ani logo 100

இருப்பதைக் காப்போம்

இழந்ததை மீட்போம்

எழுவோம் தமிழர்களே ‡ நாம்

நெருப்பென அழிப்போம்

நெடும்பகை இருப்போம்

நிமிர்வோம் தோழர்களே

செருப்பென உழைத்தோம்

சிறுமையில் மரித்தோம்

சித்திரச் சோலைகளே ‡ வரும்

மறுப்பினில் உதிப்போம்

மறுபடி சிரிப்போம்

மானுட தீபங்களே

இருப்பினைத் தொலைத்தோம்

இனப்பகை துதித்தோம்

எதிர்மறை மனிதர்களே ‡ தமிழ்

விருப்பினில் நிலைப்போம்

விடுதலை விதைப்போம்

விடியலின் பறவைகளே

கருப்பினைப் பழித்தோம்

கனவுகள் எரித்தோம்

கடவுளின் குழந்தைகளை ‡ இனி

வெறுப்பினை விடுப்போம்

வெகுசனம் மதிப்போம்

விடுகதை உறவுகளே

துருப்பென களைத்தோம்

துரும்பென இளைத்தோம்

துணைவரும் நிலவுகளே ‡ நம்

பொறுப்பினை நினைப்போம்

புதுயுகம் படைப்போம்

பூமியின் கவிதைகளே

- பாரதி வசந்தன்

 

Pin It

இணைய இதழ்கள் அறிமுகம் ‡ 8

புலம் பெயரும் மனிதர்களுக்கு தங்கள் தாய் மண் மீதும் தாய் மொழி மீதும் பற்றதிகம் என்பதைத் தெரிய பல உதாரணங் களை கூற முடியும். காலத் தால் அழியாத மொழியையும் கலையையும் வளர்க்க நல்லதொரு வாய்ப்பை அல்லது அது வளரும் பொருட்டு உதவியாகவேணும் இருப்பது ஆகியன புலம் பெயர் தமிழர்களின் குறையில்லாத குணமாகும்.

இணைய தளத்தில் தமிழ் மொழியினை உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாசிக்கும் படியாக செய்ய புலம் பெயர் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.அப்பால்தமிழ்.காம் என்னும் இணைய இதழ் 2004 ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாளில் துவக்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது. கி.பி. அரவிந்தன் தளநெறியாளராகவும் வை.ஜெய முருகன் துணை நெறியாளராகவும் கொண்டு இத்தளம் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழின் பிற சஞ்சிகைகைளைப் போல், பிற இணைய தளங்களைப் போல் அல்லாமல் சற்றே மாறுபட்டு இயங் குகிறது இந்தத் தளம். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் குறித்த அவசரமான மற்றும் அவசியமான செய்திகளை பதிவு செய்ய வேண்டி செய்திகள் என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலக்கியம் என்ற இணைப்பில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என சுவையான அதே நேரத்தில் வாசிப்பு இன்பத்தை மட்டுமின்றி அறிவு வளத் தையும் கொடுப்பதாக உள்ளது. இதில் காணப்படும் படைப்புகள் நேர்த்தியாகவும் சமூக அக்கறை கொண்டதாகவும் உள்ளன.

காட்சிக்கூடம் என்னும் இணைப்பில் நல்ல புகைப் படங்களை வைத்துள்ளனர். இவை மனதை கவர்வதோடு மட்டுமல்லாமல் கருத்தாழம் மிக்கதாகவும் உள்ளது, இந்த தளத்தில் ஒளித்தடம் என்னும் இணைப்பில் வீடியோ செய்திப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சமூக பிரச்சனைகள் பல குறித்து மிக ஆழமான விவாதங்களும் கருத்து வெளிப்பாடுகளும் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் வகையில் சகலமானவர்களின் பிரச்சனைகளும் ஆழமாக பதியப்பட்டுள்ளது,

தமிழக ஏடுகள் எதிலும் காண முடியாத ஒரு தூய தமிழ் மொழியை இத்தளத்தில் காணலாம். இவை வலிந்து திணிக்கப் பட்டவைகளாக இல்லாமல் இயல்பான நடையில் உள்ளன. இந்த தூய தமிழ் வாசிக்க இனிமையாக உள்ளது.

முழுக்க இலக்கிய படைப்புகளை கொண்ட வண்ணச்சிறகு என்னும் இணைப்பிதழும் உள்ளது. தேதி வாரியாக வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வாசிக்க வகை செய்யப்பட்டுள்ளது, நூல்நயம் பகுதியில் மதிப்புரைகளும், அறிமுகங்களும், விமர்சனங்களும் உள்ளன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட இணைய இதழ்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

யாவரும் கேளிர் என்ற தலைப்பின் கீழ் மகரந்தம் பகுதியில் வாசகர்களின் மனம் திறந்த கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வுகள் பகுதியில் தலைப்பிற்கேற்ற செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது,

தளத்தின் வடிவமைப்பும், படைப்புகளை வகைப் படுத்தி வைத்துள்ள விதமும் வாசகர்களை மீண்டும் மீண்டும் தளத்திற்கு வரச் செய்யும்படியானதாகும். கடல்தாண்டி, மலைதாண்டி தூரம் போனாலும், மண் குடைந்து பாதாளம் போனாலும், ஆகாயம் கிழித்து வெளி கடந்தாலும் தமிழர்கள் தமிழை விடாது காப்பதை இந்த தளத்தினை காணும் போது உணரலாம்.

அப்பால் தமிழ் என்னும் இத்தளம் இப்பாலுள்ள தளங்களை விட பல படிகள் மேலேறி இருக்கிறது என்பது உறுதி.

 இணையம்: www.appaaltamil.com

 மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It

மரம், செடி, கொடி, ஆடு, மாடு,கோழி

வளர்க்கரதுன்னா ஆத்தாவுக்கு உசுறு

அப்பாவுக்கு தாய்மாமன்

செண்டியம்பாக்கம் தேவராசு,

அவர் கையால மாடு வாங்கனா

பால் பாக்கியம் நிலைக்குமுனு

அடிக்கடி சொல்லுவாரு அப்பா

ஒருநாள் தம்பியும் நானும்

பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தப்ப

செவலமாடு ஒன்னும், கருப்பு மாடு ஒன்னும்

கட்டுத்தரியில் நின்னு கடந்தது

எங்க ரெண்டு பேருக்கும் கொள்ள சந்தோ­ம்

கருப்பு ஒன்னது செவுலு என்னதுனு

சண்டையே நடந்தது

கடைசியா கருப்பு எனக்கும்

செவலு அவனுக்குனு முடிவாச்சி

குளுப்பாட்டி, தவுடு காட்டரது

பில்லு வெட்டியாரது தடவிக் குடுக்குறதுனு

ஒரு வாரத்திலே எங்க சந்தோ­ம் அடங்கி போச்சி

அதுக்கப்பரம் ஆத்தாதான் பாத்துக்கிச்சி

ஆறு மாசத்திலே ரெண்டும் செனையாச்சி

முழுநேரமும் மாடே கதியின்னு இருந்தா ஆத்தா

ஒருநாள் ஆத்தா தலமேல

கைய வைச்சிகீனு

கப்பலு கவுந்தாபோல

ஒக்காந்து கெடந்தா

இன்னானு கேட்டதுக்கு

ஒங்க அக்காளுக்கு

கல்யாணம் பன்னனுமுன்னு

ரெண்டு மாட்டையும்

ஓட்டியும் போயி

தீவனூர் சந்தையிலே

வித்துட்டாரு ஒங்க அப்பா

அடுத்த ஊட்டு சாணி எடுத்து

வாசலில தெளிக்க

கூடாதுன்னுதான் நான்

மாடே வளர்த்தேன்

இப்ப நான் இன்னா பன்னுவேன்

நானும் தம்பியும்

அம்மா அம்மான்னு கூட்டதவிட

அவ வளத்த ஆடும், மாடும்தான்

அதிகமா அம்மா அம்மான்னு

கூட்ருக்கும்

- கா.வ. கன்னியப்பன்

Pin It

பயிரைப் பிடுங்கி நட்டவர்கள்

நிலத்தை விற்று

தானியங்கி எந்திரத்தில்

பணத்தைப் பிடுங்கப் போக

மயிரைப் பிடுங்கி நட்டும்

விஞ்ஞானம்

வயிற்றுக்காக இனி

பசியை பிடுங்கிப்போனால் சரி

- நா.கோவிந்தராஜன்

Pin It

1. வளையல் துண்டுகளின் காட்சி

 அருகருகேத் தொடர்கிறது

நம் பயணம்

சுவாரஸ்ய மவுனத்தோடும்

சுகமான நினைவுகளுடனும்

தண்டவாளங்களைப் போல

தகுந்த இடைவெளியோடு

உடைந்த

வளையல்துண்டுகளாய்

வீழும்

உரையாடல்களைக் குலுக்க

மனசின்

முப்பட்டைக் கண்ணாடியில்

திரள்கின்றன

புதுப்புதுப் பொழிப்புரைகள்

"பசிக்குதடா' என்றக் கெஞ்சலில்

எட்டிப்பார்க்குமுன்னுள்ளொருக் குழந்தை

பசியறிந்து

ஊட்டிய விரல்களிலிருந்து

வழியுமுன் கடவுளின் மனிதம்

சொல்லதிகாரம் திரண்ட

கட்டளைகளில்

நிமிர்ந்த பனையயன

உன் ராட்சசம்

 சொல் செல்லமே

யார்தான் நீ

2. பரவசம்

விரைந்து அலறியோடும்

மின்ரயில்களின் பேரிரைச்சல் கடந்து

ஒலிக்கின்றன

பறவைகளின் இசைக்குரல்கள்

சுக ஸ்வரத்தில் மனம் பறிகொடுத்தவனை

அலைக்கரம் நீட்டி அழைக்கிறது சமுத்திரம்

மரங்களின் இருள்களூடே கசிந்த

இசைத் தேடியலைந்து

கடற்கரை மணலில் கால் புதைந்தவனை

வாசல் திறந்து வரவேற்கிறது

நீலநீர் ராக்கதம்

பைய கடலிறங்கி பாதம் தொட

உடல் நனைத்தது இசை

அலை திறந்து கடல் நுழைந்து

முழுதுமாய் இசையாகி மிதப்பவனைக்

கொத்தித் தின்கின்றன இசைப்பறவைகள்

 3. சிலுவை

 என்னோடு இருப்பவரில் சிலரென்னைக்

காட்டிக் கொடுக்க

அறையப்பட்டிருக்கிறேன்

இச்சைகளின் சிலுவையில்

உயிரின் துண்டங்களில் ஆணியாய்

இறங்கி இறுகியிருக்கின்றன

உறவுகள்

காயாது வழியுமென் குருதியும்

ஏலம் விடப்படுகிறது சந்தையில்

கற்கதவுத் திறந்து இருட் குகைக்குள்

அடைக்க அந்தகாரமாய் விழியிருட்டு

இளங்கதிர் ஏதுமென்மேல் விழுமெனில்

எழுவேன் உத்வேகமாய் முள்முடி உதறி

 

Pin It

உட்பிரிவுகள்