aanaimuthu copyமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் பெரியாரியப் பேரறிஞரும் சமூகநீதிப் போராளியுமான தோழர் வே. ஆனைமுத்து 2021 ஏப்ரல் 6ஆம் நாள் பகல் 11.45 மணியளவில் எழுபதாண்டுப் பொதுவாழ்விலிருந்து சாவின் கருணையால் ஓய்வு பெற்றார்.

தோழமைக்கு முதுமையோ அகவை வேறுபாடோ இல்லை.

வே. ஆனைமுத்து அவரை விட 25 ஆண்டு இளையவனான என்னோடும் அப்படித்தான் பழகி வந்தார். எப்போதும் அவரைத் தோழர் என்றுதான் அழைத்து வந்தேன், அவரும் தோழர் என்றோ காம்ரேட் என்றோதான் என்னை அழைப்பார். மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அவர் தொடர்ச்சியாக நடத்தி வந்த சிந்தனையாளன் ஏட்டில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவேன்.

பாவலர் தமிழேந்தி, முகிலன், வாலாசா வல்லவன் உள்ளிட்ட தோழர்கள் அனைத்து வகையிலும் அவருக்குக் கைகொடுத்துத் துணைநின்றனர், தமிழேந்தி எதிர்பாராமல் நோயில் வீழ்ந்த போதும் மறைந்த போதும் அந்த இழப்பு தோழர் ஆனைமுத்துவை எப்படித் தாக்குமோ என்பதுதான் எனக்கு ஏற்பட்ட முதற்கவலையாக இருந்தது. 

பெரியார் பெருந்தொண்டர்கள் மறையும் போதெல்லாம் அவர்களின் நினைவைப் போற்றிக் காப்பதில் தோழர் ஆனைமுத்து கவனமெடுத்துக் கொள்வார். அவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் அவர் எழுதியவையும் தொகுத்தவையும் வரலாற்று ஆவணங்கள்.

அறிவியக்கப் பேரவையில் சாலையாருடன் பணியாற்றி, பிறகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்துக்கு வந்த தோழரும் தமிழ்த் தேசம் வெளியீட்டாளருமாகிய தோழர் நாத்திக நந்தன் மறைந்த போது அவருக்கான நினைவேந்தல் நிகழ்வு மாபெபொக சார்பில் தாம்பரத்தில் நடைபெற்றது. தோழர் ஆனைமுத்துவும் நானும் அதில் கலந்து கொண்டு நந்தனாரை நினைவு கூர்ந்தோம்.

ஆண்டுதோறும் சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளிவரும். ஒவ்வொரு பொங்கல் மலரிலும் என் கட்டுரை இடம்பெறும். நான் எப்பொருள் குறித்து எழுத வேண்டும் என்பதை அவரே சொல்வார். அவரோடு ஒவ்வோர் உரையாடலும் அறிவார்ந்ததாக மட்டுமே இருக்கும். 

ஒரு கட்டுரையில் சோசலிசம் என்பதைக் குமுகியம் என்று தூய தமிழில் சொல்லியிருந்தேன். அது குறித்து என்னிடம் தொலைபேசியில் விளக்கமாகக் கேட்டறிந்தார். ஏன், ஒப்புரவு என்று சொல்லலாமே? என்று கேட்டார். 

ஒப்புரவு என்பது திருக்குறளில் போற்றப்படும் விழுமியம். சோசலிசம் என்பது குமுக வளர்ச்சிப் போக்கில் எழுந்த புதிய குமுக ஆற்றலாகிய பாட்டாளி வகுப்பின் கருத்தியல்,  திருவள்ளுவர் காலத்தில் இந்தக் குமுக வகுப்போ அதன் கருத்தியலோ தோன்ற வாய்ப்பே இல்லை. 

ஆகவே அறிவியல் நோக்கில் குமுகியத்தை ஒப்புரவு என்று அழைக்க முடியாது என்றேன். இந்த என் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார். கம்யூனிசத்தைப் பொதுவுடைமை என்பதை விடவும் பொதுமை என்பதே பொருத்தம் என்றும் விளக்கினேன். எல்லாவற்றையும் எழுதி விடுங்கள் என்றார்.

மார்க்சியம் அனா ஆவன்னா தூய தமிழ்ப் பதிப்பை வேலூரில் தோழர் குப்பன் முதலான மார்க்சிய - பெரியாரியத் தோழர்கள் விழாவெடுத்து வெளியிட்ட போது, தோழர் ஆனைமுத்துவுக்கான எல்லாச் செய்திகளையும் பேசினேன். அந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பிறகு சந்தித்த போது ”உங்கள் உரை முழுவதையும் கேட்டேன்” என்றார்.

சற்றொப்ப ஈராண்டு முன்பு அவரின் வாழ்க்கைத்துணை சுசீலா மறைந்த போது ”என் ஜென்னி மறைந்தாரே” என்று உருக்கமாக எழுதியிருந்தார். ஜென்னி என்பது கார்ல் மார்க்சின் வாழ்க்கைத் துணையின் பெயர். மார்க்சுக்காக எல்லாத் துன்பங்களையும் ஏற்றவர் ஜென்னி. 

சுசீலாவும் ஆனைமுத்துவின் பொதுவாழ்வுக்காகப் பெருந்துன்பங்கள் சுமந்தவர் என்பதை நான் உணர்ந்த போது அவரது துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அப்போது என் அன்றாட ஒலிப்பதிவான அறிவுக்குரலில் பேசினேன். அது கேட்டு அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக் குரல் உடைய நன்றி சொன்னார். 

தாம்பரத்தில் மகன் வீட்டில் தங்கியிருந்தவரை நண்பர் (முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்) பலராமனுடன் சேர்ந்து போய் நலம் வினவி வந்தேன்.

அண்மையில் கோவிட்-19 பெருந்தொற்றில் வீழ்ந்து அவர் மீண்டு வந்த போது பெருநிம்மதி உற்றோம். அந்தோ! அடுத்து சில மாத காலத்துக்குள் இந்த முடிவு வந்து விட்டது. மெலிந்த உடல்! நீண்ட வெண்தாடி! ஒருமுறை அக்குபஞ்சர் மருத்துவத்துக்குப் போயிருந்த போது ஊசி குத்தத் தசையே இல்லையே என்று மருத்துவர் கேட்டராம். 

அப்படி எலும்பும் தோலுமாக இருப்பார்! அவர் அணிந்திருக்கும் நீண்ட கருந்துண்டின் சுமை தாளாமல் ஒடிந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படும் அளவில் மணிக்கணக்கில் நின்று கொண்டே பேசுவார். இராப்பகல் எழுதிக் குவிப்பார். அமைப்புப் பணிகளிலும் குறியாக இருப்பார்.

தனக்குச் சரியெனப் பட்டதை முகத்துக்கு நேராகச் சொல்வதில் பெரியாரைப் போலத்தான் அவரும்! ஒருமுறை நண்பர்  ’அச்சமில்லை’  இறைவன் முயற்சியில் வன்னியர் மகாசங்கம் சார்பில் சில நூல்கள் வெளியிடப்பட்டன. பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது ஆனைமுத்துவால்தான் என்று அந்நிகழ்வில் பாராட்டிப் பேசப்பட்டதை அவரே மறுத்தார். 

அம்பேத்கர்தாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தவர், அவரை எப்படி அலட்சியம் செய்யலாம் என்று வன்மையாகக் கடிந்து பேசினார். அம்பேத்கர் இல்லை என்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு ஏது? என்று கேட்டார். 

பெரியார் பெருந்தொண்டராகவே அறியப்பட்டாலும் அம்பேத்கரிடம் அளப்பரிய ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் இந்த ஈடுபாடு இந்திய அரசமைப்பு பற்றிய அவரது கூர்மையான குற்றாய்வைத் தடுத்து விடவில்லை. இந்திய அரசியல் சட்டத்தை மோசடி என்றே கடுமையாகச் சாடினார்.

அரசியல் என்றால் பணத்துக்கும் பதவிக்கும் புகழுக்கும்தான் என்றாகி விட்ட இக்காலத்தில் இறுதி வரை இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர் தோழர் ஆனைமுத்து. அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை இடம்பெறச் செய்து நிலைபெறச் செய்து அதன் செயலாக்கத்தை விரிவாக்கியதில் அம்பேத்கர், பெரியார் என்ற வரிசையில் தோழர் ஆனைமுத்துவுக்கும் இடம்தர வேண்டும். 

சமூக நீதி அன்பர்கள் அவரை ’மண்டல் நாயகன்’ என்று போற்றுவதற்கு உறுதியான காரணங்கள் உண்டு. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு ஆதரவு திரட்டுவதற்காக வட மாநிலங்களிலும் ஊர் ஊராகச் சென்றவர் அவர்,

பெரியார் பெருந்தொண்டராகிய பெரியார் ஆனைமுத்து. பெரியார் சிந்தனைகளை முழுமையாக மூன்று தொகுதிகளில் தொகுத்தளித்தவர், அதே போது பெரியாரோடு கருத்து மாறுபடும் அறிவுத் துணிவு அவர்க்கிருந்தது. 

தமிழ்வழிக் கல்வி தொடர்பான பெரியார் நிலையை ஏற்க முடியாது என்றே எழுதினார். பெரியாருக்குச் சிலை வைக்க ஒப்புக் கொண்டது நாங்கள் செய்த பிழை என்றார். பெரியார் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் யாரையாவது ஆதரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தோழர் ஆனைமுத்து சமூகநீதி நோக்கில் திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளோடும் நல்லுறவு பேணினாலும் தேர்தலில் யாரையும் ஆதரிக்க மாட்டார். எப்போதும் புறக்கணிப்புதான்!

தோழர் ஆனைமுத்து தமிழ்த் தேசியத்தில் சரியான ஈடுபாடு கொண்டிருந்தார். 1996-97இல் கோவையில் தோழர்கள் கோவை ஞானி, மருதுபாண்டியன், இராமன்ராஜு, குமரவேல், இரவிராசன், முருகன் போன்றோரின் முயற்சியில் நிகழ், தமிழ் மைந்தர் மன்றம், தமிழ் இளைஞர் மன்றம் ஆகியவை ஒருங்கிணைந்த தமிழியம் சார்பில் தொடர் சொற்பொழிவுகள் நடைபெற்றன. 

தோழர்கள் பூ.அர. குப்புசாமி,  எஸ்.என். நாகராசன்,  மா,லெ,  தங்கப்பா,  கு.ச. ஆனந்தன்,  இன்குலாப்,  கி.வே. தமிழ்நாடன்,  வே. ஆனைமுத்து, பெ. மணியரசன் ஆகியோருடன் நானும் அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசினேன். 

அந்த நீண்ட பொழிவுகள் அனைத்தும் தொகுக்கப்பெற்று தமிழ்த் தேசியப் பேருரைகள் என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றன. அதே தொகுப்புடன் இன்னும் சில கட்டுரைகளையும் சேர்த்துத் தோழர் ஆனைமுத்து தமிழ்த்தேசத் தன்னுரிமை முழக்கம் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

ஒரு முறை இந்தியாவைக் கூட்டாட்சிக் குடியரசு ஆக்குவது பற்றிய அவருடைய கருத்தை மறுத்தும், தமிழ்த் தேசிய விடுதலையை வலியுறுத்தியும் அவரிடம் பேசினேன். முடிவில் “நீங்கள் அதைச் செய்யுங்கள், நான் இதைச் செய்கிறேன்” என்றார். அனைத்திந்திய அளவில் சமூகநீதிக்கான போராட்டம் என்பதில் எப்போதும் குறியாக இருந்தார். 

மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் குடியாட்சியப் பண்பு அவரிடம் இருந்தது. ஒரு முறை பாரதியாரைப் போற்றி அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் து. மூர்த்தி எழுதிய கட்டுரை சிந்தனையாளனில் இடம்பெற்றது. அதை மறுத்து தோழர் வாலாசா வல்லவன் எழுதிய கட்டுரையும் அடுத்தடுத்த இதழ்களில் வெளிவந்தது.

தோழர் ஆனைமுத்து ஒருமுறை காசுமீர் தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பது போல் சிந்தனையாளனில் எழுதி விட்டார். அதே இதழின் பின்னட்டையில் காசுமீர் விடுதலைக்கு ஆதரவான பாவலர் தமிழேந்தியின் கவிதை இடம் பெற்றிருந்தது. ஆனைமுத்துவின் கருத்தை மறுத்து வந்த மடல்களும் அடுத்த இதழில் இடம்பெற்றன.

தோழர் ஆனைமுத்துவை இழந்த மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் துயரத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பங்கு பெறுகிறது.

செவ்வணக்கம் தோழர் ஆனைமுத்து!

- தியாகு

Pin It