மானுடம் தான் பிழைத்துக் கிடப்பதற்கு இயற்கையோடும் தன்னைப் போன்ற மனிதர்களால் ஆன மானுட சமூகத்தோடும் பொருந்தியும் பொருதியும் உடண்பட்டும் முரண்பட்டும் இரண்டிற்கும் தகவமைந்தும் இரண்டையும் தனக்குத் தகுந்ததாய் மாற்றியும் நடத்திய போரட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களே அறிவியல் அல்லது தத்துவம். இவை ஏற்படுத்திய உணர்வுகள் விருப்பு வெறுப்புகள், ஆசாபாசங்கள், உருவாக்கிய அச்சங்கள், தந்த தைரியங்கள் ஆகியவை குறித்து சக மனிதர்களோடு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலே கலையும் இலக்கியமும். அறிவியலும் கலை இலக்கியமும் மானுட வாழ்க்கையில் இருந்து பிறப்பவையே என்பதால் அவை சுதந்திரமானவை, எஜமான்கள் இல்லாதவை. ஒரு அறிவியலாளர்க்கும் கலைஞருக்கும் அவர்களுடைய திறனும் உண்மையும்தான் நடத்துநர், இயக்குநர், வழிகாட்டி. அனுபவமும் அந்தப் புலத்திற்கென்று இருக்கும் அழகியலும்தான் அவற்றுக்கு வரம்பிட முடியும். அனுபவவ்ங்களின் தொகுப்புதான் அறிவியலும் கலை-இலக்கியமும். மார்க்சிய ஆசான்களில் ஒருவரான ஜார்ஜ் தாம்ஸன், அறிவியல் அறிதல் அனுபவம் (Cognitive Experience); கலை-இலக்கியம் உணர்தல் அனுபவம் (Affective Experience) என்பார். அதுபோல அழகியல் என்பது அழகுணர்ச்சி அல்ல; குழந்தையின் சிரிப்பு, எதிர்பாலின் உடல் கவர்ச்சி (பொதுவாகஞ் விதிவிலக்குகள் குற்றவாளிகள் அல்ல!), அருவியின் ஓங்கார வீழ்ச்சி, சுனையின் பொங்கிப் பெருகும் எழுச்சி என்பவை உருவாக்கும் அழகுணர்ச்சிகளை தூண்டும் அம்சங்களின் இருப்பு அல்ல அழகியலின் இருப்பு. அது அடிப்படையில் அந்தப் புலங்களுக்கான அடிப்படையான விதிகளை அத்துமீறிய அலங்கோலம் இல்லாமல் இருப்பதுதான்.scientists and artistsஅறிவியலும் கலை-இலக்கியமும் அடிப்படையில் சுதந்திரமானவை, கட்டுறாதவை, கலகம் விளைவிப்பவை. அவை யாருடைய ஆணையின் அடிப்படையிலும் இயங்கவியலாதவை. அப்படி அரசியலுக்கும் அரசு நலன்களுக்கும் அடிமைச் சேவகம் செய்யச் சொல்லி ஆணையிட்ட இடங்களிலெல்லாம் அவை தேங்கிப் போய் வளர்ச்சி குன்றி, அந்தச் சமூகம் தன்னைப் போன்ற ஏனைய சமூகங்களோடு போட்டியிடும் தெம்பு இன்றி சவலைக் குழந்தை சமூகங்களை உருவாக்கியதே வரலாறு. ஆனால் காலம் முழுவதும் அப்படி அறிவியலுக்கும் கலை-இலக்கியத்திற்கும் வாய்ப்பூட்டு போடும் முயற்சிகள் நடந்ததும் வரலாறுதான். ஒவ்வொரு அறிவியலாளரும் கலைஞரும் தத்தமது வழியில் இதற்கு எதிர்வினை ஆற்றுகின்றனர். தான் சொல்ல வேண்டியதையெல்லாம் எழுதி வைத்துவிட்டு, இதனையெல்லாம் தான் இறந்தபிறகுதான் பதிப்பிக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார், நிக்கோலாய் கோபர்னிக்கஸ். மடாலயத்தின் கொடி மரத்தின் கீழ் தீயிலிட்டு எரிக்கப் படும் நிலையிலும் தான் எழுதியதுதான் உண்மை என்று சொல்லி தீக்கிரையானார் ஜியார்தனோ புரூனோ. நான் சொல்லியதெல்லாம் தவறு; மடாலயம் சொல்வதெல்லாம் சரி என்று மடாலயத்தின் ஆணைக்கு அடிபணியும் வார்த்தைகளை உரக்கச் சொல்லி ‘ஆனாலும் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது' என்று மெல்லிய குரலில் கூறி அமைதி காத்தார் கலிலியோ. அவர் மறைந்து 500 ஆண்டுகள் கழித்து அவரது ஃபிளாரன்ஸ் பலகலைக் கழகத்திற்கு உரையாற்ற மடாலயத்தின் தலைவர் சென்றபோது கலிலியோவின் 20-25 ஆம் தலைமுறை மாணக்கர்கள் அவரை உள்ளே விடவில்லை என்பது சமீப கால வரலாறு. தீயும் துப்பாக்கிச் சனியன்களும் வாய்ப்பூட்டுச் சட்டங்களும் தன் காலம் வந்துவிட்ட கருத்தை அடக்க இயலாது என்பதும் வரலாறு காட்டும் பாடம்தான்.

அன்பு, பாசம், காதல், தாய்மை, நட்பு எல்லாம் எல்லாக் காலத்திலும் இருந்த உணர்வுதான். பழமையானவை என்பதால் அவை குறைவானவை என்பதல்ல. ஆனால் இருபதாம் நூற்றாண்டிற்கே உரிய உணர்வு சமத்துவ உணர்வுதான். 20, 21 ஆம் நூற்றாண்டின் கலையும் அறிவியலும் அதனைப் பிரதி பலிப்பது இயற்கையே அவற்றின் அடிப்படை இருப்பு நியாயத்திற்கு உகந்ததுவே. இருக்கின்ற சமத்துவமற்ற நிலை தொடர்வதில் தங்கள் நலனைக் கொண்டிருக்கும் சக்திகள் இத்தகைய கலை அறிவியலின் மீது சகிப்புத் தன்மையற்று வன்மம் பாராட்டுவது ஏற்புடையதல்ல என்றாலும் நாம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சாதாரணமாகத் தங்கள் புலங்களான அறிவியல் அல்லது கலை-இலக்கிய செயல்பாடுகளில் முழுகிப் போய் தங்கள் கவனம் முழுவதையும் அதில் குவித்திருக்கும் அறிவியலாளர்களும் கலை-இலக்கிய கர்த்தாக்களும் நடைமுறையின் ஜனநாயக மறுப்பு, அறமற்ற அடக்குமுறைகள், வாய்ப்பு மறுப்பு ஆகியவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பது நடக்கத்தான் செய்கிறது. விதிவிலக்குகளாக இந்த சமத்துவமற்ற எதார்த்தத்தால் பயனடையக் கூடிய பகுதிகளைச் சார்ந்தவர்களும் பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பவர்களாக, உள்ளளி பொருந்தியவர்களாக இருப்பதும் காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான். புத்தர், காந்தி, மார்க்ஸ், எங்கல்ஸ், பெரியார், அம்பேத்கர் என மகா மனிதர்களெல்லாம் தங்கள் வாழ்வு அளித்த சுகபோகங்களில் திளைக்காமல் இப்படிக் குரல் குடுத்தவர்கள்தானே?

அந்த மகா மனிதர்கள் அளவு இல்லையென்றாலும் தமது வாழ்வும் காலமும் சமகால அரசியலும் இடும் வரம்புகளைத் தாண்டி பரந்து பட்ட மக்களின் நலன்களுக்காக, சுதந்திரத்திற்காக உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படிக் குரல் கொடுப்பதால் தங்களது சொந்த நலன்களுக்கு இருக்கும் ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தும் காலம் அவர்களுக்கு இடும் கட்டளைக்கும் வாய்மைக்கும் அறத்திற்கும் பணிந்து இப்படிக் குரல் கொடுக்கும் நீதிபதிகள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், பாடகர்கள் செயல்பாடுகளை வணங்கிப் பாராட்டுவதும் அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஜனநாயக சக்திகள், ஊடகங்களின் கடமை.

எங்கே உள்ளம் அச்சம் இன்றி தலை நிமிர்ந்து   நிற்கிறதோ

எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ

எங்கே உலகம் குறுகலான துண்டுகளாக உடைக்கப்படவில்லையோ

எங்கே உள்நாட்டுச் சுவர்கள் மக்களைப் பிரிக்கவில்லையோ

எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் வெளிவருகின்றதோ

எங்கே அயராத முயற்சி பூரணத்தை நோக்கி தன் கரங்களை நீட்டுகின்றதோ

எங்கே இறந்த பழக்கத்தின் பாலைவன மணலில் பகுத்தறிவின் தெளிவான நீரோடை கலங்கித் தேங்கி அதன் வழியை இழக்கவில்லையோ

எங்கே எப்போதும் விரிவடையும் சிந்தனையில் மனம் முன்னோக்கிக் கொண்டு செல்கிறதோ

அந்த சுதந்திர சொர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்துக் கொள்ளட்டும்.

- கீதாஞ்சலி, ரபீந்திரநாத் தாகூர். 1912.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It