அலெக்சாந்தர் மிகைலோவிச் துபியான்ஸ்கி அவர்கள் 2000 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதிய “Ritual and Mythological Source of Early Tamil Poetry” (பண்டைத் தமிழ் இலக்கியங்களின் சடங்கியல் தொன்மவியல் மூலங்கள்) எனும் நூலின் தமிழாக்கமாக ”திணைக் கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும்” என்ற தலைப்பில் மொழி பெயர்ப்பு நூலாக பு.கமலக்கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தாரால் கடந்த ஜனவரி 2024 இல் வெளியிடப்பட்டுள்ளது. 316 பக்கங்கள் உடைய இந்த நூல் சென்னை பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட் சார்பில் தரமான தாளில் அச்சிடப்பட்டு உள்ளது.

அலெக்சாந்தர் துபியான்ஸ்கி   

தமிழ் குறித்து நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை மூல நூலாசிரியர் துபியான்ஸ்கி வழங்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இவர் வாசித்தளித்த கட்டுரைகள் பெரிதும் பேசப் பெற்றன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு சம்ஸ்கிருதமே மூலம் என்ற வாதத்தை என இவர் இம்மாநாட்டில் உறுதிபட மறுத்தார். 1941 ஆம் ஆண்டு பிறந்த இவர் தம் 79 ஆம் வயதில் கோவிட் நோய்த் தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டு காலமானார்.

kamalakannan translationஇந்த மொழிபெயர்ப்பு நூலின் பிற்சேர்க்கையாக, புது டெல்லி ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிலைத் தமிழ்த்துறை கடந்த 18.11.2023 அன்று நடத்திய பேராசிரியர் ”அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மூன்றாமாண்டு நினைவு ஆய்வு அமர்வு” இன் போது அவர் மகள் முனைவர் டாட்யானா துப்யான்ஸ்கா தன் தந்தை தமிழ் படித்ததற்கான காரணம் பற்றி ஆற்றிய உரையின் சுருக்க வடிவம் வழங்கப்பட்டுள்ளது.

“பேராசிரியர் துபியான்ஸ்கி 1965 ஆம் ஆண்டு மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக கீழைத்தேய மொழிகள் நிறுவனத்தில் இணைந்தார். அந்நிறுவனத்தின் அன்றைய துறைத்தலைவரின் வழிகாட்டுதலால் தோன்றிய தமிழ்க்காதல் துபியான்ஸ்கியை அவர் வாழ்வு முழுவதும் பற்றிக் கொண்டது. தமிழ் கற்கும் காலத்திலேயே இத்தமிழுலகம் கற்பனை செய்ய முடியாத வண்ணம் அழகானது என்பதையும் புதிய திறப்புக்களை உடையது என்பதையும் துபியான்ஸ்கி உணர்ந்திருந்தார். அக்காலத்தில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் சிலர் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் துபியான்ஸ்கி. எனினும் இந்தியா வருவதற்கான சூழல் கனியாத கட்டத்திலுங்கூட அவர் சுமார் 14 ஆண்டுகள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கற்றார். முனைவர் பட்ட மேலாய்வுக்கு இந்தியா வரும் வாய்ப்பு அவருக்கு 1978 ஆம் ஆண்டு கிடைத்தது.

அவர் தமிழகத்தில் முதன் முறையாகக் காலடி வைத்த போது “நான் எனது வீட்டில் இருப்பதாக உணர்கிறேன்” என தன் குடும்பத்தாருக்குக் கடிதம் எழுதினார். தமிழ் நாட்டில் தான் தங்கியிருந்த காலத்தில் தான் ஏற்கனவே அறிந்த தகவல்களை அவர் மறு கண்டுபிடிப்புச் செய்து கொண்டார். 1978 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உலக அளவிலான மானிடவியல் கருத்தரங்கம், 1979 ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பகோணத்தில் நடைபெற்ற திருவாசகம் குறித்த கருத்தரங்கம் ஆகியவற்றில் அவர் பங்கு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பங்கேற்க மீண்டும் தமிழகத்திற்கு வருகை புரிந்தார். தமிழ்நாட்டிற்கு ரஷ்ய இளந்தலைமுறையினரை கூட்டி வந்து இந்த தமிழ் நிலத்தின் மாண்புகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்தார். இவர்தம் தமிழ்க் காதலின் பொறிகள் இவர்தம் மாணவர்களின் இதயங்களிலும் விழுந்து வளர்ந்து கொண்டிருக்கிறது”.

மொழிபெயர்ப்பாளரின் ‘கால்கோள்’

இந்த மொழிபெயர்ப்பு நூலின் முகப்பாக, “கால்கோள்” என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பாளர் திரு.பு.கமலக்கண்ணன் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. திரு.பு.கமலக்கண்ணன் முன்னரே ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை ”தமிழ்ச் செவ்விலக்கியங்கள்” தமிழ்-சமஸ்கிருத செவ்விலக்கிய உறவுகள்” என்ற பெயரில் என்சிபிஹெச் நிறுவனத்தார் மூலம் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு தாய்த்தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தம் மொழிபெயர்ப்பு நடை மூலத்தின் கடின முடிச்சுகளை எளிய தமிழில் வழங்கும் பெருமைக்கு உரியது ஆகும். “Ritual and Mythological Source of Early Tamil Poetry” என்ற இந்த மூல நூலைப் பெறுவதற்கு, மூன்றாண்டுகளாக தாம் மேற்கொண்ட முயற்சியையும், பின்னர் இதனைக் குறுகிய காலத்திற்குள் மொழிபெயர்த்துப் பதிப்பிப்பதற்கு தாம் மேற்கொண்ட முயற்சியையும், இதற்கு பல்வேறு தரப்பினர் நல்கிய ஒத்துழைப்பையும் மொழிபெயர்ப்பாளரான பு.கமலக்கண்ணன் அவர்கள் இக்கட்டுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயங்கொண்டார் என்ற நிக்கோலாய் கோர்டியூக்

தமிழ் மொழிபெயர்ப்புக்கான அறிமுகவுரையை துபியான்ஸ்கியின் நேரடித் தமிழ் மாணவர் முனைவர் ஜெயங்கொண்டார் என்ற பெயர் புனைந்து கொண்ட ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நிகோலாய் கோர்டியுசுக் அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கியுள்ளார். அந்த அறிமுகவுரையை தமிழில் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்.

“அலெக்சார்ந்தர் மிகெலோவிச் துபியான்ஸ்கி அவர்கள் 1970களில் முனைவர் யூலியா அலிக்னோவா அவர்களின் வழிகாட்டுதலில் வழங்கிய “SITUATION OF SEPARATION IN OLD TAMIL POETRY (Mullai thinai”) என்ற முனைவர் பட்ட ஆய்வுரையின் நீட்சியாக இந்த மூல நூல் 1989 ஆம் ஆண்டு முதன் முதலில் ருஷ்ய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் செழுமையும் விரிவாக்கமும் கூடி பின்னர் 2000 ஆம் ஆண்டு, இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. துபியான்ஸ்கி சங்க இலக்கியத்தில் காணப்படும் புனித ஆற்றல்களான அணங்கு, கடவுள் போன்ற கருத்தாக்கங்கள், முருகன், திருமால், சூர், கொற்றவை போன்ற தமிழ்க் கடவுளர்கள் மற்றும் பாடல்களில் காணப்படும் சடங்குகளில் பிரதிபலிப்பதைக் குறித்து, சமூக மானிடவியல் எனும் பார்வையில் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கினார் துபியான்ஸ்கி.

ஒரு புறம் சங்க காலத் தமிழகத்தின் சமய யதார்த்தத்தை மறு கட்டுமானம் செய்யவும் மறுபுறம் சடங்கு மற்றும் தொன்மவியல் கூறுகளின் அடிப்படையில் பாடல்களுக்கு விளக்கம் தேடவும் என இரு முனைகளில் இந்த தமது நூலில் துபியான்ஸ்கி முற்பட்டார். தமிழ்க் கவிதைகளில் குறிப்பிடப்படும் பல பொருட்கள், உதாரணமாக, வேங்கை மரம் முருகனையும், குறிஞ்சி மலர் பூப்பெய்தும் பெண்மையையும் என, குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை என அவர் கருதினார். சங்க இலக்கியத்தைத் தீவிரமாகப் பயில விரும்பும் தமிழ் மாணவர்கள் வாசித்தே தீர வேண்டிய நூலாக இந்த நூலை துபியான்ஸ்கி படைத்துள்ளார்”.

இந்த நூல் நான்கு இயல்களைக் கொண்டுள்ளது.

1.           தொன்மவியல் பின்னணி (MYTHOLOGICAL BACKGROUND)

2. பண்டைத் தமிழ்க் கவிதை மரபும் அதைத் தோற்றுவித்தவர்களும் (ANCIENT TAMIL POETIC TRADITION AND ITS CREATORS)

3.           அகச்சூழல்களும் கதை மாந்தர்களும்:சடங்கியல் புராணவியல் மூலங்கள் (The love situations and Heroes: Ritual and Mythological Sources)

4.           கவிதையியல் இலக்கணமும் நாட்டுப்புறவியலும் (The poetical Canon and Folklore) நூலின் துணைக் கட்டுரைகளும் பின்ணிணைப்புகளும் நூலின் பொருள் குறித்தும் உசாத் துணை நூல்கள் குறித்தும் பல வைவரங்களைக் கூறுகின்றன. தொன்மவியல் பின்னணி (MYTHOLOGICAL BACKGROUND)

தமிழகத்தின் நிலப் பரப்பு பற்றிய வரையறை, வரலாறு பற்றிய குறிப்புகள் எனத் தொடங்குகிறது இந்த இயல். போர் வெற்றிகளும் வாணிகத்தின் வாயிலாக கொண்டு வரப்படும் இலாபங்களுமே பண்டையத் தமிழ் மன்னர்களுக்கு கனிசமான நிதி ஆதாரங்களாக அமைந்தன. பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விவசாயமே இருந்துள்ளது. மதுரை, உறையூர், வஞ்சி, புகார், கரூர், தொண்டி, கொற்கை போன்ற நகரங்கள் வாணிகத்திற்கும் பண்பாட்டிற்குமான மையங்களாக இருந்தன.

வேதங்கள், வே வட இந்தியாவின் தாக்கத்தை பெரிய அளவில் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமது வட இந்திய எதிரிணையைப் பிரதிபலிக்க வேண்டுமென தமிழ் மன்னர்கள் ஆர்வங் கொண்டிருந்ததால் உயர்ந்த வேத வேள்விகளை ஏற்படுத்தினர்.

தனித்தன்மையான புனிதம் என்பதும் அணங்கு என்பதும் ஆன கருத்தாக்கம் தமிழ்ப் பண்பாட்டிற்கு மிகவும் முதன்மையானதாகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றானதாகவும் அமைகிறது.

பொதுவாக, பெண்ணே அணங்குடன் தொடர்புடையவராக அமைகிறார். அணங்கு சில குறிப்பிட்ட கருத்துக்களை விளக்கவும் பயன்பட்டது. இறுதியாக, அணங்கு கடவுளரிடமும் உறைகிறது. அணங்கு என்பது எப்போதும் அழிவுகரமானதாக அபாயமானதாக தீங்கிழைக்கக் கூடியதாக அமையவில்லை என்பதை அறிய முடிகிறது. சில சூழல்களில், அணங்கு நன்மையை உண்டாக்கும் ஆற்றலைக் குறிப்பதாகவும் கடவுளர் மற்றும் மனிதர்களின் எதிரிகளை அழிப்பதாகவும் அமைகிறது. அணங்கு என்னும் சொல்லில் இருந்து இரு பொருள்களைப் பெறலாம். அவை, “உள்ளுறையும் ஆற்றல்” “ஆவி அல்லது கண்டறிய முடியாத இறை” என்பனவாகும். அணங்கு என்பதை இயற்கையிகழ்ந்த மீவியல்பு ஆற்றலாகப் பார்ப்பதைக் காட்டிலும் இயற்கை சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதற்குக் காரணங்கள் உள்ளன.

பண்டைத் தமிழ்ப் பண்பாடு அணங்கைப் பெண்ணின் ஆற்றலோடு தொடர்புபடுத்தி முதன்மையைத் தந்துள்ளது. பெண்ணுக்குள் உறைந்துள்ள வளமையின் ஆற்றலாக அவளைக் காட்டிலும் அவளோடு மணவுறவு கொண்டுள்ளவர்களுக்கு மிகுந்த மதிப்பைத் தருவதாக அமைகிறது. திராவிடக் குடும்பத்தில், பெண், மைய இடம் வகித்து அவள் தந்தை, கணவன், உடன் பிறந்தவன், மகன் ஆகியோரின் நல்விளைவுகளுக்கு மூலமாக அமைகிறாள். பெண்ணுக்குள் உறைந்திருக்கும் இத்தகைய ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் தமிழ்ப் பெண் கடவுளான கொற்றவையிடம் காணப்படுகின்றன.

வியப்பளிக்கும் வகையில் தமிழ்ப்பண்பாடு, வெம்மையோடு தொடர்புடைய நிலைகளை விளக்க வண்ணத் திட்டம் ஒன்றையும் பயன்படுத்துகிறது. தீ, செந் நிறத்தோடும், குளிர்ச்சி, வெண் நிறத்தோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன. பாலை நிலத்தின் முதன்மைப் பண்புகளான இறப்பு, குருதி, வருத்தம், வறட்சி, தீ ஆகியன யாவும், ”வெம்மை” என்னும் கருத்தாக்கத்தைத் தெளிவாக விளக்குகின்றன. இதன் வழி, இவை அணங்கு என்பதோடு தொடர்புடையன ஆகின்றன. தமிழ் மரபின் அடிப்படையில், கொற்றவை பாலை நிலத்துக்குரியவளாக அமைகிறாள். இத்தேவியின் பண்பைக் குறிக்கும் மற்றொரு துணைக் கருவான, “அவளது நிரந்தரக் கன்னித் தன்மை” என்னும் புராணம் இங்குக் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. பண்டைத் தமிழ்க் கருத்தாக்கத்தில், கன்னித்தன்மை அதீத ஆற்றலுடையதாக, ஆக்கம், அழிவு ஆகிய இரண்டிற்கும் உரிய மாபெரும் திறத்தைக் கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது. புராணவியல் மனம், கன்னிக் கடவுளான கொற்றவை, முருகன் என்னும் மகனைப் பெற்றெடுத்தாள் என்னும் கருத்தை முரணாகக் கண்டு கொள்ளவில்லை.

முருகனின் (சேயோன்) ஆற்றல், சிவப்பு வண்ணத்தோடு, அவன் தொடர்புபடுத்தப்படுவதன் வழி வெளிப்படுகிறது. முருகனின் முதன்மைக் குறியீடான அவனது வேல், செந்நிற முனையைக் கொண்டது. முருகன் எங்கும் நிறைந்தவனாக, காட்டிலும், சந்திகளிலும், ஆறுகளிலும், குளங்களிலும் கடம்ப மரங்களிலும், விழா நடைபெறும் இடங்களிலும், கந்துகளிலும் உறைபவன். மலையில் உறைய விரும்பும் இவனது விருப்பமும் வெளிப்படுத்தப்படுகிறது. முருகன் மலை வேடர்கள் இனக்குழுவின் வளமைக் கடவுளாக அமைகிறான். முருகனுக்கும் மலைக்குமான தொடர்பு, மலைவாழ் வேடர்களுடனான இவனது உறவு, யானையை வாகனமாகக் கொள்ளுதல், வள்ளியுடனான காதல், முழு இந்தியத் தன்மை பெற்றிருக்கும் ஸ்கந்தனின் பண்பாக அமையவில்லை.

முருகனுக்குரிய முதன்மை எதிரியாக சூர் அல்லது சூரபத்மன் அமைகிறான். இவர்களுக்கு இடையிலான போர் பற்றிய விரிவான செய்திகளைப் பாடல்களோ, தொகைகளில் இடம் பெறும் செய்யுட்களோ குறிப்பிடவில்லை. இது பற்றிய முழுமையான, சரியான தகவல்களை மிகப் பிற்காலத்தில் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட ஸ்கந்த புராணம் கொண்டுள்ளது. கந்தபுராணச் செய்திகள் புராணிக மரபைச் சேர்ந்த ஸ்கந்தன் பற்றிய தகவல்களை அதிக அளவில் கொண்டுள்ளது. சூரனின் மாமர வடிவ உருவகத்தின் மீதான முருகனின் போர் என்பது, நீண்ட காலத்திற்கு முன்பே வழக்கிழந்து விட்ட திராவிட பிரபஞ்சத் தோற்றத் தொன்மத்தைக் குறிப்பதாக அமைகிறது என்றும் ஒரு கருத்து உண்டு.

திருமால் முல்லை நிலத்திற்கு உரியவராகக் குறிப்பிடப்படுகிறார். பசுமையான மலைகளாலும், புல்வெளிகளாலும் அமைந்த இப்பகுதி தமிழ் மரபில், மழைக்காலத்தோடு தவிர்க்க முடியாதபடி இணைத்து விளக்கப்பட்டுள்ளது. வேறொரு புராணவியல் மரபைச் சேர்ந்த கிருஷ்ண- விஷ்ணு வழிபாட்டு மரபோடு, மாலின் கலத்தல் என்பது தொகை, பாடல் ஆகியவற்றின் மூலப் பிரதி தொகுக்கப்படுவதற்கு முன்பாகவே இடம் பெற்றிருத்தல் வேண்டும். மலைகளுக்கும் வேடர்களுக்கும் கடவுளான செவ்வேள், அடர் பச்சை மேய்ச்சல் நிலங்களுக்கும் ஆயர்களுக்கும் கடவுளான கரிய திருமால் ஆகியோரிடம் பண்டைய திராவிட முதன்மை வழிபாட்டு மரபை நாம் உறுதியாகக் காணலாம்.

தமிழ்ப் புராணங்கள் யாவும் தனித்த பருவ காலம், பாலியல் தொடர்பான பொருட்கள், குறிப்பிட்ட சூழல்கள் ஆகியவற்றைக் கொண்டு ஏதோ ஒரு வகையில் இந்த ஆற்றலின் குறிப்பிட்ட நிலைகளில் இணைந்துள்ளன. பண்டைத் தமிழர்களின் உலகப் பார்வை குறிப்பாக, அவர்களின் புராணவியலும் சமயக் குழுக்களும் தென்னிந்தியாவில் அறுவடை செய்யப்பட்ட ஆற்றல் கருத்தாக்கத்தால் பெரிதும் தீர்மானிக்கப்பட்டவையாக அமைந்தன.

பண்டைத் தமிழ்க் கவிதை மரபும் அதைத் தோற்றுவித்தவர்களும்

பண்டைத்தமிழ்க் கவிதைகளை ஆராயும் ஒருவரால் அக்கவிதை மரபு தனது மூலங்களாக அடையாளப்படுத்தும் ”சங்கப் பழங்கதை” யைப் புறக்கணிக்க இயலாது. சங்கக் கதையின் முதல் வடிவம் காலத்தால் பிற்பட்ட திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரரின் இறையனார் அகப்பொருள் உரையில் இடம் பெறுகிறது. உரைப்பிரதி குறிப்பிடும் செய்திகளின் அடிப்படையில் சங்கத்தைத் தோற்றுவித்த கடவுளர்களான சிவன், முருகன் ஆகியோருடன் வேத கால முனிவர் அகத்தியரும் இணைக்கப்படுகிறார். நக்கீரரின் உரையைத் தவிர்த்து சைவப் புலவரான அப்பர் வைணவத் திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் பாடியுள்ளனர். சங்கம் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்று சின்னமனூரில் கிடைத்துள்ளது. இந்த சான்றுகள் யாவும் இலக்கியத்தோடு தொடர்புடைய ஓர் அமைப்பு தமிழ் நாட்டில் இருந்தது என்பதை உறுதிப்படுத்தினாலும், அதைத் தெளிவற்ற நிலையிலேயே விளக்கியுள்ளன. மதுரையை விவரிக்கும் புராணங்களும், பிறவும், (நக்கீரரின் உரையைத் தவிர்த்து) ஒரே ஒரு சங்கத்தையே குறிப்பிடுகின்றன. இவற்றில் ஏனைய இரு சங்கங்கள் பற்றிய செய்திகள் மொத்தமாக விடுபடுகின்றன. இதன் வழி முதல் இரு சங்கங்கள் பற்றிய செய்திகள் மொத்தமும் பழங்கதை என்பதை அறிய முடிகிறது. சங்கப் பழங்கதையை, தற்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தாலும் தமிழ் மொழி மற்றும் அதன் கவிதையின் வளர்ச்சிக்கு மதுரையின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை விளக்கும் வகையில் சான்றுகள் கிடைக்கின்றன. சங்கம் என்பதை கி.பி.470 ஆம் ஆண்டு வஜ்ர நந்தி என்பவரால் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட “திராவிட சங்கம்” என்பதோடு அடையாளப்படுத்தலாம்.

சங்க மரபு வாய்மொழி நிகழ்த்துதலை மையமிட்டதாக இருந்துள்ளது. தொகைகளிலும் பாடல்களிலும் எவ்விதப் பாடல் பிரதியும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டமை குறித்தோ அல்லது ஏற்கனவே எழுத்து வடிவில் இருந்தமை குறித்தோ ஒரு பதிவும் இடம் பெறவில்லை. தொகையிலும் பாடலிலும் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கவிதைத் துண்டும் பாடல் அல்லது பாட்டு என்றே குறிப்பிடப்படுகின்றன.

பாணர், பாடகராகவோ அல்லது யாழ் என்னும் நரம்பிசைக் கருவியை மீட்டுபவராகவோ அதாவது நிகழ்த்துநராக (றிணிஸிதிளிஸிவிணிஸி) மன்னன் அவையில் இடம் பெற்று அவனைப் போற்றிப் பாடுபவராக குறிக்கப்படுகிறார். காதல், குடும்ப உறவுகளில் பாணர்கள் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கதாய் அமைகிறது. இவர்கள் தூதுவர், இடை நிற்பவர், ஆலோசகர் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.

பாணர்களுக்கு அடுத்ததாக விறலியர் என்னும் பெண் பாணர்கள் அமைகின்றனர். இவர்கள் பாடுநர்களாக மட்டுமல்லாமல் ஆடுநர்களாகவும் இருந்துள்ளனர். விறலியர் சிற்றூர்த் திருவிழாக்களில் பங்குபெற்றமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாலும் வளமைச் சடங்குகளில் இவர்கள் பங்கு பெற்றிருத்தல் வேண்டும்.

கோடியர் என்னும் நகரும் நிகழ்த்துக் கலைஞர்கள் (TRAVELLING PERFORMERS) தங்களின் நிகழ்வுகளின் போது ஆடை அலங்காரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என யூகிக்க முடிகிறது. கண்ணுளர், அகவுநர், துடியர், பொருநர் ஆகியோர் பற்றியும் தொகைப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இக்குழுவினர் பங்கேற்கும் நிகழ்வுகள் சடங்குகளோடு, இசை, ஆடல், பாடல் ஆகியன சேர்த்துக் கொண்டாடப்பட்டன. இதனாலேயே பாணர்களை போர்ப்பாசறை, போர்க்களம், விழா, வளமைச்சடங்கு, வீட்டுச்சடங்கு ஆகிய இடங்களிலும் இறுதியில், மன்னன், சான்றோர் அவைகளிலும் காண முடிகிறது.

பண்டைத் தமிழரின் பார்வையில், இசை, பாடல், நடனம் ஆகியன ஒரு வகையில் இவ்வாற்றலைத் தூண்டுவதற்கானதாக அமைந்தாலும் மற்றொரு வகையில் இவை இவ்வாற்றலின் தீங்கு விளைவிக்கும் தன்மையை மாற்றியமைக்கும் தன்மை வாய்ந்தனவாக அமைகின்றன. இந்த நிகழ்த்துநர்களுக்கும் அணங்கு என்னும் ஆற்றலுக்கும் இணைப்பு இருந்துள்ளது என்பதால் இவர்கள் சமூகத்தில் அபாயம் வாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்டு தாழ்ந்த சமூக மதிப்பைப் பெற்றிருந்தனர்.

புலவர் என்பவர்கள் காலத்தால் பிற்பட்டு, பல விதங்களில் பாண் கவிஞர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். புலவர்கள் உயர்ந்த சமூக மதிப்பைப் பெற்றிருந்தனர். கல்வி கற்றிருந்தனர். அத்தோடு, இவர்களின் கவிதைப் பயன்பாடு, பாடுதல், ஆடுதல் ஆகியவற்றோடு தொடர்பற்றதாய் அமைந்தது. பூசாரகத் தொழில்களை மேற்கொண்டிருந்த பாணர்களும் பிறரும் அரசவைகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னரும், இவர்களின் தொடர்பு முற்றிலும் அறுபடவில்லை. சடங்கியலின் முதன்மைப் பங்களிப்பு உயர்குடியைச் சேர்ந்த பிராமணர்களிடம் சென்றது. தொடர்ச்சியான கலப்பும் நடைபெற்று வந்தது. வேளாப் பார்ப்பான் வேள்வித் தியாகம் செய்யாத பிராமணனைக் குறிப்பிடுகிறது.

நர்மதை ஆற்றங்கரை ஒரத்தில் வாழும் திராவிடப் பழங்குடியினரான கோண்டு மக்களிடம் காணப்படும் பர்தான்கள் எனப்படும் மரபார்ந்த பாடகர்களுக்கும் பாணர்களுக்குமான சில ஒப்புமைகள் ஆர்வமூட்டுவதாய் அமைகின்றன.

அகச்சூழல்களும் கதை மாந்தர்களும்:சடங்கியல் புராணவியல் மூலங்கள்

புறம் என்னும் வகைப்பாடு சமூகம், அதன் கருத்தியல், முதன்மையாக வீர நிலை ஆகியவற்றோடு தொடர்புடைய பாடல்களைக் குறிப்பதாக அமைகிறது. காதல் பாடல்களும் குடும்ப நிகழ்வுகளை விளக்கும் பாடல்களும் மற்றொரு வகைப்பாடான அகம் அல்லது அகப்பொருள் என்பதனுள் அடங்குகின்றன. ”எவ்வாறாயினும் அகம், புறம் என்னும் மனித வாழ்வின் இரு பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாய் பிரிக்க முடியாதபடி கையின் உள் வெளிப்பகுதிகளைப் போன்று அமைகின்றன”” என்பார் க.கைலாசபதி.

காதல் உணர்ச்சிகள் தமிழ்ப் பாடல்களில் தெளிவான படிமங்களைக் கொண்டு மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆழமான செய்தியாக வெறும் உணர்வுகளை வெளிப்படுத்துதல் என்பதைத் தாண்டி வேறு சிலவற்றைக் குறிப்பிடுதல் என்பதும் அமைகிறது. பாடற் பின்புலங்கள் ஒவ்வொன்றும் புனித வரையறை ஒன்றின் அடிப்படையில் - இது பற்றிய தொடர்ச்சியான பிரக்ஞையைப் புலவர் பெற்றிருப்பதன் அடிப்படையிலோ அல்லது கவிதையியல் படிமத்தின் அடிப்படையிலோ அமைந்துள்ளன. இவ்வாறாக, அறம் பற்றிய மதிப்பீடு கவிதைக்குள் நுழைந்து கதை மாந்தர்களுக்கு இடையே அவர்களது உறவு, நோக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறது. இத்தகைய பதற்றம் தமிழ்க் கவிதையியலின் முதன்மையான அழகியல் கூறுகளுள் ஒன்றாக விளங்குவதாகத் தோன்றுகிறது.

காதல் கதையின் ஒரு பகுதி அல்லது சிலவற்றைப் பாடலில் விளக்க நினைக்கும் தமிழ்ப் புலவர் ஒருவர், முதலில் ஒரு காட்சியைத் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் கூற்று நிகழ்த்துப் பாத்திரத்தையும் அடுத்து அதைக் கேட்கும் பாத்திரத்தையும் உருவாக்க வேண்டும். இங்கு புலவர் தனிப்பாடல்களுக்கான ஆசிரியராகவும் ஒப்புவிக்கப்படும் அப்பாடலுக்கான பின்னணியை உருவாக்கும் அரங்க இயக்குநராகவும் செயல்பட்டதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு பாடலின் அடிக்கருத்தும் ஒரு குறிப்பிட்ட அமைப்பினுள் வைக்கப்பட வேண்டியவையாயின. இது முதன்மையாக நில அமைப்பாக அமைந்தது. திணை என்னும் இக்கருத்தாக்கம் பண்டைத் தமிழ்க் கவிதையியலின் குறிப்பிட்ட வகைப்பாடாகப் பிரதிபலித்தது. மரபின் அடிப்படையில் மூன்று கூறுகள் உள்ளன. அவை: உரிப் பொருள் - கவிதையியல் சூழல் (கதை மாந்தரது உறவின் படி நிலைகள், அவர்களின் செயல்கள்; அவர்களின் நிலைகள் ஆகியவற்றைக் குறிப்பது) முதற் பொருள் - பொழுதும் இடமும் (நில அமைப்பு) கருப் பொருள் - நில அமைப்பு (விலங்குகள், தாவரங்கள்) பண்புகள், அப்பகுதியில் வாழும் மக்கள் அதன் கொடைத் தெய்வம் ஆகியன பற்றிய விவரிப்புகள் என்பனவாக அமைகின்றன.

கவிதையியல் இலக்கணமும் நாட்டுப்புறவியலும்

கவிதையின் பொருண்மைக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதி பொருளதிகாரம் திணை அடிக்கருத்துகளின் அமைப்பு முறையை விளக்குகிறது. தொல்காப்பியத்தில் இடம் பெறும் நூற்பா திணைகள் ஏழு “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய், முற்படக் கிளந்த எழுதிணை என்ப” என வரையறுத்தாலும் அதை அடுத்து வரும் குறிப்பு “ அவற்றுள் நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய, படுதிரை வையம் பாத்திய பண்பே: என அமைகிறது. திணை அமைப்பு முறையின் அடிப்படையில் மூன்று திணை அடிக்கருத்துகள் இவ்வமைப்பு முறையின் விதிகளுக்கு ஒத்து அமையவில்லை.

”மாயோன் மேயக் காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்

வருணன் மேயப் பெருமணம் உலகமும்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”

நடுவண் ஐந்திணை ஆக அமையும் திணை அடிக்கருத்து பாலை ஆகும். இதையே ஆசிரியர் தனது நிலவமைப்பிலிருந்து நீக்கியுள்ளார். இது தனக்கான உலகத்தைக் கொண்டிருக்காமை இதற்கான காரணமாக அமைகிறது.

பெருந்திணை, கைக்கிளை ஆகியவற்றைப் பொருத்த மட்டில் அவை தொல்காப்பியம் வகுத்துள்ள இறுக்கமான காதல் இணைவு விதிகளிலிருந்து வேறுபட்ட சில சூழல்களை விளக்குவனவாக அதாவது ஒரு தலைக் காதல், பொருந்தாக் காதல் என அமைகின்றன. எனவே, இந்த அடிக்கருத்துக்கள் கவிதைக்குரியனவாக இலக்கணத்தில் இடம் பெற்ற போதும் இவை ஐந்திணை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள கவிதையியல் இலக்கண மைய அமைப்பில் இடம் பெறவில்லை.

பக்கம் 250 இல் திணை -முதல் - கரு - உரிப் பொருள்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. பண்டைய காலத்திலேயே தென்னிந்தியாவில் சில மானிட நிலவமைப்பியல் அல்லது சூழலியல் பகுதிகள் வரையறுக்கப்பட்டன. சங்கத் தொகைகளும் பாடல்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாய் அமைந்த போதும், அவை குறிப்பிட்ட நிலவியல், பொருளியல் அல்லது சமூகவியல் கருத்துக்களை விளக்குவனவாய் அமையவில்லை. பண்டைத் தமிழ்ப் பாடல்களில் இடம் பெறும் ஐந்து திணை அடிக்கருத்துக்களின் உள்ளடக்கங்கள் பற்றிய விளக்கங்களும் பகுப்பாய்வுகளும் அவற்றின் முதன்மைச் சூழல்கள் குறிப்பிட்ட சடங்கியல் செயல்பாட்டின் வகை அல்லது வகை மாதிரிகளோடு பொருந்துவதைக் குறிப்பிடுகின்றன. இச்செயல்பாட்டின் மையமாக “அணங்கு” என்னும் புனித ஆற்றலைக் கட்டுப்படுத்துதல் என்பது அமைகிறது.

தமிழ் தன்னுணர்ச்சிப் பாடல்களின் பாடுபொருளாக அமையும் காதல் சூழற் சுழற்சிகளின் அடிப்படையில் விளக்கப்படும் தலைமக்கள் வேறுபட்ட புராணவியல் உருவகங்களோடு ஏன் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? என்ற கேள்வி நம்மைக் குழப்புகிறது. இதற்கு சாத்தியமான விளக்கம் அணங்கின் தட்டிக்கழித்தல், இளக்கத்தன்மை, குறுகிய காலம் உறையும் பண்புகளின் அடிப்படையில் தலைவியின் அடங்காமைப் பண்புகள் முன்பே வரையறுக்கப்படுகின்றன.

இவ்வகையில், குறிஞ்சி ஒரு இளம் பெண் பருவமடைதல் அல்லது முதல் பாலியல் உறவு கொள்ளுதல் என்னும் நிலையோடு தொடர்புடையதாக அமைகிறது. இதன் தலைவி வள்ளி.

முல்லை பிரிவுச் சடங்கு மேற்கொள்ளுதல், கற்புடைமையை வலியுறுத்தல் என்பதாக அமைகிறது. இதன் தலைவி பத்தினி - கற்புடைமைக்கான பெண் கடவுள்

மருதம் தூய்மையற்ற காலத்தைத் தொடர்ந்து இல்ல மறு இணைவிற்காகத் தயாராகும் காலம்; ஊடுதலின் வழியான தூய்மையாக்கம்; பரத்தையருடனான போட்டி, வளமை; இதன் தலைவி தேவசேனை.

பாலை இயல்பிலிருந்து வேறுபட்டு அமைகிறது. பிரிதல் என்னும் அச்சுறுத்தும் வெம்மை வாய்ந்த ஆற்றல் உறையப் பெற்ற பகுதியில் பயணம் மேற்கொள்ளுதல்; தலைவி கொற்றவை

நெய்தல் இவ்வமைப்பிலிருந்து விடுபட்டதாகவே அமைகிறது. இவ்வடிக்கருத்துக்கான உரிப்பொருள் கலவையான பண்புடையதாக பிரிவுத்துயர் (இரங்கல்) என்னும் உணர்ச்சியோடு முதன்மையாக இணைக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி அடிக்கருத்தே மிகுந்த புராணமயமாக்கத்தை அடைகிறது. முல்லை குறைந்த அளவில் புராணமயமாக்கத்தை அடைந்த போதிலும் நிலையான உள்ளூர்ச் சடங்கு மிக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உரிப்பொருள் முதற்பொருளோடு மயங்கும் சூழல் எவ்வாறு உருவானது என்னும் வினாவிற்கு வருவோம். பண்டையத் தமிழ்ப் பாடல்களின் பகுப்பாய்வில் நிகழ்வுகளுக்கும் படிமங்களுக்குமான இணை நிலைகளில் குறைந்தது சடங்கியல், நிலவமைப்பு, புராணவியல் சார்ந்தன என மூன்றையாவது நாம் காண்கின்றோம். பண்டைத் தமிழ் அகப்பாடல்களின் சிறப்பியல்பாக அமையும் நிலவமைப்பிற்கும் பாத்திரங்களுக்கும் காதற்சூழல்களுக்கும் இடையேயான இணக்கக் கொள்கையே கவிதையியல் உருவ அமைப்பிற்கான (SYSTEM OF POETIC IMAGERY) அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. இதுவே, தலை மக்களுக்கான மறைமுகக் குறியீட்டுப் பண்புகளை உருவாக்குவதற்கும் அவர்களது உறவுமுறையில் வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. இவ்வமைப்பு முறை வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக மரபார்ந்த குறியீடுகளையும் படிமங்களையும் கொண்ட கட்டமைப்பை விரிவுபடுத்தி வழக்கத்திற்கு மாறான உருவங்களை உருவாக்க வேண்டும். படிமங்களைச் சிக்கலாக்கி அவற்றை நுட்பமான புதிர்க்குறிப்புகளாக மாற்ற வேண்டும் என பண்டைத் தமிழ்ப் புலவர் மேற்கொண்ட முயற்சியே அமைவதாகத் தோன்றுகிறது.

 நிலவமைப்பு, முதல் மற்றும் கருப் பொருள்கள் அகப்பாடல் சூழல்களுக்கான நிலையான பின்னணி என்பதற்கும் மேலானதாக அமைகிறது என்பதை உறுதியாகக் கூறலாம். தொல்காப்பியம் ஒரே பாடலில் பல்வேறு நிலவமைப்புகளின் கலப்பைக் கண்டிப்பதும் திணை அடிக்கருத்தில் நிலவமைப்பே முதன்மையானது எனக் கூறுவதும் தற்செயலானதன்று.

01 குறிஞ்சி அடிக்கருத்து: இதன் உரிப்பொருளாக “தலைமக்களின் ஒன்றிணைவு” என்பதும் முதற்பொருளாக மலைப்பகுதியும் கூதிர் காலமும் அமைகின்றன. இலக்கணம் இதற்கான குறிப்பிட்ட நேரத்தையும் நள்ளிரவு என வரையறுக்கிறது. தலைமக்களின் உறவில் இரவு என்பது குறிப்பிட்ட புள்ளியாக, மிகவும் ஆபத்து வாய்ந்ததாகவும் சடங்கியல் சார்ந்ததாகவும் அமைவதால் இரவுச் சந்திப்பு என்பது மிகுந்த முதன்மையைப் பெறுகிறது. தலைமக்களை வள்ளி, முருகன் ஆகியோருடன் அடையாளப்படுத்துவதற்கு மிக நெருக்கமானதாக அமைகிறது. இக்குறியிடச் சந்திப்பு பற்றிய விவரிப்பில் வேலன் வெறியாடலின் சாயல் தென்படுவதும் தற்செயலானதன்று. பாடல்களில் இடம் பெறும் குறிஞ்சி அடிக்கருத்துக்கு மூலமாக ஒரு சடங்கியல் வடிவமான கேளிக்கை அமைகிறது.

02. முல்லை அடிக்கருத்து: முல்லைப்பாடல்களில் மழைக்காலத்தோடு தொடர்புடைய இன்னிசை வடிவம் அடிக்கடி இடம் பெறுகிறது. ஆயர்கள் குழலிசைத்தல் என்னும் செய்தி பாடல்களில் அடிக்கடி இடம் பெற்றுள்ளது. நிலத்தின் பாதுகாப்பு ஆற்றல்கள் புத்துயிர் பெறுகின்றன என்னும் கருத்தாக்கம் மழைக்காலத்தோடு தர்க்க அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொதுவான கருத்தாக்கத்தை நல்வாழ்வைப் பாதுகாத்தல், பராமரித்தல் பற்றிய பொதுவான எண்ணம் எனக் கொள்ளலாம். பாணர்களிடம் இருந்த படைப்பாக்கச் செயல்பாடுகளின் சேர்க்கையை முல்லை அடிக்கருத்தும் அதற்கான கவிதையியல் இலக்கண உருவாக்கமும் கிருஷ்ணவியச் சடங்குப் பாடல்களிலிருந்து பெறப்பட்டன என்பதை உறுதியாகக் கூறலாம்.

03. மருதம் அடிக்கருத்து: இவ்வடிக்கருத்துக்கான உரிப்பொருள் குழந்தைப் பேற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. ஐயத்திற்கு இடமின்றி இது பூமியின் வளமையோடு தொடர்புடையதாகிறது. இது சார்ந்த சடங்குகளோடு தொடர்புடைய பாடல்களும் இசை வடிவமும் இடம் பெற்றிருக்கும் எனக் கருதுவது இயல்பாகும். சில வேளைகளில், போற்றிப் பாடுதல் என்பது மருதம் அடிக்கருத்தில் நேரடியாக இடம் பெற்று அதனுள் உறைந்துள்ள வளமையையும் மிகையாக்கத்தையும் வலியுறுத்துகிறது. எனினும் இவை யாவும் மருதப் பண்ணோடு தொடர்புபடுத்தப்படவில்லை. பாடல்களும், மருதப் பண்ணும் வளமைச் சடங்குகளில் குறிப்பாக இல்லச் சடங்குகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

04 நெய்தல், பாலை அடிக்கருத்துக்கள்: நெய்தல் பல வகைக் கருத்துக்களை உள்ளடக்கியதாய், ஒரு குறிப்பிட்ட பாடல் வடிவத்திலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்னும் எதிர்ப்பார்ப்பை மறுதலிப்பதாய் அமைகிறது. பாலை இசை வடிவத்திற்குரிய சில தகவல்களைப் பாடல்களில் காண முடிகிறது. வேனிற்காலத்தின் துவக்கத்தைக் குறிப்பதால் இவ்விசை பற்றிய குறிப்பு தற்செயலானதன்று என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தோடு கொற்றவை வழிபாட்டு மரபோடும் இணைக்கிறது.

பண்டைக்காலத்தில் இசை தனித்துவமான முறையில் விளக்கப்பட்டுள்ளது. இசை, பண், சில வகை ஒலிகள் பற்றிய ஞானம், அக்கால மக்களின் உறுதியான சடங்கியல் செயல்பாடுகள், சில வகை நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாதனவாக அமைந்தன.

திணைக் கவிதைகளின் உருவாக்கத்தில் இடம் பெற்ற இரு போக்குகளைத் தனியாக பிரித்தறிய முடிகிறது. முதலாம் போக்கு உளவியல் இணை நிலையின் அடிப்படையில் கவிதையியல் சூழலுக்கும் நிலவமைப்புக்கும் இடையிலான எளிய இணைவை நோக்கிய முயற்சியைப் பிரதிபலிப்பதாய் அமைகிறது. சடங்கியல் அமைப்பு, மனித உறவுகள் பற்றிய புராணவியல் அமைப்பிலிருந்து உருப்பெற்ற இரண்டாம் போக்கு பருவகாலச் சுழற்சியுடனான சடங்கியல் செயல்பாட்டை வலியுறுத்துகிறது.

நிறைவாக: ”பல்வேறு கவிதையியல் மரபுகள், அவற்றின் செயல்வகை, அடிக்கருத்து, கற்பனையாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய நாட்டுப்புறவியல் பாடல்களிலிருந்து கல்வியறிவு பெற்ற திணைப் புலவர்களால் தமது பாடல்களை அணி செய்ய எடுக்கப்பட்டுள்ளன. இவை துவக்கத்தில் நாட்டுப்புறவியல் வடிவமாகவே தோன்றி, பின்னர் பாண் குழுவினர், பாடினிகளால் வளர்த்தெடுக்கப்பட்டு, இறுதியாகவே கல்வியறிவுடைய புலவர்களால் செம்மையாக்கம் செய்யப்பட்டன” என்ற தமிழறிஞர் தமிழண்ணலின் பார்வை ஏற்புடையதாக உள்ளது.

கலித்தொகையில் இடம் பெறும் உரையாடல்கள், பரிபாடலில் இடம் பெறும் பகுதிகள், பிற தொகைகளில் இடம் பெறும் பிற கூறுகள் முதலியன ஐயத்திற்கு இடமின்றி சடங்கியல், நாடகம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள் என்னும் பொது மூலத்திலிருந்து தோன்றி வளர்ந்தனவாக அமைகின்றன. இருப்பினும், பண்டைத் தமிழ் மரபின் மையத்தில் நாடகக்கலை முழுமையாக வளர்ச்சியடையவில்லை.

பண்டைத் தமிழ்ப் பாடல்கள் பற்றிய ஆய்வு, கோட்பாட்டு அடிப்படையிலான ஒரு குறிப்பிடத்தக்க செயல்முறையைக் கண்டறிய உதவுகிறது. அது கவிதையியல் விதிகள் கவிதையியலுக்குத் தொடர்பற்ற ஒரு பொருளிலிருந்து உருவாகின்றன என்பதாகும். அகப்பாடல் வகைப்பாட்டில் உருவான வடிவங்கள், பக்தி இயக்கத்தில், கடவுளோடு ஒன்ற ஏங்கும் பக்தனின் சமய உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்பட்டன. பண்டையத் தமிழ்ப் பாடல்களில் காப்பியத்திற்குரிய பண்பு ஒன்று உறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புராணவியல் ஒத்திசைவின் எச்சம் (Vestiges of mythological syncretism) எனப் பெயரிடப்பட்ட இது பண்டைய இந்தியப் பண்பாட்டின் சிறப்பியல்பாக அமைகிறது.

- சண்முக.ஞானசம்பந்தன்

Pin It