மரம், செடி, கொடி, ஆடு, மாடு,கோழி

வளர்க்கரதுன்னா ஆத்தாவுக்கு உசுறு

அப்பாவுக்கு தாய்மாமன்

செண்டியம்பாக்கம் தேவராசு,

அவர் கையால மாடு வாங்கனா

பால் பாக்கியம் நிலைக்குமுனு

அடிக்கடி சொல்லுவாரு அப்பா

ஒருநாள் தம்பியும் நானும்

பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தப்ப

செவலமாடு ஒன்னும், கருப்பு மாடு ஒன்னும்

கட்டுத்தரியில் நின்னு கடந்தது

எங்க ரெண்டு பேருக்கும் கொள்ள சந்தோ­ம்

கருப்பு ஒன்னது செவுலு என்னதுனு

சண்டையே நடந்தது

கடைசியா கருப்பு எனக்கும்

செவலு அவனுக்குனு முடிவாச்சி

குளுப்பாட்டி, தவுடு காட்டரது

பில்லு வெட்டியாரது தடவிக் குடுக்குறதுனு

ஒரு வாரத்திலே எங்க சந்தோ­ம் அடங்கி போச்சி

அதுக்கப்பரம் ஆத்தாதான் பாத்துக்கிச்சி

ஆறு மாசத்திலே ரெண்டும் செனையாச்சி

முழுநேரமும் மாடே கதியின்னு இருந்தா ஆத்தா

ஒருநாள் ஆத்தா தலமேல

கைய வைச்சிகீனு

கப்பலு கவுந்தாபோல

ஒக்காந்து கெடந்தா

இன்னானு கேட்டதுக்கு

ஒங்க அக்காளுக்கு

கல்யாணம் பன்னனுமுன்னு

ரெண்டு மாட்டையும்

ஓட்டியும் போயி

தீவனூர் சந்தையிலே

வித்துட்டாரு ஒங்க அப்பா

அடுத்த ஊட்டு சாணி எடுத்து

வாசலில தெளிக்க

கூடாதுன்னுதான் நான்

மாடே வளர்த்தேன்

இப்ப நான் இன்னா பன்னுவேன்

நானும் தம்பியும்

அம்மா அம்மான்னு கூட்டதவிட

அவ வளத்த ஆடும், மாடும்தான்

அதிகமா அம்மா அம்மான்னு

கூட்ருக்கும்

- கா.வ. கன்னியப்பன்

Pin It