கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் 30.7.2008 புதன் 6 மணியளவில் சென்னை இராயப்பேட்டையில் கழக சார்பில் தொடங்கின. முதல் நிகழ்ச்சியாக இராயப்பேட்டை வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பகுத்தறிவு திரைப்படக் காட்சிகள் திரையிடப்பட்டன. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். சு.பிரகாசு தலைமை தாங்கினார்.

காவடி தூக்கிய தமிழா! இதுவா உன் கதி!

கோவில் திருவிழாவில் வேல் காவடி எடுத்து விட்டு திரும்பிய வாலிபர், ஆட்டோ கவிழ்ந்ததில் உடலில் ஏராளமான வேல்கள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொருக்குப்பேட்டை ஜமால் சவுக்கார் தெருவைச் சேர்ந்தவர் தீனன். இவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் பம்ப் ஸ்டவ் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.

தீனன் தீவிர கடவுள் பக்தர் ஆவார். இவர் அம்மன் கோவில் திருவிழாக்களில் உடலில் வேல், அலகு குத்தி காவடி எடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடை பெற்றது. அந்த விழாவில் காவடி எடுப்பதற்காக தீனன், தனது நண்பர்கள் வேலு, நந்தகுமார், வரதன், ராஜேந்திரன், ஜோதி ஆகியோருடன் ஷேர் ஆட்டோவில் சென்றார்.

அங்கு சென்றதும் காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். பின்னர் தீனன், காவடியில் இருந்த வேல் கம்புகளை தனியாக எடுத்து ஆட்டோவின் பின்னால் வைத்துக் கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டார்.

விழுப்புரம் அருகே கூட்டேரிப்பட்டு மெயின் ரோட்டில் ஆட்டோ வரும்போது ரோட்டில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக் கற்கள் மீது திடீரென ஏறி இறங்கியது. இதில் ஆட்டோ நிலை தடுமாறி ரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தீனனின் உடலில், தனியாக கட்டி வைக்கப்பட்டு இருந்த வேல் கம்புகள் தாறுமாறாக குத்தின. வயிறு, மார்பு, கழுத்து, முகம் என பல இடங்களில் குத்தி துளைத்தன. இதில் தீனன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

- ‘தினத்தந்தி’ சென்னை 21.7.2008

குஞ்சிதம் அம்மையார் நூற்றாண்டு தொடங்கியது

சுயமரியாதை வீராங்கனையும், குத்தூசி குருசாமியின் துணைவியருமான குஞ்சிதம் அம்மையாருக்கு, வரும் 2009 ஆம் ஆண்டு நூற்றாண்டாகும். 1909 ஆம் ஆண்டு ஜூலை 7 இல் திருவாரூரில் பிறந்தவர். பள்ளிக் கல்வியை சென்னை ஜியார்ஜ் டவுனில் உள்ள டேஸ் ஸ்கூலிலும் கல்லூரிப் பட்டப் படிப்பை ராணி மேரி கல்லூரியிலும் படித்தவர். ‘இசை வேளாளர்’ என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த குஞ்சிதம் - 1929 ஆம் ஆண்டில் பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியார், பொன்னம்பலனார், இராமாமிர்தத்தம்மையார் ஆகியோர் குத்தூசி குருசாமிக்காக அவரை பெண் பார்க்கச் சென்றனர்.

குத்தூசி குருசாமி வைதீகத்தில் ஊறிய தொண்டை மண்டல முதலியார் சமூகத்தில் பிறந்தவர். சாதி மறுப்புத் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தவர். தனது சாதி வெறி எதிர்ப்புகளை புறந்தள்ளினார் குருசாமி. ‘குஞ்சிதம்-குருசாமி’ திருமணத்தை பெரியாரே பெயரில் அழைப்பிதழ் அச்சிட்டு 8.12.1929 இல் ஈரோட்டில் பெரியார் இல்லத்திலே மாநாடு போல் நடத்தினார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த புரட்சிகர திருமணத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய பெரியார், திருமணத்துக்கு முதல் நாள் மணமகள் குஞ்சிதத்தை கோச் வண்டியில் அமர்த்தி, ஈரோடு நகரின் பெரிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வர ஏற்பாடுகளை செய்தார்.

அடுத்த நாள் காலையில் வாழ்க்கை ஒப்பந்தம் முடிந்த நிலையில், அன்று மாலையே ஈரோடு, சாரைவாய்க்கால் தெருவில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, மக்களைத் திரட்டி, இந்த புரட்சிகர சாதி மறுப்பு மணமக்களை அழைத்துப் பேச வைத்து, தானும் பேசி, மக்கள் மன்றத்தில் சுயமரியாதை சாதி மறுப்புத் திருமணத்தை அறிமுகம் செய்தார். கூட்டத்தில் பெண்ணுரிமையை வலியுறுத்தி, மணமகள் குஞ்சிதம் ஆங்கிலத்தில் பேசியதை சுயமரியாதை வீரர் ஜே.எஸ்.கண்ணப்பர் தமிழில் மொழி பெயர்த்தார்.

புரட்சிகர - சாதி மறுப்பு - சுயமரியாதை வீராங்கனையாக வாழ்ந்த குஞ்சிதம், 1961 ஆம் ஆண்டில் முடிவெய்தினார். குஞ்சிதம் அம்மையாரின் நூற்றாண்டு விழா சென்னை காமராசர் சாலையிலுள்ள பல்கலைக்கழக இணைப்பு வளாகத்தில் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் 29.7.2008 அன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.

குஞ்சிதம் அம்மையார் நூற்றாண்டின் முதல் நிகழ்ச்சியாக நடந்த இந்த விழாவில் துறைத் தலைவர் பேராசிரியர் அரசு தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஓவியா, வ.கீதா, முனைவர் வளர்மதி ஆகியோர் குஞ்சிதம் அம்மையார் பற்றி பேசினார்கள். குஞ்சிதம் அம்மையாரின் உரைகள் படிக்கப்பட்டன.

Pin It