தமிழ்ப் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தம் உழைப்பால் உயர்ந்தவர்; நிழலில் வளர்ந்த பயிர் அல்ல; வெயிலில் வாடி வேரூன்றிய மரம்.

பெற்றோர்

இவர்தம் தந்தையார் புலவர் சு.முத்துசாமி பிள்ளை எட்டயபுரம் அரண்மனையில் ஆவணக் காப்பாளராகப் பணியாற்றியவர். எட்டயபுரம் அரசரது நம்பிக்கைக்குரியவராய்த் திகழ்ந்தவர். மககவி சி.சுப்பிரமணிய பாரதியின் தந்தையார் சின்னசாமி ஐயருடன் கூட்டு வாணிகம் செய்தவர். இவர்தம் தாயார் எட்டயபுரத்தைச் சார்ந்த விநாயகத்தம்மையார். இவ்விருவருக்கும் இளசை எனப்படும் எட்டயபுரம் நடுவிற்பட்டியில் 1896இல் சூன் திங்கள் 6ஆம் நாள் மூன்றாம் குழந்தையாய்ப் பிறந்தவர் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை. எதிர்பாரா நோயினால் 1900ஆம் ஆண்டில் வைகாசித் திங்கள் 24ஆம் நாள் புலவர் சு.முத்துசாமி பிள்ளை இறக்க, தமது நான்காம் வயதிலேயே தந்தையை இழந்தவரானார். புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை தாயின் உழைப்பில் வளர்ந்து தம் திறமையால் உயர்ந்தார்.

புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்குத் தாயிட்ட பெயர் 'சந்திரசேகரன்' என்பது. சந்திரசேகரன் என்ற பெயரையே இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பிற்காலத்தில் தம் புனை பெயராக வைத்து சுயமரியாதை இயக்கத்தில் புகழ் பெற்றார். 'சந்திரசேகரப் பாவலர்' என்றால்தான் சுயமரியாதை இயக்கத்தார்க்கு இவரைத் தெரியும்.

பள்ளிக் கல்வி

subramaniya pillaiஆறாம் வகுப்புவரை திருவில்லிபுத்தூர் இந்து உயர்நிலைப் பள்ளியிலும், ஏழாம் வகுப்பை எட்டயபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை சைவ பானுசத்திரிய வித்தியா சாலை, திருவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளி என மூன்று பள்ளிகளிலும் படிக்க நேர்ந்தது. தந்தையை இழந்ததால் தாய் மாமனார் வீட்டில் தங்கிப் படித்த புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, இவ்வாறு பள்ளிகள் மாறி மாறி 11ஆம் வகுப்பை எட்டயபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.

உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே இலக்கண வரம்புடன் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்றார். எட்டயபுரம் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் சீனிவாச ஐயங்காரவர்கள் முருக பக்தர் அவர்தம் சொல்வழி, புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் முருக பக்தராகி நாள்தோறும் முருகனைப் பற்றி ஐந்து பாடல்கள் பாடும் நோன்பு மேற்கொண்டார்.

இவருடன் பயின்றவர்களில் மகாகவி பாரதியாரின் உடன்பிறப்பு விசுவநாதனும் ஒருவராவார்.

எட்டயபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு பயின்று கொண்டிருக்கும்போது புலவர் இ.மு.சுப்பிரமணியம் பிள்ளை, தமிழாசிரியர் இல்லாத காலங்களிலெல்லாம் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கே தமிழ் கற்பித்த பெருமைக்குரியவர். அக்காலத்திலேயே தமிழ்க் கற்பித்தலில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய முயற்சி, கவிபாடும் திறன், சங்கங்கள் அமைக்கும் ஆர்வம் ஆகிய இயல்புகள் இவரிடம் குடிகொண்டிருந்தன. 1912-14 ஆகிய ஆண்டுகளில் பள்ளிப் பருவத்திலேயே 'கலைவாணி கழகம்' என்ற சங்கத்தைத் தோற்றுவித்து அதன் செயலாளராக, அமைச்சராகப் பணியாற்றினார். இக்காலத்தில் இவர் மேற்கொண்ட இலக்கிய முயற்சிகளுக்கு, கையெழுத்துப் படியாகவே நின்றுவிட்ட 'சாவித்திரி அகவல்', செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்த 'சிங்கைப் பதிற்றுப் பத்தந்தாதி' எனத் தொடங்கிப் பாடிய முப்பது பாடல்கள், 'பெரிய புராணமாலை' என்ற நூலின் சிறு பகுதிகள் சான்றாகத் திகழ்கின்றன. 'விவேக போதினி' என்ற திங்கள் இதழில் 'இராமாயண அகவல்' என்ற நூலை 2015 அடிகளில் இயற்றி ஓராண்டு காலத்திற்குத் திங்கள்தோறும் தொடர்ந்து வெளியிட்டார். இவ்வாறு பிள்ளையவர்கள் 18 அகவைக்குள்ளாகப் புலவர்கள் மெச்சும் பாக்கள் இயற்றி அவை தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் வெளிவரும் சிறப்பினைப் பெற்றார்.

தமிழாசிரியப் பணி

1914ஆம் ஆண்டில் பத்தமடை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை ஏற்றார். அக்காலத்தில் ஆங்கிலம் தெரிந்த தமிழாசிரியர் எனப் பாராட்டப்பட்டு ரூ. 5 ஊதிய உயர்வும் பெற்றார்.

புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை பத்தமடையில் தமிழ் ஆசிரியராகப் பணியற்றியபோது அவரிடம் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றவர்களில் திரு.எஸ்.வெங்கடேசுவரன் ஐ.சி.எஸ்., திரு.எம்.வி.சுப்பிரமணியம் ஐ.சி.எஸ்., ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

பிற்காலத்தில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் செல்வாக்கிற்கு அவர்தம் மாணவர்கள் தமிழகம் முழுவதும் பல பதவிகளில் இருந்தது காரணம். இவரது செல்வாக்கிற்கு மூல காரணம் இவரது தலை மாணவராகிய திரு.எஸ்.வெங்கடேசுவரன், ஐ.சி.எஸ். அவர்களே.

திருமணம்

புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 29ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் திருமதி ஈசுரவடிவம்மையார்.

சித்த மருத்துவத்தில் ஈடுபாடு

பத்தமடையில் திரு.அருணாசலம் பிள்ளை நட்புறவால் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை சிவபக்தராக மாறினார். திரு.அருணாசலம் பிள்ளையவர்கள் சித்த மருத்துவராகவும் விளங்கியவர். அவர் மூலமாகப் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை சித்த மருத்துவத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, அத்துறையில் ஆய்வுகளையும் இக்காலத்தில் தொடங்கினார்.

சைவப் பஞ்சாங்கத் தோற்றம்

1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரையில் கோவிற்பட்டியில் பத்திவிளை கழக ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை சென்றிருந்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி, சித்தாந்த ஆசிரியர் திரு.நா.சிவகுருநாத பிள்ளையவர்களும் பிறரும். "சுமார்த்தர்களின் பங்சாங்கத்தினாலும் புரோகிதத்தினாலும் சைவ சமயக் கொள்கைகளும் விரதாதிகளும், திருவிழாக்களும் மறைந்து சுமார்த்தமாகி வருவதனால் சைவப் பஞ்சாங்கம் ஒன்று வந்தால் மட்டும் சைவப் பயிர் நிலைக்கும் என வருந்தினார்கள்."

புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் 'அடுத்துவரும் சித்தார்த்தி ஆண்டிலிருந்து சைவப் பஞ்சாங்கம் வெளிவரும்' எனச் சூளுரைத்தார். அவ்வாறே 1918இல் சித்தார்த்தி ஆண்டில் சைவப் பஞ்சாங்கத்தை வெளியிட்டார் இத்தொண்டுடன், பத்தமடையில் பழனி ஆண்டவர் பசனை மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையை நிறுவி அதன் தலைவராகவும் தொண்டாற்றினார்.

1921ஆம் ஆண்டில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பத்தமடையை விடுத்து கோவிற்பட்டி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் பணியையேற்றார். கோவிற்பட்டிக்கே குடிபெயர்ந்தார்.

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு

கோவிற்பட்டியில் பத்திவிளை கழகம், திராவிடர் கழகம் இவற்றின் செயலாளராகத் திகழ்ந்து சிறப்புற அவ்வமைப்புகளை நடத்தினார். 27-7-1924இல் 'கலைக்கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றினார். கிழமைதோறும் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் கட்டுரைத் தொடர் குடியரசில் வெளிவந்தது. 25-12-1927 முதல் 9-11-1930 வரையில் 'இதிகாசங்கள்' எனும் தலைப்பில் இராமாயண ஆய்வுக் கட்டுரைகள் குடியரசு இதழில் வெளிவந்தன. இக்கட்டுரைகள் சுயமரியாதை இயக்கத்தைக் காட்டுத்தீபோல நாடெங்கிலும் பரவச் செய்தன. இவையனைத்தையும் 'சந்திரசேகரப் பாவலர்' என்ற புனை பெயரில் எழுதி வெளியிட்டார்.

வ.உ.சி. தொடர்பு

புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களுடன் பழகியவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களால் 'தம்பி' எனும் அன்புரிமை கொண்டாடப் பெற்றவர்.

நாங்குநேரி வாழ்க்கை

1928இல் நாங்குநேரிக்கு மாறுதல் பெற்ற புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அங்கு 'சிவகாமி திருவருட் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவரானார். அக்காலத்தில் பிராமணரல்லாதார் சங்கம் நாங்குநேரியில் தீவிரமாக நடைபெற்றது. அச்சங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். குடியரசிலும் தொடர்ந்து எழுதி வந்தார். 'மகாபாரத ஆராய்ச்சி' என்ற தலைப்பில் 30-11-1930 முதல் 5-4-1931 வரையில் இவரின் பத்துக் கட்டுரைகளைக் குடியரசில் வெளியிட்டார் தந்தை பெரியார். இக்கட்டுரைகள் அனைத்தும் காகிதத் தட்டுப்பாடு இருந்தபோது கூட குடியரசு இதழ் வழியாக தந்தை பெரியார் வெளியிட்டார். புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் சிவாலயப் பணி விடைச் சங்கம் உருவாக்கி அதன் தலைவராகவும் பணிபுரிந்தார்.

கோவிற்பட்டியில் கல்விக் கழகத்தார் ஆடிய நாடகங்களில் பங்கேற்றார். 'கிருட்டிணமூர்த்தி' எனும் நாடக நூலை அகவற்பாவில் மூவாயிரம் அடிகளில் இயற்றினார்.

சைவப் பஞ்சாங்கத்தின் மூலமாகத் தமிழுலகம் முழுவதும் சைவப் பெருங்குடி மக்களிடையே அறிமுகமாகிய புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை ஆரம்ப காலத்தில் சுயமரியாதை இயக்கத் தூண்களில் ஒருவராகப் பணியாற்றி இருக்கிறார்.

தந்தை பெரியார் சந்திப்பு

'இராமன் வரலாறு' என்னும் கட்டுரை எழுதி, இலங்கை இந்தியர் சங்கத்தாரால் நடத்தப் பெற்று வந்த 'இந்தியன்' என்ற திங்கள் ஏட்டில் வெளியிட்டார். இக்கட்டுரையைக் கண்ட தந்தை பெரியார் இவரைச் சந்திக்க விரும்பினார். 1927இல் கோவிற்பட்டி பத்திவிளை ஆண்டு விழாத் தலைவராக வந்த தந்தை பெரியார் அவர்களிடம் அக்கூட்டத்தில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அறிமுகப்படுத்தப்பட்டார். குடியரசில் இராமாயணத்தை ஆய்ந்து தொடர் கட்டுரை எழுதுமாறு புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களைத் தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக்கொண்டார். அவர்களின் கட்டுரைகளை அச்சுத்தாள் பஞ்சம் நிலவிய நிலையையும் கருதாது 'இராமாயணத்தில் ஆபாசம்' 'இராமாயண ஆராய்ச்சி' எனும் நூல்களாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்றீடுபாடு கொண்டிருந்த புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை,

"அஞ்சாத நெஞ்சுடையான் அன்புகனி சொல்லுடையான்

               வஞ்சனை யாவும் வகுத்தறிவான் - மிஞ்சவிடா

               வீரன் விளங்கும் இராமசாமிப் பெரியார்

               தீரன் திகழ்வான் சிறந்து"

எனத் தந்தை பெரியாரைப் போற்றியுள்ளார்.

தென்னிந்தியப் பண்டிதர் சங்கம்

மதுரையில் 14-5-1932இல் நடைபெற்ற சென்னை மாகாணப் பண்டிதர் மாநாட்டில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் அதன் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தோற்றம்

பல சங்கங்களை நிறுவி ஓயாமல் உழைத்து வந்தாலும், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கமே புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு நிலையான பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

சொல்லாக்கப் பணி

ஆங்கிலம் தெரிந்த தமிழாசிரியராய்த் திகழ்ந்த புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், தமக்கிருந்த இருமொழிப் புலமையைக் கலைச் சொல்லாக்கப் பணியில் ஈடுபடுத்தினார். உயர்நிலைப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக மாற்றுவதற்குக் கருவி நூலாகிய கலைச் சொல்லகராதியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். வடசொற்களை இயன்றவரை தவிர்ப்பதில் தீவிரமாக இருந்தார். மக்களுக்குப் புரியும் வகையில் எளிய சொற்களைக் கொண்டு இவ்வகராதியை உருவாக்க முனைந்தார். வேதியியல், இயற்பியல் போன்ற துறைகளின் கலைச் சொல்லகராதிகளைத் தயாரித்தல், ஆராய்ந்து திருத்த வல்லுநர் குழு அமைத்தல், அகராதியை ஒட்டுமொத்தமாக ஏற்பதற்கு ஒரு மாநாடு கூட்டுதல் என இத்துறையில் இவர் பணிமுறை அமைந்திருந்தது. இத்தகைய கலைச் சொல்லாக்க மாநாடு ஒன்றைச் சென்னையில் 20-9-1936 முதல் 1-10-1936 வரையில் நடத்தினார். இம்மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி ஐயர் சொற்களைப் பிற மொழிகளிலிருந்து ஏற்பது அறிவுடைமையாகாது. தேவைப்பட்டால் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்குவது பொருந்தும் எனக் கருத்துரைத்தார். விபுலானந்த அடிகளும், வழக்கத்திற்கு வந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களை ஏற்கலாம் என்றார். இம்மாநாட்டில் பல்வேறு பொருண்மைகளில் கலைச் சொல் அகராதிகளை உருவாக்கப் பல்வேறு உட்குழுக்கள் அமைக்கப் பெற்றன. தமிழகம் தழுவிய அளவில் வல்லுநர்கள் இடம்பெற்ற இக்குழுக்களைக் கூட்டுவிக்கும் செயலாளராகப் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை விளங்கினார்.

மாநாட்டில் சிலர் வட சொற்களை ஏற்கலாம் என கருத்துரைத்த போதிலும் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை வடசொற்களைக் கவனமாக நீக்கித் தமிழ்ச் சொற்களைப் புகுத்தும் பணியை மேற்கொண்டார்.

இவ்வாறு ஒல்லும் வகையெல்லாம் அயராது பணியாற்றி பல்துறைச் சொற்களையும் 'கலைச்சொற்கள்' என்னும் மகுடமிட்டு 1938இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக வெளியிட்டார்.

இராஜாஜியுடன் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை

கலைச் சொல்லாக்கத்தில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் இணைந்து பணியாற்றினார். புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் ஆழ்ந்த தமிழ்ப் பற்று இராஜாஜியைக் கவர்ந்தது. அவர் சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக இருந்தபோது புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு எழுதிய கடிதம் அதை நன்கு விளக்கும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பப்பெற்றிருந்த அக்கடிதத்தில் இராஜாஜி 'ஆங்கிலத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்' என்று தம் கைப்பட ஒரு குறிப்பு எழுதியுள்ளார். இக்குறிப்பு இராஜாஜியின் உயர்பண்பையும் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் தமிழ் நெஞ்சம் புண்படக் கூடாது என்ற நுண்ணுணர்வையும் தெளிவுறக் காட்டுவதாகும்.

வடசொற் கலப்பு மிக்க கலைச் சொற்கள் வெளியீடும் போராட்டமும்

ஆலோசகர் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தின்படி வட சொற் கலப்பு மிகுந்த கலைச் சொற்கள் அரசின் சார்பில் வெளி வந்தன. இதனை எதிர்த்து நாடெங்கும் போர்க் குரல்கள் எழும்பின. தந்தை பெரியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். முத்துரங்க முதலியார் ஆகியோர் முழுவீச்சுடன் அரசின் செயற்பாட்டை எதிர்த்தனர். இதன் விளைவாக அரசு கலைச்சொற்குழுவை மாற்றி அமைத்தது. புதிய குழுவில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பல போராட்டங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆட்பட்ட இக்குழு 1947 சனவரியில் தம் பணியை முடித்தது.

தமிழ் ஆட்சிமொழி

உயர் நிலைப் பள்ளிக்குரிய கலைச் சொற்களை உருவாக்கி வெற்றிகண்ட பின்னர் விடுதலைக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மொழி தமிழாக இருக்க வேண்டுமெனும் கருத்து மேலோங்கியது. புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை இச்சூழ்நிலையில் ஆட்சிமொழி மாநாடு ஒன்றினை 18-10-1953இல் திருநெல்வேலியில் தமிழவேள் பி.டி.இராசன். தலைமையில் நடத்தினார். ஆட்சிமொழி தமிழாக வேண்டுமென்றும். ஆட்சிச் சொல்லகராதியைச் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் உருவாக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னையிலும் 20-12-1953இல் அனைத்துக் கட்சி ஆட்சிமொழி மாநாடு ஒன்று நடத்தப்பெற்றது.

ஆட்சிச் சொல்லகராதி உருவாக்கம்

ஆட்சிச் சொல்லகராதியை உருவாக்கும் முதற் படியாக நெல்லையில் ஆட்சிச் சொல்லாக்கக் குழு முன்னாள் நீதிபதி திரு.தா.கோமதிநாயகம் பிள்ளை அவர்கள் தலைமையில் அமைக்கப் பெற்றது. துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் பேரா.அருளப்பன் அவர்களும் சேர்ந்துதான் ஆட்சிச் சொல்லகராதியை உருவாக்கினர் எனலாம். இக்குழு தயாரித்தளித்த ஆடசிச் சொல்லகராதியைச் சொல்லாக்கக் குழு விவாதித்து ஏற்றுக்கொண்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இப்பணியினை ஆதரித்து ரூ.250 நன்கொடை வழங்கியது.

5-12-1955இல் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.இராமன் தலைமையில் ஆட்சிச் சொல்லகராதி வெளியிடப்பட்டது.

இச்சொல்லகராதியை மேலும் ஆராய்ந்து உறுதி செய்வதற்காகச் சென்னையில் திரு.சு.வெங்கடேசுவரன். ஐ.சி.எஸ். தலைமையில் ஆட்சிச் சொல்லாக்கக் குழு அமைக்கப் பெற்றது. 18 பேர்களைக் கொண்டது இக்குழு. புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எல்லாக் குழுக்களுக்கும் துணைக் குழுக்களுக்கும் செயலாளராக இருந்தார்.

21-12-1956இல் இராசாசி மண்டபத்தில் அந்நாள் முதலமைச்சர் திரு.காமராசரிடம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திரு.என்.வெங்கடேசுவரன் ஐ.சி.எஸ்., அவர்கள் ஆட்சிச் சொல்லகராதியை ஒப்படைத்தார். அவ்வகராதியே இன்று தமிழ்நாடு அரசுத் துறைகளின் வழக்கில் உள்ள ஆட்சிச் சொல்லகராதிக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகும்.

மொழிபெயர்ப்புத் திறன்

ஆசிரியர் கல்லூரிக் கலைச் சொல்லாக்கக் குழு மாநிலப் பொதுக் கல்வி இயக்குநர் திரு.நெ.து.சுந்தரவடிவேறு அவர்கள் தலைமையில் கூடி சொல்லாய்ந்தபோது சுவையான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. “Jack of all trades but master of none” என்ற ஆங்கில மரபுத் தொடருக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு காண அங்குக் கூடியிருந்த பேராசிரியர்கள் முயன்றனர். பல கருத்துக்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கும்பொழுது புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, "பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்" என்னும் தமிழ்ப் பழமொழிதான் இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரானது எனக் கூறினார். குழுத் தலைவர், உறுப்பினர்கள் இதனை ஏற்று மனதாரப் பாராட்டினர்.

வையாபுரியாருடன் மோதல்

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சேர்ந்து அமைக்கப்பட்ட துணைக் குழுவில் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை பேரா.வையாபுரிப் பிள்ளையுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டரும் அக்குழுவில் இருந்தார்.

ஒருநாள் கலைச் சொற்களைப் பற்றிய விவாதத்தில் குழு ஈடுபட்டது. பேரா.வையாபுரிப் பிள்ளை அவர்கள் 'நிலையா' என்னும் வடமொழிச் சொல்லிலிருந்துதான் 'நிலையம்' என்னும் தமிழ்ச்சொல் நிலையா-நிலையம் பிறந்தது என வாதிட்டார். புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை குறுக்கிட்டு 'நில்' என்னும் வினை வேர்ச் சொல்லின் வழி, நிலை என்ற சொல் பிறந்தது. நிலையாக நிற்கிறாயே என்கிறோம். அது அம் விகுதி பெற்று நிலையம் ஆகியது. நில் -நிலை- நிலையம் என எடுத்துக் கூறினார்.

சிறப்பின் உயர் எல்லை

1953 முதல் 1960 வரை உள்ள காலத்தினைப் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் பொது வாழ்வின் பொற்காலம் எனலாம். ஆட்சிமொழி மாநாடு தொடங்கி 1959இல் ஆசிரியர் கல்லூரி கலைச் சொற்கள் வெளியிட்டது வரை புகழேணியின் உச்சகட்டத்தில் இருந்தார் புலவர் இ.மு.சுப்பிமணிய பிள்ளை. ஆட்சிச் சொல்லகராதி வெளியீட்டு விழா அவர் வாழ்வின் சிறப்புகளின் உயர் எல்லை எனலாம்.

தமிழ்ப் பணியில் ஓய்வில்லை

இத்தகைய சீரிய பணிகளுக்குப் பின்னரும் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தமிழ்ப் பணியில் ஓய்ந்தாரில்லை. 10-4-1959இல் அரசு அமைத்த தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப் பெற்றார். தென் மொழிகள் புத்தக நிறுவனத்தில் உறுப்பினராக நியமிக்கப் பெற்றார். தமிழகப் புலவர் குழு உறுப்பினராக நியமிக்கப் பெற்றார். ஆசிரியர் கல்லூரிச் சொல்லாக்கக் குழு அமைக்கப்பட்டபோது அக்குழுவின் செயலாளராக நியமிக்கப் பெற்றார்.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை ஆற்றிய தமிழ்ப் பணிகள் அளவிடற்கரியன. 'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாறு' 'மாவட்டக் கோயில் வரலாறு' சங்க இலக்கியம், திருவாசகம், நாலடியார், திருக்குறள் உரையாக்கம் எனப் பன்முகப் பாங்கில் அமைந்த சங்கத்தின் பணிகளிலெல்லாம் சளைக்காது ஈடுபட்டார் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை.

மறைவு

இவ்வாறு கலைச் சொல்லாக்க வல்லவராய், ஆட்சிச் சொல்லாக்க அறிஞராய், ஆட்சிமொழி மாநாடுகள் நடத்திய ஆற்றலாளராய், சைவச் செம்மலாய், தன்மான இயக்கத்தூணாய்த் திகழ்ந்து, நூல் பல எழுதிக் குவித்த புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை இறுதிக் காலத்தில் நோயுற்று 24-3-1975இல் இயற்கை எய்தினார்.

தமிழ்ப் பெரும் புலவர், கணியர், சித்த மருத்துவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை இயற்றிய நூல்கள்

இலக்கிய ஆய்வு

1.           திருக்குறள் - உலகப் பொதுமறை, 1951 மீரானிய அச்சகம், திருநெல்வேலி.

2.           இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் 1-9 பகுதிகள், (1960-66), சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி.

3.           புறநானூற்றுக் கட்டுரைகள் - நெல்லைச் செய்தி.

4.           புறநானூறு - வானநூல் - புறநானூற்றுச் சொற்பொழிவுகள்.

5.           சிலப்பதிகார காலம் - கீழ்த்திசை மாநாட்டுச சொற்பொழிவுகள்.

6.           புத்த நிர்வாண காலம் - கீழ்த்திசை மாநாட்டுச் சொற்பொழிவுகள்.

7.           தம்பிரான் தோழர்

செய்யுள்

8.           இராமாயண அகவல், 1966, சென்னை மாகாணத் தமிழ் சங்கம், நெல்லை.

9.           காந்தி சிந்தாமணி, 1949. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், நெல்லை.

10.        இராம இராவண வெண்பா (முடிவடையவில்லை) கையெழுத்துப் படி.

11.        கிருட்டிணகுமாரி-கையெழுத்துப்படி

12.        அன்பழகன் (சீர்திருத்த நாடகம்) கையெழுத்துப் படி

13.        சித்திர இராமாயணம் (முடிவடையவில்லை)

14. சாவித்திரி அகவல் - கையெழுத்துப்படி, 1948.

15.        பெரியபுராண மாலை - செந்தமிழ்ச் செல்வி

16.        சிங்கைப் பதிற்றுப் பத்தந்தாதி - செந்தமிழ்ச் சொல்வி

17.        திருமுருக வெண்பாக்கள் - கையெழுத்துப்படி

சைவம்

18.        சைவ சமயம், உலகப் பொதுச் சமயம், எஸ்.எஸ்.பிள்ளை, கணேசன் அச்சகம், தில்லை.

19.        சென்னை மாவட்டக் கோயில் வரலாறு, இந்து சமய அறநிலையத் துறை வெளியீடு.

20.        செங்கற்பட்டு மாவட்டக் கோவில் வரலாறு, இந்து சமய அறநிலையத் துறை வெளியீடு.

21.        தஞ்சை மாவட்டக் கோவில் வரலாறு, இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு.

22.        நெல்லை மாவட்டக் கோவில் வரலாறு, இந்து சமய அறநிலையத் துறை வெளியீடு.

23.        மானூர் அம்பலவாணசாமி கோவில் வரலாறு, கோயில் வெளியீடு, 1942.

24.        திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர் கோயில் வரலாறு, 1943, கோயில் வெளியீடு.

25.        கீழ்ப்பாட்டம் சாந்தன கோபால்சாமி அரங்கநாதர் கோயில் வரலாறு, 1943, கோயில் வெளியீடு.

26.        சங்கரன்கோயில் சங்கரலிங்கர் - கோமதி கோயில் வரலாறு, 1943, கோயில் வெளியீடு.

27.        வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் கோயில் வரலாறு, 1944.

28.        புளியங்குடி பாலசுப்பிரமணியசாமி கோயில் வரலாறு, 1944.

29.        சிந்தாமணி சொக்கலிங்கம் கோயில் வரலாறு.

30.        சாத்தூர் திரு.வெங்கடாசலபதி கோயில் வரலாறு.

31.        சிவசயிலம் சிவசயிலநாதர் கோயில் வரலாறு, 1944 கோயில் வெளியீடு.

32.        தென்காசி காசிவிசுவநாதசாமி கோயில் வரலாறு, 1943, கோயில் வெளியீடு.

33.        சாத்தூர் மாரியம்மன் கோயில் வரலாறு, 1943, கோயில் வெளியீடு.

34.        சேரன்மாதேவி வைத்தியநாதசாமி கோயில் வரலாறு, 1944, கோயில் வெளியீடு.

35.        விருதுநகர் சொக்கநாதர் கோயில் வரலாறு, 1943.

36.        இருக்கங்குடி மாரியம்மன் கோயில் வரலாறு, 1944, கோயில் வெளியீடு.

37.        கோயிற்பட்டி திருப்பூவனநாதர் கோயில் வரலாறு

38.        பாப்பான்குளம் இராமசாமி கோயில் வரலாறு, 1951.

39.        கங்கைகொண்டான் கைலாசநாதர் வரலாறு, 1944.

40.        லட்சுமி நரசிம்மன் கோயில் வரலாறு புளியங்குடி, (கோவில் வரலாறுகள் கிடைத்த அளவு குறிக்கப்பட்டுள்ளன).

பஞ்சாங்கக் கணிதம்

41.        ஒளிநூல் - ஒளவை நூலகம், செப்டம்பர், 1959.

42.        சைவப் பஞ்சாங்கம் - 56 ஆண்டுகள் - சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். (1919 முதல் 1925 வரை).

43.        பஞ்சாங்கக் கட்டுரைகள்

44.        திருமணம், 1949, கணேசன் அச்சகம், திருநெல்வேலிப் பாலம்.

வாழ்க்கை வரலாறு

45.        கா.சு. பிள்ளை வரலாறு, நவம்பர் 1958, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

46.        வீர சிதம்பரனார் - சிவகாமி பப்ளிசிங் ஹவுஸ்

47.        காந்தி சிந்தாமணி - 1953, 1956, 1963 உரைநடை, அல்லய்டு பப்ளிசிங் கம்பெனி, சென்னை - 1.

48.        ஐதராலி

49.        நெல்லைத் தமிழ்ப் புலவர்கள் தொகுதி - 1, சனவரி 1959, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

50.        நெல்லைத் தமிழ்ப் புலவர்கள் தொகுதி - 2, நவம்பர் 1959, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

மொழி பெயர்ப்புத் தழுவல்

51.        ரிப்வான் விங்கிள் - மார்ச் 1927, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

52.        பிரதாப முதலியார் சரித்திரம், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட்.

தன்மான இயக்கம் (சந்திரசேகரப் பாவலர்)

53.        இராமாயண ஆராய்ச்சி 1-7 பகுதிகள், முதற் பதிப்பு 1935-36, குடியரசு வெளியீடு.

54.        பாரத ஆராய்ச்சி - பாலபருவம் - குடியரசு வெளியீடு.

சொல்லாக்கம்

(சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வாயிலாக)

55.        ஆட்சிச் சொல்லகராதி, 1956, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், நெல்லை.

56.        உயர்நிலைப் பள்ளிக் கலைச் சொற்கள், 1938.

57.        ஆசிரியர் கல்லூரிச் சொற்கள், 1959.

பள்ளிப் பாடநூல்கள்

58.        எஸ்.ஆர்.எஸ். சிவகாமி பப்ளிசிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள பல பாடநூல்கள்.

59.        இளைஞர் இலக்கண வினா-விடை, மே 1969, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

60.        இளைஞர் தமிழிலக்கணம்-அக்டோபர், 1945, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

உரை நூல்கள்

61. திருமுருகாற்றுப்படை - உரையும் சொல்லடைவும், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி.

62.        நாலடியார் தெளிவுரை-கூட்டாசிரியர், தமிழ் மாநிலத் தமிழ்ச் சங்கம், 1982.

63.        பத்துப்பாட்டு தெளிவுரை. 1982.

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It