தொடர்புடைய படைப்புகள்

gas cylinder 400நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால், சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய உணவகம் உட்பட நாடெங்கும் பல்வேறு உணவகங்களில் உணவு சமைக்கிற பணி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எரிவாயு சிலிண்டர் அல்லாத மாற்றுத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.

சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனைக்குத் திமுக அரசு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் 'அறிவுபூர்வமான'ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதேநேரம், சிலிண்டர் தட்டுப்பாடு என்பதே கிடையாது, அது திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு சொல்லுகிற பொய்ச் செய்தி என்றும், நானும் ரவுடிதான் என்பதுபோல நானும் ஒரு கேஸ் டீலர் தான் என்றும் அதிரடியாக விளக்கம் அளித்திருக்கிறார் திருவாளர் நயினார் நாகேந்திரன். ஆனால், இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர்களைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த கையோடு வீட்டுப் பயன்பாட்டுக்குரிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் கணிசமாக உயர்த்தியும் இருக்கிறார் மிஸ்டர் நயினாரின் ஓனர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி.

இப்படி எதிரும் புதிருமாக கேஸ் சிலிண்டர் பிரச்சனை பரவிக் கொண்டிருக்கிற சூழலில், உள்ளபடியே வளைகுடா பகுதியில் அமெரிக்கா தொடுத்திருக்கிற போர் நடவடிக்கை என்பது உலகளாவிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிற எண்ணெய் வளங்களை வசப்படுத்தி, தான் உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார மேலாதிக்க வாதியாக உயர வேண்டும் என்பதே அமெரிக்காவின் குறிக்கோள் ஆகும்.

ஆயுத விற்பனை, எண்ணெய் விற்பனை என அத்தனை விற்பனைகளிலும் தானே முதன்மை வியாபாரியாக இருக்க வேண்டும் என்கிற அதிகார ஆணவம் அமெரிக்காவைப் பிடித்தாட்டுகிற இந்தச் சூழலில், இந்தியாவின் தேசபக்தியை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிற பாஜக அரசோ, மொத்த தேசபக்தியையும் சுதேசி கதையையும் மான் கீ பாத் உரைக்குள் அடக்கி வைத்துவிட்டு, 'அய்யா, எஜமானே கட்டளையிடுங்கள்....

என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்று அமெரிக்க அதிபருக்கு முன்னால் கைகட்டி நிற்கிறார் பாஜக அரசின் 'பிரதான்' மந்திரியு, 56 அங்குல பராக்கிரமசாலியான மோடியானவர்.

இந்தியா எங்கே எண்ணெய் வாங்க வேண்டும் ? எங்கே எண்ணெய் வாங்கக் கூடாது? எவ்வளவு நாட்கள் வாங்க வேண்டும்?

எங்கே எந்தப் பொருளை எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும்? என்றெல்லாம் அச்சுறுத்தி மிரட்டுகிறது பெரியண்ணன் அமெரிக்கா. அகண்ட பாரதத்தின் பிரதம மந்திரியோ, 'ஆகட்டுஞ்சாமி' என்று தலையாட்டுகிறார்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை, அடிப்படைத் தேவைகளை ஒரு தாயின் மனோ நிலையில் இருந்து நிறைவேற்றுகிற தலைவராக நமது முதலமைச்சர் இருக்கிறார். எரிவாயு நெருக்கடி நிலைமை ஏற்பட்டவுடன் அரசின் தலைமை அதிகாரிகளுடனும், எரிசக்தித் துறைசார்ந்த பொறுப்பாளர்களுடனும் பேசுகிறார், ஆலோசனை நடத்துகிறார். பிரதமருக்கும் உடனடியாக நிலைமையைச் சீர்செய்யத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறார்.

வாகனங்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கிறன. வணிக சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டு விட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 'இன்றோ? நாளையோ' என்று இருக்கிறது. நிலைமை இன்னும் மோசமாவதற்குள், என்ன செய்யப் போகிறார் பிரதமர் மோடி?

- காசு.நாகராசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.