46ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ‘முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி' ஜனவரி 16-18 தேதிகளில் நடந்து முடிந்தது. ‘தமிழை உலகிற்கும் உலகை தமிழிற்கும்’ கொண்டு செல்வது எனும் முழக்கத்தோடும் நோக்கத்தோடும் நடந்த கண்காட்சி, தமிழக அரசின் முழுமையான ஈடுபாடும் முன் முயற்சியும் இல்லாது நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. தமிழக முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், முதல்வரின் முதன்மைச் செயலாளர், கல்வித் துறைச் செயலாளர் ஆகிய அனைவரின் வழிகாட்ட, ஆதரவு ஆகியவற்றோடு நூலகத் துறை இயக்குநரின் தலைமையில் துறை அலுவலர்கள் முழுமையாகவும் மிகுந்த பொறுமையோடும் பொறுப்போடும் இயங்கி இதனைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

தமிழக மக்கள் சார்பாகவும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் இருந்து மானுட ஞானத்தை தமிழுக்குக் கொணர்ந்து தரும் பணியைச் செய்து வரும் என்.சி.பி.எச். நிறுவனம் சார்பாகவும் உங்கள் நூலகம் ஆசிரியர் குழு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த முயற்சியும் நிகழ்ச்சியும் முதன்முறை நடக்கும்போதே நல்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதன் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இது மேலும் சிறக்கவும், வளரவும், விரிவடையவும் அரசும், அரசின் துறைகளும் முயல்வார்கள் என்பதற்கான உறுதிமொழிகளும் கிடைத்துள்ளன.

‘வளர்ச்சியடைந்த முன்னேறிய சமூகம் வளரும் சமூகத்திற்கு அதன் எதிர்காலத்தைக் காட்டும் கண்ணாடி’ என்பார் கார்ல் மார்க்ஸ். வளர்ச்சிக்கும் ஞானத்திற்கும் இன்று உலகம் முழுவதிற்கும் ஒரே மையப்புள்ளி, ஞானபீடம் இல்லையென்றாலும், பரிவர்த்தனைக்கும் அதன் மூலம் பலன் பெறுவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பது வெளிப்படை.

தமிழகம் போன்ற ஒரு மாநிலம் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், தனித்துவமான தன்மையிலும் ஒரு ஐரோப்பிய அல்லது லத்தின் அமெரிக்க நாட்டை ஒத்தது. அத்தோடு அனைத்திற்கும் அடிப்படையான பொருளாதாரம் என்பதிலும் இந்த ஒப்பீடு செய்யும் நிலை இருப்பதும் எதார்த்தம். உலகின் ஏனைய நாடுகள், இந்திய நாட்டின் ஏனைய பல மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து கற்பதற்கும் அவர்களது வரலாறுகளிலிருந்து தவிர்ப்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன.

தமிழ் மொழியின் தொன்மை, தொடர்ச்சி, உயிர்ப்பு ஆகியவற்றோடு இந்த மாநிலத்து மக்களின் வளர்ச்சி, மேம்பாடு, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிலிருந்து மற்றவர்கள் கற்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. கலை, இலக்கியம் மட்டுமல்ல, அறிவியல் தொழில்நுட்பம், சமூகவியல், வளர்ச்சி-மேம்பாடு, சுற்றுச்சூழல் போன்றவற்றிலும், ‘தமிழை உலகிற்கும் - உலகை தமிழிற்கும்’ அறிமுகம் செய்யவும் பரிவர்த்தனைகள் நடக்கவும் தேவைகள் உள்ளன.

அரசும், அரசுத் துறைகளும் இவற்றை கணக்கில் கொண்டு இந்த இயல்களில் நூல்கள் பதிப்பிக்கப்படவும், மொழிபெயர்க்கப்படவும், அவை தமிழகம் முழுவதும் சகலருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் உருவாக்கப்படவும் நூலகங்கள் மூலம் கிடைக்கச் செய்யவும் குறிப்பான முன்முயற்சிகளை எடுக்க வேணடும் என்பது தமிழ்ச் சமூகம் எல்லாம் தழுவிய முழுமையான அறிவார்ந்த சமூகமாய் மாற வேண்டும் எனும் அவா கொண்டவர்கள் அனைவரின் வேண்டுகோளாய் இருக்கும் எனலாம்.

அந்த வகையில் இனிவரும் ஆண்டுகளில் அரசுத் துறைகள், பப்பாசி, பதிப்பாளர்களின் ஒருங்கிணைப்பு இன்னும் நெருக்கமாகவும், பரந்துபட்டதாக இருக்கவும், சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு வரும் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அவர்களின் தன்மை இன்னும் பன்முகம் கொண்டதாக இருக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு.

Pin It