெறும்.
“தனது திருமணத்திற்குமுன் அம்மா தனது திருமண முடிவு பற்றித் தாத்தாவிடம், அதாவது அம்மாவின் அப்பாவிடம் நிறையவே தர்க்கம் செய்து வாதிட வேண்டியிருந்ததாம். இந்த விவாதம் மிக நீண்டதாகவும் இருந்திருக்கலாம். இருந்தபோதிலும், இது தர்க்கப்பூர்வமான திருமணமன்று, காதல் திருமணம் என்று அம்மா மிகுந்த கர்வத்துடன் கூறிக் கொள்வாள். இந்தப் பெருமையும் கர்வமும் தனது திருமணத்தைப் பற்றியல்ல. தான் எப்படித் தன் தந்தையை எதிர்த்து நின்று வெற்றி கொண்டாள் என்பது பற்றித்தான் இருந்தது.” (பீஷ்மசகானி 1999, ப.382)
தன் அம்மாவின் அனுமதியுடனே எதிர்வீட்டு மாடியில் தங்கியிருந்த மாணவர்கள் தம் வீட்டிற்கு வரும்பொழுது, அவர்களுடன் சேர்ந்து படிப்பது, பேசுவது, அரட்டையடிப்பது ஆகியவை தனுவிற்கு மிகவும் பிடித்துப் போயின. தவிர, அப்பையன்களுள் ஒருவனான சேகர் என்பவனைத் தனு காதலிக்கத் தொடங்கியிருந்தாள். இதனையறிந்த தனுவின் தாய், அவளுக்கு அதற்குரிய வயது இன்னும் வரவில்லை எனக்கூறி எதிர்த்தாள். தனு தன் தாயிடம் மாற்றத்தைக் கண்டாள். தனக்குத் தோழியாயிருந்த தன் அம்மா, திடீரென்று தன்னை மகளாக நினைத்துக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்துப் பெரும் வேதனைக்கு உள்ளாகிறாள். ஏனெனில், தன்னை அந்தப் பையன்கள் கேலி செய்கிறார்கள் என்று தாயிடம் கூறும்போது அவர்களைத் தன் அம்மா எப்படித் தண்டிக்கப்போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தவள் தனு. தாயின் மாறுபாடான செய்கை தனுவிற்குப் புதுமையாக இருந்தது, வியப்பூட்டியது. தன் அம்மா முற்றிலும் புதுமையானவள் என்றே நினைத்தாள். ஆனால், தன் காதலுக்குத் தடை விதித்தபோது தன் தாயை எதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறாள். தன் தாயின் காதலை எதிர்த்த தன் தாத்தாதான் தற்பொழுது தன் தாயின் உடலில் இருக்கிறார் என நினைத்தாள். எப்பொழுதும் காதலைப் பற்றியும் அதற்கு ஆதரவாகவுமே பேசிய தன் அம்மா, தன் மகளுக்கென்று வரும்பொழுது மட்டும் அதை எதிர்ப்பதாக எண்ணினாள். “அம்மா இந்த விசயத்தில் தாத்தா போல்தான் செயல்படுவாள் என்றால், நானும் என் அம்மா நடந்துகொண்டதைப் போல்தான் நடந்துகொள்வேன். நான் உன் மகள்தான் என்பதை நிரூபித்துக்காட்டுவேன்” (மேலது, ப.402) என்று உறுதியெடுக்கிறாள் தனு. அம்மாவிடம் விவாதம் செய்யமுடியும், சண்டைபோடமுடியும். ஆனால், அம்மாவுக்குள் உள்ள தாத்தாவிடம் பேசி வெற்றிபெற முடியாது என்றெண்ணுகிறாள் அவள்.
ஆண்மை ஒ பெண்மை என்பதை உளவியல் பார்வையில் புதிதாக அணுகியிருக்கிறார் தனுவின் அம்மா. “குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவத்திற்கு மாறுகிற இந்தக் காலகட்டம், குழந்தை என்று தொட்டிலும் போடமுடியாமல் குமரி என்று கல்யாணக்கட்டிலும் போட முடியாமல் எதிலும் சேர்க்க முடியாத ஒரு பருவகாலகட்டமாகத் திகழ்கிறது. உலக ரீதியாக 12இல் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் இவ்விளம் பெண்களாகக் கருதப்படுகிறார்கள். மருத்துவத் துறையிலேயே இப்பருவகாலப் பெண்களை ‘மருத்துவத்துறை அனாதைகள்’ என அழைக்கின்றனர். ஏனெனில், குழந்தை என்று இவர்களைக் குழந்தை நல மருத்துவரும் கவனிக்க முடியாது. ‘பெண்’ என்று பெண்நல மருத்துவரும் ஏற்கமுடியாது” (க.பஞ்சாங்கம் 2007, ப.20). பொதுவாகத் தாய்தந்தையரைப் பார்த்துக் குழந்தைகள் வளர்ந்தாலும் அவர்களுடைய உடல் மற்றும் மன நிலைகளின் வளர்ச்சிக்குச் சமுதாயம் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாகப் பெண்குழந்தைகள் சமூகத்தைக் கூர்ந்து நோக்குகிறார்கள். இதனடிப்படையில், தனுவின் மனநிலையானது, சொர்க்கம் புகவேண்டி அந்தரத்தில் தொங்கும் திரிசங்கின் நிலையை ஒத்துள்ளது என்பது இச்சிறுகதைத் தலைப்பின் வாயிலாக மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது.
இதே தலைப்பில் (திரிசங்கு) தமிழில், அம்பை ஒரு சிறுகதையைப் படைத்துள்ளார். இதில் தொன்மம் மறைமுகமாகப் பயின்று வந்துள்ளது.
பெண்மையின் உணர்ச்சி வெளிப்பாடுகள்
மனம் என்பது, ஆண், பெண் இருபாலருக்கும் பொது என்றாலும் பெண்ணின் மனம் அடக்கி ஆளப்படுகின்றது. பெண், ஆணின் விருப்பப்படி, ஆணாதிக்கக் கருத்தியல்களுக்கு அடிபணிந்து வாழப் பயிற்றுவிக்கப்படுகிறாள், பழக்கப்படுத்தப்படுகிறாள். தனக்கென்று தனியாகவுள்ள விருப்பு, வெறுப்புகளை மனத்திற்குள்ளேயே புதைத்த நிலையில் ஒருவிதத் தவிப்புடனும் ஏக்கத்துடனுமே வாழ வேண்டியவளாகின்றாள். பாதுகாப்புக்காகவும் அன்புக்காகவும் காத்திருக்கிறாள். ஏமாற்றத்தினால் மிகுதியாக உணர்ச்சி வயப்படுகிறாள். பெண்ணின் தனிப்பட்ட சாதனைகள், அவளுடைய பதவி அதிகாரம் போன்றவை சிறுகதைகளில் மிகுதியாகக் குறிக்கப்பெறவில்லை. பெண், அன்புக்காகவும் அரவணைப்பிற்காகவும் பாதுகாப்பிற்கும் ஏங்குபவளாகவே இருவரின் கதைகளிலும் அதிகம் படைக்கப்பட்டிருக்கிறாள்.
இவ்வுலகில் ஏதோவொரு காரணத்திற்காக, ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழும் நிலை காணப்படுகிறது. அதனால், ஒரு செயலைச் செய்வதற்காகத் திட்டமிடுதல், எதிர்பார்ப்புகள் ஆகியவை அனைவரிடமும் இருக்கும். சமூகத்தளத்தில் ஆண்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள் ஆகியவை நிறைவேற்றப்பட்டு முழுமையடைகின்றன, பெண்களின் ஆசைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
“பெண் உணர்வுகள் புனிதம், ஒழுக்கம், குடும்ப கௌரவம் எனும்பேரில் பேசப்படாமலும், சொல்லப்படாமலும் இருந்திருக்க இன்று கலகக்குரல்களாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வரும் குரல்கள் எதைச் சொல்கின்றன? அப்படிச் சொல்வதனால் விளையும் மாற்றங்கள் பெண்ணுக்குச் சாதகமானவையா? பாதகமானவையா? பெண்ணுக்கான நிஜமான பிரச்சினைகளை முன்வைக்கின்றனவா? இவ்வளவு அறிவியல், பொருளாதாரக்கல்வி என மாறியபோதும் வாழ்வியலில் நாடு, மொழி, சமயம் வேறுபாடின்றிப் பெண்ணைத் தீர்மானிப்பவன் ஆணாகத்தானிருக்கிறான்” (திலகபாமா (க.ஆ.), மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம், ப.39) என்று திலகபாமா குறிப்பிடுகின்றார்.
அவ்வகையில், இராஜம் கிருஷ்ணனின் ‘உருவாக்குகிறார்கள்’ என்ற சிறுகதையின் நாயகியான ராதா, தன் கணவனிடமிருந்து அன்பான வார்த்தைகளையும் தனக்குதவியாகச் சிறுசிறு வேலைகளையும் எதிர்பார்க்கிறாள். திருமணமான புதிதில் அவனது எல்லாத் தேவைகளையும் அவளே நிறைவு செய்தாள். தாயாகும் நிலையில்கூட, வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு கணவனுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுத்து, இவள் கல்லூரிக்குப் பேராசிரியையாகவும் சென்றுவந்தாள். ஆனால், குழாயில் நீர்வராதபோது, பக்கத்துவீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க, உதவிக்கு வரமறுக்கிறான் கணவன்.
“ … கல்லூரி திறந்ததும், தாயாகும் நிலைவந்ததும் மழுங்கிப்போக, மணவாழ்வென்பது, முக்கோணச்சிறை என்பது புரியலாயிற்று. “என்னங்க, குழாயில தண்ணியே வரல. பக்கத்து வீட்டில கேணி இருக்கு. ரெண்டு வாளி இறைச்சுத் தரீங்களா?”
“ஐயய்யோ? அதெல்லாம் எனக்குப் பழக்கமில்ல. என்னால அதெல்லாம் முடியாது. இந்த வேலையெல்லாம் என்னைச் செய்யச் சொல்றே?” “செஞ்சா என்ன…?” என்று கேட்க இயலாதபடி அவனிடம் தோன்றிய ஒரு கடுமை அவள் வாயை அடைத்தது. ஊரிலிருந்து திரும்பும்போது, அவனுக்குப் பிடித்த ரகத்தில் சேலை வரும், அல்லது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான், சட்டை போன்ற பரிசுகள் வரும். உருப்படியாக வீட்டுச்செலவு எதையும் அவன் மேற்கொள்வதில்லை.” (பக்.21-22) என்னும் வரிகளிலிருந்து, ஆணின் விருப்பப்படியே அனைத்தும் நடந்தேறுவதும் பெண் மதிக்கப்படாத நிலையும் புலனாகின்றன. தாயாகும் பொழுதும் தாயான பின்பும் ஏற்படக்கூடிய உடற்கூற்று மாற்றங்களால், ஆணின் அன்பு மாறுபடுகின்றது. புதிதாகக் கிடைக்கும் ஒரு பொருளை மிகுந்த விருப்பத்துடன் கையாள்வதும் அதே பொருள் பழையதாகியதும் அதன் மீதுள்ள ஆசை குறையத் தொடங்குவதும் மனித இயல்பு. இப்பொருளைப் போலவே பெண்ணும் அஃறிணையாக்கப் படுகின்றாள்.
“ … உடல் வலிமையில், வசீகரமான ஆளுமைக்குப்பதில், அடக்கியாளும் முரட்டுத்தனம்தான் தெரிகிறது. ஒருகால் அவள் இந்தப்படிப்பு, பொருளாதாரச் சுதந்திரம் என்ற பெண்ணுரிமைத்தனத்தைக் காட்டிக்கொள்ளாதவளாக இருந்திருந்தால், எதிரெழுச்சி என்ற தேவையின்றி, இயல்பான மனிதக்கசிவுடன் இருப்பானோ?” (ப.23) எனும் வரிகள், பெண்ணை மாற்றிச் சிந்திக்கவைக்கும் ஆணின் அடக்குமுறையைச் சுட்டுகின்றன. அதாவது, இவ்வளவு படித்திருந்தும், குடும்பத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்து தன்னையே அர்ப்பணித்தும் இயல்பாக ஃ அடிப்படையாகக் கிடைக்க வேண்டிய அன்புக்கு ஏங்கும் நிலையில்தான் பெண் இருக்கிறாள். எனவே, ஏனைய சராசரி பெண்களைப் போலவே எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டு, கணவனின் எண்ணமே தன் எண்ணமாகச் சுயசிந்தனைகளை முடக்கிக்கொண்டு வாழ்ந்தால், அவன் ஆசையாகவும் தன்னிடமும் குடும்பத்தினரிடமும் அக்கறையாகவும் இருந்திருப்பானோ? என்ற ஐயம் பெண்ணுக்கு எழுகிறது. இவ்வெண்ணம் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் பெண்ணின் முன்னேற்றத்தைத் தடைசெய்து, அவளுடைய மனவுளைச்சலுக்குக் காரணமாக அமைகிறது.
முடிவுரை
மன்னு பண்டாரியின் பின்புலத்திலிருந்து, அவர் வாழ்ந்த வடஇந்தியச் சூழலுக்குத் தக்கவாறு பெண்ணுரிமைக் கருத்துகள் பேசப்பட்டுள்ளன. ஆணுக்குக் கிடைத்துள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் எனும் கருத்து வெளிப்படும்வகையில் இவருடைய சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண் (கணவன்) வேறு பெண்ணை விரும்பினால், பெண்ணும் (மனைவி) வேறு ஆணை விரும்புவதாகப் படைத்துள்ளார். அதேபோல், இவருடைய சிறுகதைகளில் பெண்ணின் நியாயமான ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவை புறக்கணிக்கப்படுதல், ஆண்களிடம் காணப்படும் தன்னலம், உழைப்புச் சுரண்டல், ஆதிக்க மனப்பான்மை முதலானவற்றைச் சாடுதல் ஆகியவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இவருடைய படைப்புகளில் சமதர்மப் பெண்ணியம் காணப்படுகின்றது.
பொதுவாக, இராஜம் கிருஷ்ணனின் எல்லாப்; படைப்புகளும் (புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள்) களஆய்வுக்கு உட்படுத்தப்பட்டே படைக்கப்பட்டுள்ளன. அவற்றினடிப்படையில், சமூகத்தில் இயல்பாகப் பெண்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளையும் பெண் இரண்டாம் பாலினமாக இருக்கும் நிலையையும் இரட்டைச் சுமைகளைத் தாங்கிச் செயல்படும் பெண்களின் மனப்பக்குவத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் இராஜம் கிருஷ்ணன். மன்னுபண்டாரியும் இவரைப் போன்றே உண்மைக்கு நெருக்கமான பாத்திரங்களைப் படைத்து, பெண்களின் மனநிலையைக் கதைகளாக்கியுள்ளார்.
இராஜம் கிருஷ்ணன், மன்னு பண்டாரி ஆகிய இருவரும் குடும்ப அமைப்பிற்குட்பட்ட பெண் விடுதலையையே வலியுறுத்தியுள்ளனர். இவ்வகையில் இருவரும் மிதவாதப் பெண்ணிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இருவருடைய சிறுகதைகளும் பெண்மை சார்ந்த சிக்கல்களை, முரண்களை, மரபுகளை, விதிமீறல்களை எடுத்துக் காட்டுகின்றன. ஆயின், இராஜம் கிருஷ்ணன் சிறுகதைகள் பெண்மையின் சமூகம் சார்ந்த முரண்பாடுகளை விவாதிக்க, மன்னு பண்டாரியின் சிறுகதைகளோ பெண்ணின் அகமன முரண்பாடுகளில் அகவுணர்ச்சியின் ஆழங்களில் பெரிதும் காலூன்றி நிற்கின்றன.
பார்வை நூல்கள்
- இளங்குமரன். இரா. புலவர் - தமிழ் இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108, முதற்பதிப்பு செப்டம்பர். 2006.
- கனிமொழி - கருவறை வாசனை, வ.உ.சி.நூலகம், சென்னை-14, மூன்றாம்பதிப்பு 2004.
- ராஜம் கிருஷ்ணன் - பெண் விடுதலை, தாகம், சென்னை-17, இரண்டாம் பதிப்பு ஆகஸ்டு 2003.
- ராஜம் கிருஷ்ணன் - களம், பாரி புத்தகப் பண்ணை, சென்னை-5, முதற்பதிப்பு மார்ச்சு 1985.
- பீஷ்ம சகானி (தொ.ஆ.) - இந்திச் சிறுகதைத் தொகுப்பு, சாகித்திய அகாடமி, புதுதில்லி 110 001, 1999.
- நருரற ர்மயஆமதா (மன்னு பண்டாரி) - நளதா கணை; னபமகர்மறுயஸ (மேரி ப்ரிய கஹானியா(ங்)), ராஜ்பால் அண்ட் சன்ஸ், தில்லி 110 006, 2007.
கட்டுரைகள்
- திலகபாமா (க.ஆ.) - “மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்”, பெண்ணும் பெண்மையும், அரங்க மல்லிகா (கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98, முதற்பதிப்பு டிசம்பர் 2008, பக்.36-51.
- Journal of Social Education - Vol 35 - Navomi Weistein, ‘Psychology constructs the Female’, 1971.
- முனைவர் த.காந்திமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை.