நீண்ட வரலாறுடையது தமிழ்ச் சமுதாயம். நிலத்தை அது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்திருந்தது. இந்த நால்வகைப் பிரிவில் முதன்மையானது குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த இடமும் இது. குறிஞ்சிப் பாடல்கள் மிக இனிமையானவை. குறிஞ்சிக்கலிக்கு நிகரான காதல் செய்திகள் சொல்லும் சிறுகதைகள் தமிழில் எத்தனை இருக்கமுடியும்?

vanam_novel_400காலப்போக்கில் தமிழர்களின் நாலு நிலப் பாகுபாடு, நாலு வருணப் பாகுபாடாக மாற்றம் பெற்ற போது, நிலம் சார்ந்த பழைய வாழ்க்கை முறை அழிந்தது. குறிஞ்சி மக்கள் மிக நீண்ட காலம் ஒடுக்கப்பட்டார்கள். மலையையும் மலை சார்ந்த நிலத்தையும் அவர்கள் இழந்தார்கள், வாழ்க்கையை இழந்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகம் பூப்பதில்லை. அதனுள்ளிருந்த இலக்கியப் பூக்கள் மலர்வதில்லை. குறிஞ்சி நிலம் ஒராயிரமாண்டு மலடாகிப் போயிற்று. அதனுடைய பாடலும் காதலும் உலகுக்குக் கேட்க முடியாதபடி ஒடுங்கிப் போயின.

கவிமணி எழுதிய “ஆசிய ஜோதியில்” ஒரு காட்சி. புத்த பகவான் காட்டில் தாகம் எடுத்துக் கிடக்கிறார். வனப்பகுதியைச் சார்ந்த ஒரு சிறுவன் ஆடுமேய்த்துக் கொண்டு வருகிறான். “தாகம் எடுத்துக் கிடக்கிறேன், குடிக்க எதாவது தா” என்கிறார் புத்தர். “அய்யனே! நான் காட்டு மனிதன், உம்மைத் தீண்டத்தகாதவன்.” என்கிறான் சிறுவன். ஏகலைவன் கதை எல்லாருக்கும் தெரியும். அவன் கட்டை விரல் இழந்த கதை தான் வன மனிதர்கள் வாழ்வு இழந்த கதை.

எல்லாச் சமூகங்களுக்குள்ளும் போல, வன சமூகத்தினருக்குள்ளும் விடுதலைக் காற்று 19-ஆம் நூற்றாண்டில் வீசத் தொடங்கிற்று. அவர்களும் மனிதர்களே என்னும் பேருண்மையை அவர்களும் பிறரும் உணர ஆங்கிலேயரின் ஆட்சி காரணமாக இருந்திருக்கிறது என்பது ஒரு வினோதம். அவர் களின் பாடல்கள், சடங்குகள், கதைகள் முதலில் தொகுக்கப்பட்டது அவர்களால் தான்.

போன நூற்றாண்டின் பின் பகுதியில் தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் மெல்ல அரும்பத் தொடங்கியது. ராஜம் கிருஷ்ணன் எழுதிய குறிஞ்சித் தேன் முதல் அரும்புகளில் அன்று தொடர்ந்து குறிஞ்சிச் செல்வர். கோ.மா.கோதண்டம் தன் நாவல்களிலும், சிறுகதைகளிலும் மலையின மக்களின் அழகையும், அவலத்தையும் சமதள மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கு.சின்னப்பபாரதி மலையின மக்களின் சுய எழுச்சிக் குரலைச் சங்கம் என்னும் நாவலில் பதிவு செய்தார். பாலமுருகனின் சோழகர் தொட்டி மலையின மக்களின் வாழ்வை ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்து அவர்களின் விடுதலைக் கான புதிய கொந்தளிப்புகளை வீரியமாக வெளிப் படுத்தியது. பெண்ணாகரம் தோழர்.நஞ்சப்பன் எழுதிய பனியில் பூத்த நெருப்பு நாவலும் இந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு வரவு.

இத்தகைய நீண்ட வரலாற்றுப் பின்னணியில் எழுத்தாளர் ஆட்டனத்தி எழுதிய ‘வனம்’ என்னும் நாவல் வெளிவந்திருக்கிறது. சோதிடக் கலையின் தாக்கத்தால் கவரப்பட்டு படைப்பிலக்கியத்துக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார் ஆட்டனத்தி. நாவல், வனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல, வனத்தின் அடிவாரமாக விரிந்து கிடக்கும் விவசாய நில வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டது. இரு வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கிறார் ஆட்டனத்தி.

நாவலின் கதாநாயகன் ரங்கராஜன். அவனுடைய வளர்ச்சியோடு நாவலும் வளர்கிறது. பொரி வியாபாரம் செய்யும் தாய் அவனைச் சிரமப்பட்டு வளர்க்கிறார். ரங்கராஜனுக்குத் திருமணமாகிறது. அவன் மனைவி சித்ரா. மணமான சித்ராவை முகர்ந்து பார்க்கத் துடிக்கும் பட்டுலிங்கம். அதற்கு ஓரளவுக்கு இடம் கொடுக்கும் சித்ரா. இந்தச் சிக்கலில் துயரப்பட்டு திக்குமுக்காடும் ரங்கராஜன் வன சமூகத்து மனிதரான நஞ்சப்பன் மகள் பொன்னி யிடம் ஈடுபாடு கொள்ளுகிறான். பொன்னியும் அவனிடம் ஈடுபாடு கொள்ளுகிறாள். ஆனாலும் ஈடுபாடு கட்டுப்பாட்டை அறுக்கவில்லை. நாவலின் இறுதியில் பொன்னி இறந்து போக, ரங்கராஜன் அவள் கழுத்தில் ஒரு பாசி மணி மாலை அணி விக்கிறான்.

இந்தச் சட்டகத்தைச் சுற்றிக் கிராமப்புறக் கொங்கு மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய நம்பிக்கைகள், சடங்குகள், கொங்குக் கோயில்கள், வணக்க முறைகள், இவை யாவும் சொற் சித்திரங் களாக அருமையாகப் பதிவாகியிருக்கின்றன. குடும்பங் களுக்குள்ளேயும் குடும்பங்களுக்கிடையேயும் ஏற்படும் பூசல்கள், மோதல்கள், விரிசல்கள், இணக்கங்கள் எல்லாம் நுட்பத்தோடு பதிவு செய்யப்பட்டிருக் கின்றன. நாட்டுப்புறப் பாடல்களும் பதிவாகி இருக்கின்றன. பாத்திரங்களின் குணநலன்கள் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.

அதே போல மலையின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள், வேட்டை முறை, உணவு முறை, மருந்துகள், கொண்டாட்டங்கள், வனத்துறை அலுவலர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவுகள் எல்லாமே பதிவாகியுள்ளன. நாவலில் வரும் ரேஞ்சர் நல்லவர். ரேஞ்சர்பற்றி நம் மனதில் இருக்கும் பொதுச் சித்திரத்தோடு அவர் முரண் பட்டுக்கொண்டே இருப்பது நாவலுக்குள்ளே ஒரு விறுவிறுப்பை உருவாக்குகிறது.

ரங்கராஜன் பொன்னியின் பிணத்துக்குப் பாசிமாலை கட்டும் போது வாசகருக்குள் ஒரு கேள்வி எழும். சமூகக் கட்டமைப்பை நாவல் மீறு கிறதோ என்னும் கேள்வி அது. அப்படி ஒன்று யோசிக்க வேண்டியது இல்லை என்று அதற்குத் தெளிவான விளக்கம் தந்து வாசகரைச் சமாதானப் படுத்திவிடுகிறார் ஆசிரியர் கடைசிப் பக்கத்தில்.

வாசிக்க ருசியான ஒரு கதை, வனம். அனுபவமும், கற்பனையும் கலந்து பின்னப்பட்ட சுவையான கதை.

வனம்

(நாவல்)

ஆசிரியர் : ஆட்டனத்தி

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.125/-

Pin It