விளிம்புநிலை மக்களின் பாதிப்புகளை மையப்படுத்தி கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் களத்தில் பணியாற்றி வருபவர் சோ.தர்மன். பொதுமைப் படைப்பாளி. பஞ்சாலைத் தொழிலாளியாகப் பணியைத் தொடங்கி, பின் முழுநேர எழுத்தாளராகத் தனது எழுத்துலகில் பயணித்துக் கொண்டிருப்பவர். இவரது புனைவில் சிறுகதை, நாவல், குறுநாவல், ஆய்வு எனப் பரந்துபட்ட நிலையில் அமைகிறது. தான் பிறந்த மண்ணின் மனத்தை உயிரினும் மேலாக நேசித்த ஒரு பொதுமைப் படைப்பாளியாக வெளிப்படுகிறார். சூல் நாவல் அதற்குச் சிறந்த சான்றாதாரம். சூல் நாவலோடு சேர்த்து நான்கு நாவல்களையும் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஓர் ஆய்வு நூலையும் படைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி உட்பட பல அமைப்புகள் கொடுத்த விருதுகளையும் பெற்றிருப்பது நாவலுக்கும் நாவலாசியருக்கும் நன்மதிப்பளிப்பதாக அமைகிறது. இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், ஆங்கிலம் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. படைப்புகள் சில பல்கலைக்கழகப் பாடங்களிலும் பாடங்களாக உள்ளன. படைப்புகளை ஆய்வு மாணவர்கள் ஆய்வுப் பொருண்மையாகக் கொண்டு ஆய்ந்து வருவது படைப்பாளியைப் புகழின் உச்சிக்கு இட்டுச் செல்கிறது. துணை இறந்து, வேரினைத் தவிர்த்து தாயாகவும் தந்தையாகவும் வாழும் ஆயிரமா­யிரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சூல் நாவலைக் காணிக்கையாக்குவதாகக் குறிப்பிடுகிறார். இந்தப் பொதுநலச் சிந்தனை இவரை ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளராகக் காட்டுகிறது.

so dharman novel soolசூல் நாவலில் பதிவிடப்பட்டவற்றுள் சொலவடைகள், பழக்கவழக்கம், நீர்நிலைப்பாதுகாப்பு, மண்சார்ந்த மக்களின் பண்பாட்டுத் தகவல்கள், சிறுதெய்வ வழிபாடு, வரலாற்றுப் பதிவுகள், நகைச்சுவை உரையாடல்கள், காணாமல் போன நீர்நிலைகள், வேளாண்மை, ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த சில நடைமுறை வழக்கங்கள் என இப்படி பலவற்றைச் சுட்டிக் காட்டலாம். குறிப்பாக மனிதன் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளின் மீது பற்றுக்கொண்டு வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. அது வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகவும் உள்ளது. கதையினூடே மக்களின் நம்பிக்கைகள் குறித்த கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். சூல்நாவலுள் இடம்பெறும் நம்பிக்கைகள் பற்றி இவண் எண்ணப்படுகின்றது.

நாவல் உருவான கதை

இரஷ்ய எழுத்தாளர் பிரஷ்னேவ் எழுதிய ‘தரிசுநில மேம்பாடு’ என்னும் புத்தகத்தை படித்த பின் அதில் வரும் ஒரு சம்பவம் நாவலாசிரியரைச் சிந்திக்க வைத்ததாம். அச்சம்பவமே இந்நாவலை எழுதத் தூண்டுகோலாக இருந்ததாம்.

அரசனிடமிருந்து கூட்டுப்பண்ணை விவசாயிகளுக்கு ஒரு உத்தரவு வருகிறது. அந்த உத்தரவு, அரசு விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து அறிக்கை கொடுத்துவிட்டது. இன்ன இன்ன தேதியில் விதைகள் விதைக்கத் தொடங்க வேண்டும் என்பதே அவ்வுத்தரவு. விதைகளைக் கண்டிப்பாக நான்கு அங்குல ஆழத்தில் ஊன்ற வேண்டும். இவ்விதியைக் கடைப்பிடிக்காத விவசாயிகள், சோவியத் அரசாங்கத்தின் ஆணையை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது.

அரசின் உத்தரவுப்படி அனைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகளும் தங்களின் கடமையைச் செய்துவிட்டார்கள். ஒருமாதம் கழித்து பிரஷ்னேவ் தனது கிளைடர் விமானத்தில் பறந்து பண்ணை நிலங்களைப் பார்வையிடுகிறார். அப்போது எந்தவொரு பண்ணை நிலத்திலும் விதைகள் முளைத்ததற்கான அடையாளங்கள் தென்படவில்லை. கடைசியாக ஒரு இடத்தில் மட்டும் ஆச்சரியப்படும்படியாகப் பச்சைப் பசேலென்று காட்சியளித்தது. பிரஷ்னேவ் தனது விமானத்தை அந்த நிலத்தருகில் தரையிறக்கிப் பார்வையிடுகிறார். அந்த நிலத்திற்குரிய விவசாயி யாரென்று அறிந்து அவரை அழைத்துவரும்படி ஆணையிடுகிறார். அவரிடத்தில் தங்கள் நிலத்தில் மட்டும் விதைகள் எப்படி முளைத்தன என வினவுகிறார். “தோழரே விதைகளை நான்கு அங்குல ஆழத்தில் ஊன்றவேண்டும் என்பது சரி, ஆனால் இன்ன தேதியில் மழை பெய்யும் என்ற தங்களின் அறிவிப்பை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை, காரணம் என்னுடைய பூட்டன், தாத்தன், அப்பன் காலம் தொட்டு மழையின் வரவைத் தெரிந்துகொள்ள சில இயற்கை அறிகுறிகளைப் பின்பற்றுவோம், அந்த அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, தாங்கள் குறிப்பிட்டிருந்த தேதியில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் பத்து நாட்களுக்குத் தள்ளிப்போகும் என்பதையும் உணர்ந்தேன். ஆகவே தாங்கள் சொன்னபடி விதைகளை நான்கு அங்குலத்தில் ஊன்றினால், மழை பிந்துகிறபோது, விதைகளுக்குப் போதிய ஈரப்பதம் கிடைக்காமல் விதைகள் முளைப்புத்திறனை இழந்துவிடும் என்பதை அறிந்து, அதிகமாக ஒரு பத்து நாட்களுக்கு ஈரப்பதம் கிடைக்கும்படி விதைகளை ஆறு அங்குலத்தில் ஊன்றினேன். என்னுடைய கணிப்புப்படியே மழை பிந்தித்தான் பெய்தது. ஈரப்பதம் இருந்ததால் என்னுடைய வயலில் விதைகள் முளைத்து பயிர்கள் வளர்ந்துவிட்டன. பிற வயல்கள் ஈரப்பதத்தை இழந்ததால் முளைப்புத்திறன் குன்றி பயிர்கள் கருகிப் போயின.

பிரஷ்னேவ் அந்த சம்சாரியை அதே விமானத்தில் ஏற்றி லெனின் கிராடுக்கு கொண்டுபோய், விவசாயம் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொண்டதோடு, அவருடைய அனுபவ நுண்ணறிவு என்பது விஞ்ஞானப்பூர்வமான பகுத்தறிவுக்கு சற்றும் குறைந்தது என்றும் பதிவு செய்கிறார். இதுபோன்ற நுண்ணறிவு நமது தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருப்பதை நான் அறிந்தபோது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆகவே நம் மண்சார்ந்த உண்மைகளையும் பதிவு செய்யவேண்டுமென தோன்றியதன் வெளிப்பாடே இந்நாவல் என தமது நாவலில் நாவல் உருவான கதை என்று தலைப்பிட்டு குறிப்பிட்டிருக்கிறார்.

நம்பிக்கை - சொற்பொருள் விளக்கம்

மனிதன் தம் வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்புவரை பலவிதமான நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கின்றான். இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றி வாழவும் பழகிக்கொள்கின்றான். எனவே நம்பிக்கை வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

நம்பிக்கையின் வகைகள்

மனிதன் தன் வாழ்நாளில் பின்பற்றி வரும் நம்பிக்கைகள் பலவகையினவாகும். சூல் நாவலுள் மண்சார்ந்த மக்களின் நம்பிக்கைகள் குறித்து நாவலாசிரியர் கதைகளுக்குள் ஆங்காங்கு கதைமாந்தர்களின் உரையாடல்களில் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவ்வகையில் சூல் நாவலில் இடம்பெறும் நம்பிக்கைகளைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.

தெய்வ நம்பிக்கை ( சிறுதெய்வ வழிபாடு, சாமியாடுதல்)

புராண நம்பிக்கை

சோதிடத்தில் நம்பிக்கை (பட்சி ஜோஸ்யம்)

சகுனத்தில் நம்பிக்கை (காக்கை, ஆந்தை, )

பருவகால நம்பிக்கை

கை வைத்திய நம்பிக்கை

இறந்தவரை வழிபடுதலால் உண்டாகும் நம்பிக்கை

சடங்கு நம்பிக்கை

கனவு நம்பிக்கை

வேறுபிற

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தெய்வ நம்பிக்கை (சிறுதெய்வ வழிபாடு, சாமியாடுதல்)

நாட்டுப்புற மக்களின் முதன்மைக் கடவுள் சிறுதெய்வங்கள். சிறுதெய்வ வழிபாடு இவர்களிடமிருந்து உருவானதே. சூல் நாவலின் படைப்பாளரான தர்மன் தனது படைப்பில் தனது மண்சார்ந்த தெய்வ நம்பிக்கையைக் குறிக்கத் தவறவில்லை.

பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காகப் பாதுகாவலர் இருப்பார். இந்நாவலில், நீர்நிலைகளைப் பாதுகாப்பவரை நீர்ப்பாய்ச்சி, மடைக்குடும்பன் என்று குறிக்கப்படுகிறார். ஏனெனில் வட்டாரத்திற்கு வட்டாரம் சொற்களில் மாறுபாடு உண்டு. அவ்வகையில் நாவலாசிரியர் தான் சார்ந்த வட்டார வழக்குச் சொல்லையே இந்நாவலில் பயன்படுத்துகின்றார்.

நாட்டுப்புற மக்களிடம் சிறுதெய்வவழிபாடு எப்படி வழக்கில் வந்தது என்பதை நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். “அய்யனார் சாமியையும், மடைக்குடும்பன் சாமியையும் சுத்தம் பண்ணிவிட்டு துணைச்சாமியாய் எதிரில் உள்ள உடைமரத்தின் அடியில் இருக்கும் குரவன் சாமியைத் தேடிப் போனான் நீர்ப்பாய்ச்சி. குரவன் சாமியைச் சுற்றி முள் செடிகள் வளர்ந்து கிடந்தன. மண்வெட்டியால் செடிகளை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு சின்ன கற்சிலையை துடைத்துத் திரும்பவும் அதே இடத்தில் வைத்தான். குரவன் சாமி கதையை தன் தாத்தா சொன்னதை நீர்ப்பாய்ச்சி நினைத்துப் பார்க்கிறான்.

“மூன்று வருடங்களாகக் கண்மாய் அழிந்து மீன்பிடிக்க முடியவில்லை. தண்ணீர் வற்றி ஊர் சாற்றி மீன்பிடிக்க நாள் குறித்தபோதெல்லாம் கோடை மழை பெய்து மீண்டும் மீண்டும் கண்மாய் பெருகி மாறுகால் பாய்கிறது. நெல்லும், கரும்பும், வெற்றிலையும், கடலையும், பயறுகளும் வயல்களில் உப்பாய்க் குவிந்தன. மூன்றாம் வருஷம் தண்ணீர் வற்றியது. இந்த வருஷம் எப்படியும் மீன் பிடித்துவிட வேண்டும் என்று ஆலாய்ப் பறந்தனர் ஊர் ஜனங்கள். மூன்று வருடங்களாக அழியாத கண்மாயில் மீன்கள் பருத்தும் பெருத்தும் தண்ணீரும் மீனும் சரிசமமாய் நின்றன, பறவைகள் நிறைய வட்டமிட்டன. கண்மாய் அழிந்து மீன் பிடிக்கும் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. சுற்றுக் கிராமங்களுக்கும் தகவல்கள் சொல்லப்பட்டு, உருளைக்குடி கண்மாய் திருவிழாக் கூட்டமாய் மாறியது. இடுப்பளவு தண்ணீர் இருந்தாலும் மீன்கள் பெருகி விட்டதால் தண்ணீர் குறைவாய்த் தெரிந்தது. போர்க்களம் போல் காட்சி அளித்தது கண்மாய். கைவலைகளும் வீச்சு வலைகளும் கொண்டு மீன் பிடித்தனர். மீன்களை உண்ணக் காத்திருக்கும் பருந்து கூட்டம். கூட்டத்தில் மும்முரமாய் மீன்பிடித்துக் கொண்டிருந்தான் தூங்கன். மீன் நிரம்பிய வலையை தரையில் தட்டுவதற்காக வேகமாய் நீரில் நடந்தான். அவ்வாறு நடக்கும்போது குரவை மீன் நீரின் மேல் மிதந்தது. அதை ஒருகையில் பிடித்துக் கொண்டு ஒரு எட்டுதான் நடந்திருப்பான், மீண்டும் ஒரு குரவை மீன் தென்பட ஏற்கனவே கையில் வைத்திருந்த மீனை வாயில் கவ்விக் கொண்டு மிதந்து வந்த மீனைப் பிடிக்க முயன்றான். அப்போது தூங்கனைக் கண்டவர்கள் கேளி செய்தார்கள் அப்போது அவனும் சிரிக்க, வாயில் கவ்விக் கொண்டிருந்த மீன் தொண்டையில் சிக்கி மூச்சி தினறி மாண்டு போனான். அடுத்தடுத்த ஆண்டுகளில் மீன்கள் செத்து மிதந்தன. காரணமின்றி மக்கள் தவித்தனர். அப்போது அய்யன் கோயில் பூசாரி சாமியாடி, மீன்பிடிக்கும்போது தொண்டையில் மீன்சிக்கி செத்த தூங்கன் அய்யன் மேல் சாமியாக வந்து ஆடினான். என்னை வழிபடாமல் விட்டதால்தான் வருடா வருடம் மீன்கள் செத்து மிதக்கின்றன என்றான். சாமி இனிமேல் நீர்நிலை தெய்வங்களுள் உன்னையும் சேர்த்து வழிபடுகிறோம் என்று ஊரார் கூறினார்கள். சாமி உங்களை என்ன சாமின்னு வழிபடறது, குரவைச்சாமின்னு வழிபடுங்கடா என்று சாமியாடியவர் கூற அவ்வாறே செஞ்சிடறன் சாமி என்று உறுதியளித்து அன்றுமுதல் கண்மாய் காவல் தெய்வமாக உருளைக்குடி மக்கள் சிலை வைத்து வழிபட்டு வந்தார்கள்.” குரவன்சாமியை வழிபடும் வழக்கம் எங்ஙனம் வந்தது என்பதை தனது தாத்தா கூறியதை நீர்ப்பாய்ச்சி நினைவுக்கூர்ந்தான். இப்படி இறந்தவரை தெய்வமாகக் கருதி சிலைவைத்து வழிபடும் தெய்வ நம்பிக்கை மக்களிடையே பரவலாக அனைத்து கிராமப் புறங்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.   

பருவகால நம்பிக்கை

உருளைக்குடி கிராமம் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தும் கிராமம். வேளாண்மையே அவர்களது முதன்மையான தொழில். வேளாண்மைக்கு நீராதாரம் இன்றியமையாதது. பருவ மழைக்காலங்களில் சில வருடம் மிகுதியான மழை, மிதமானதும் சில வருடங்களில் பொய்த்துப் போவதும் உண்டு. பருவ மழையின் அறிகுறியை கிராம மக்கள் முன்கூட்டியே கணிக்கும் வழக்கமும் உண்டு. அவ்வகையில், நாமக்கோழி ஒரு நீர்ப்பறவை. அது நீர்பிடிப்பு மிகுதியாக இருக்கும் பகுதிகளில்தான் தனது வாழ்வாதாரம். இப்பறவைகள் நீர்நிலைகளில் தென்பட்டால் மழைமிகுதியாகப் பெய்யும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கை. நாமக்கோழியைக் கண்மாயில், சங்கிலிபய பார்த்ததாகக் காக்கயைன் என்பவன் ஊராரிடம் சொல்ல, அப்போது சங்கிலி என்பானிடம் ஊரார் வினவும்போது சங்கிலி, ஆம் நாமக்கோழியைப் பார்த்ததாகச் சொல்கின்றான், “நாமக்கோழியின் வரவு என்பது ஒரு பறவையின் வரவு மட்டுமல்ல கிராமத்தின் செழிப்பையும், அவ்வருட வெள்ளாமையின் உத்திரவாதத்தையும் மழை அதிகரிப்பையும் நீர்நிலைகளின் நிரம்பலையும் உறுதி செய்து கிராம மக்களின் சந்தோஷத்தையும் குதுகலத்தையும் கொண்டு சேர்க்கும் வரவாகும். சங்கிலிப் பயலைச் சுற்றிலும் ஆட்கள் கூடி நின்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மழைக் காலத்தில் மட்டுமே அபூர்வமாகக் காணப்படும் நாமக்கோழி சாமன்யமாக யாருடைய கண்ணிலும் தட்டுப்படாது. எல்லா சம்சாரிகளும் நாமக்கோழியைக் காண காத்திருப்பார்கள். ஏகதேசம் ஒன்றிரண்டு பேர் கண்களில் தட்டுப்படும். இந்த வருடம் முதலிலேயே தட்டுப்பட்டுவிட்டதால் சம்சாரிகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வெள்ளாமைகள் வீடு நிறைந்தது மாதிரிதான்” என உருளைக்குடி மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

நம்பிக்கை என்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு மரபு. நீர்ப்பறவை நீர்நிலையில் தென்பட்டதை வைத்து; கிராமமக்கள் கண்மூடித்தனமாக இதை எண்ணாமல் உண்மையாக மழைப்பொழியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். இது காலங்காலமாக அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அதே சமயம் உண்மையாக நடந்தேறியும் இருக்கிறது. படிப்பறிவில்லாத நாட்டுப்புறமக்களின் இந்த நம்பிக்கை மூடத்தனமானது என்று கூறவும் முடியாது. ஏனெனில் அதை அவர்கள் காலங்காலமாகக் கண்கூடாகப் பார்த்தும் வந்திருக்கிறார்கள். படைப்பாளன் தனது மண்சார்ந்த நிகழ்வினை படைப்பின்வழி வெளிப்படுத்தியிருப்பது மண்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு என்பதைக் காட்டுகிறது.

தூக்கணாங்குருவிக் கூடுகளில் கீழ்பக்கம் உள்ள வாசல் போக, பக்கவாட்டில் ஒவ்வொரு கூட்டிலும் ஒருவாசல் இருக்கும். இந்தப் பக்கவாட்டு வாசல்கள் தெற்குப் பக்கம் பார்த்தபடி பெரும்பான்மையாக இருந்தால் அந்த வருடம் வடகிழக்குப் பருவமழை மிகுதியாகப் பொழியும் என்று தூக்கணாங்குருவியின் கூட்டினைக் கொண்டு முன்கூட்டியே பருவகால மாற்றத்தையும் மக்கள் அறிந்திருந்தனர்.

மருத்துவ நம்பிக்கை

மருத்துவம் வளர்ச்சியடையாத காலகட்டத்திலும், வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்திலும் கிராமப் புறங்களில் இன்றளவும் கைவைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் என்று சொல்லும் மருத்துவம் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நாவலில் நாவலாசிரியர் சோ.தர்மன் தன் மண்சார்ந்த மக்களிடமிருந்த பாட்டி வைத்திய முறையை கதைமாந்தர் உரையாடல்களின் மூலம் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறு சொல்லப்பட்ட மருத்துவ நம்பிக்கைகளாக,

சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் காயத்தின் மீது எச்சில் தடவினால் காயம் சரியாகிவிடும்,

ஊமந்தங்காயை அறைத்துத் தலையில் தேய்த்தால் பைத்தியம் தெளியும்

புலியங்காயைத் தீயில்சுட்டு அதிலிருந்துவரும் பசைப் போன்ற குழம்பை சேற்றுப் புண்ணில் தடவினால் புண் சரியாவிடும்.

முயல் இரத்தம் தலையில் தேய்த்தால் தலைமுடி கருகருனு வளரும்.

எனக் கைவைத்தியம் சார்ந்த நம்பிக்கைகள் மக்களிடம் காணப்பட்டமையைக் கதைகூறும் போக்கில் சொல்லிச் செல்கிறார்.

முடிவுரை

சூல் நாவலுள் தெய்வ நம்பிக்கை ( சிறுதெய்வ வழிபாடு,சாமியாடுதல்), புராண நம்பிக்கை, சோதிடத்தில் நம்பிக்கை (பட்சிஜோஸ்யம்) சகுணத்தில் நம்பிக்கை (காக்கை, ஆந்தை,) பருவகால நம்பிக்கை, கை வைத்திய நம்பிக்கை, இறந்தவரை வழிபடுதலால் உண்டாகும் நம்பிக்கை, சடங்கு நம்பிக்கை, கனவு நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் பரவலாகக் காணப்படுகின்றன.

இவற்றின் மூலம் மக்களின் வாழ்வியலை நன்கு அறிதற்கு ஏதுவாக உள்ளது. குறிப்பாக நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது.

மனித வாழ்வியலுக்கு நம்பிக்கைகள் பெரும் ஆறுதல் தரும் ஒரு வடிகால் எனக் கூறலாம்.

மட்டுமின்றி, தொன்றுதொட்டு நடைமுறை வாழ்க்கையில் நம்பிக்கைகள் வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

அவைகளுள் சில மூடநம்பிக்கை சார்ந்ததாகவும், சில நம்பிக்கைகள் காலச்சூழலுக்கு நன்மை தரும் விதமாகவும் உள்ளது.

குறிப்பாகப் பாவச் செயலுக்கு மரங்களை வளர்த்தால் பாவச் செயலிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையைத் தந்து, காலத்திற்கு ஏற்ப சுற்றுச் சூழலின் இன்றியமையாமையையும், அதனால் நாடு வளம்பெறும் என்ற நற்சிந்தனையும் சூல் நாவலில் விதைக்கப்பட்டு, சூல்கொண்டு விளங்குகிறது.

பயன்கொண்ட நூல்கள்

1.           தர்மன் சோ, சூல் நாவல், அடையாளம், திருச்சிராப்பள்ளி, பதிப்பு - 2016.

2.           மீனாட்சிசுந்தரம் மா, நாட்டுப்புற நம்பிக்கைகள், விஜயா பதிப்பகம், பதிப்பு -2019

3.           கழனியூரன், நாட்டுப்புறத்து நம்பிக்கைகள், அன்னம் வெளியீடு, தஞ்சை..

- ச.கண்ணதாசன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், சென்னை -72.

Pin It