1. வளையல் துண்டுகளின் காட்சி

 அருகருகேத் தொடர்கிறது

நம் பயணம்

சுவாரஸ்ய மவுனத்தோடும்

சுகமான நினைவுகளுடனும்

தண்டவாளங்களைப் போல

தகுந்த இடைவெளியோடு

உடைந்த

வளையல்துண்டுகளாய்

வீழும்

உரையாடல்களைக் குலுக்க

மனசின்

முப்பட்டைக் கண்ணாடியில்

திரள்கின்றன

புதுப்புதுப் பொழிப்புரைகள்

"பசிக்குதடா' என்றக் கெஞ்சலில்

எட்டிப்பார்க்குமுன்னுள்ளொருக் குழந்தை

பசியறிந்து

ஊட்டிய விரல்களிலிருந்து

வழியுமுன் கடவுளின் மனிதம்

சொல்லதிகாரம் திரண்ட

கட்டளைகளில்

நிமிர்ந்த பனையயன

உன் ராட்சசம்

 சொல் செல்லமே

யார்தான் நீ

2. பரவசம்

விரைந்து அலறியோடும்

மின்ரயில்களின் பேரிரைச்சல் கடந்து

ஒலிக்கின்றன

பறவைகளின் இசைக்குரல்கள்

சுக ஸ்வரத்தில் மனம் பறிகொடுத்தவனை

அலைக்கரம் நீட்டி அழைக்கிறது சமுத்திரம்

மரங்களின் இருள்களூடே கசிந்த

இசைத் தேடியலைந்து

கடற்கரை மணலில் கால் புதைந்தவனை

வாசல் திறந்து வரவேற்கிறது

நீலநீர் ராக்கதம்

பைய கடலிறங்கி பாதம் தொட

உடல் நனைத்தது இசை

அலை திறந்து கடல் நுழைந்து

முழுதுமாய் இசையாகி மிதப்பவனைக்

கொத்தித் தின்கின்றன இசைப்பறவைகள்

 3. சிலுவை

 என்னோடு இருப்பவரில் சிலரென்னைக்

காட்டிக் கொடுக்க

அறையப்பட்டிருக்கிறேன்

இச்சைகளின் சிலுவையில்

உயிரின் துண்டங்களில் ஆணியாய்

இறங்கி இறுகியிருக்கின்றன

உறவுகள்

காயாது வழியுமென் குருதியும்

ஏலம் விடப்படுகிறது சந்தையில்

கற்கதவுத் திறந்து இருட் குகைக்குள்

அடைக்க அந்தகாரமாய் விழியிருட்டு

இளங்கதிர் ஏதுமென்மேல் விழுமெனில்

எழுவேன் உத்வேகமாய் முள்முடி உதறி

 

Pin It