தொடர்புடைய படைப்புகள்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எரிபொருள் கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதன்மூலம், உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவுகிறது என்று சொன்ன அமெக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வணிக அடிப்படையில் 25 விழுக்காடும், ரஷ்யாவிடம் எரிபொருள் எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25, ஆக 50 விழுக்காடும் வணிகவரியாக இந்திய ஒன்றியத்தின் மீது விதித்துள்ளார். ஆனால் சீனாவைச் சீண்டவில்லை டிரம்ப்.

 modi and putin 448இது தூத்துக்குடியில் 500 டன் கடலுணவு, திருப்பூர் பின்னலாடை உள்ளிட்ட தோல், மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் ஏற்றுமதி வணிகங்கள் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிக்க வேண்டும் என்றால் இந்திய ஒன்றியம் ஐரோப்பிய நாடுகளில் இந்தியச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும்.

தென்கிழக்காசியாவில் மக்கள்தொகை கூடுதலாகக் கொண்ட இந்தியா உலக வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பெரியநாடு. இங்கே ராணுவ நடவடிக்கை மூலமாகவோ, மக்களை அச்சுறுத்தும் வகையில் 50 விழுக்காடு வணிகவரி விதித்துத் தன்மேலாண்மை ஆளுமையை காட்ட வேண்டிய அவசியம் இல்லை, டிரம்ப்புக்கு. இந்திய - அமெரிக்க அரசுமுறைப் பேச்சுவார்த்தை மூலம் எதையும் சரிசெய்யலாம் என்பதை அறியாதவரல்ல அவர்.

டிரம்ப் தனது கொள்கைகள் மூலம் "அமெரிக்காவின் நட்பு நாடுகளை (இந்தியா) அந்நியப்படுத்தி வருகிறார்" என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி சொல்லியிருப்பது கவனத்திற்குரியது.

50 விழுக்காடு வரி இந்தியாமீது விதிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் பார்வை சீனாவை நோக்கித் திரும்பியுள்ளது. இந்திய ஒன்றிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் மாஸ்கோவுக்குச் சென்றார். பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சரும் அங்கு சென்றார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவுக்குச் செல்கிறார். இப்போது, சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகியநாடுகளின் குவாட் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் இங்கே எழுகிறது .

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் பீகிங்கில் இந்தியப்பிரதமர் ஜவகர்லால் நேரு, சீனப்பிரதமர் சூ யென் லாய் முன்னிலையில் கையெழுத்தான 'பஞ்சசீலக் கொள்கை' ஒரு புறம் இருந்தாலும், அருணாசலப் பிரதேசத்தின் சில இந்தியப் பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு, கன்வாய் பள்ளத்தாக்கு ஒப்பந்தம் உள்ளிட்ட சீனாவின் மீதான பிரச்சனைகள் இந்தியாவுக்கு இருக்கின்றன.

உலக வணிகம் என்று எடுத்துக் கொண்டால் இந்தியா மிக முக்கிய நாடாகும். அதனால்தான் இந்தியாவை உளவுபார்ப்பதற்காக இலங்கையில் காலூன்ற முயல்கிறது சீனா. 'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' என்ற பெயரில் திரிகோணமலையில் இறங்க நினைத்தது அமெரிக்கா. ரஷ்யா - இந்திய நட்பு தொடர்கிறது. இந்நிலையில் இந்தியா,லிபியா, ஈராக், அல்ஜீரியா,கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு டிரம்ப் அறிவித்திருக்கும் வரிகள் என்பது உலக நாடுகளிடையே ஆதிக்க வர்த்தகப் போரை உருவாக்க, அதில் தன்ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக அதிபர் டிரம்ப் நடவடிக்கை இருக்கிறது என்றால் தவறில்லை. இது வெறும் வரிவிதிக்கின்ற நாடகமல்ல. இதற்குள்ளும் ஓர் அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் களத்தில் ரஷ்யாவையும், சீனாவையும் டிரம்ப் தொடவில்லை. இந்தியாவை தொட்டிருக்கிறார் 50 விழுக்காடு வரியென்று.

இதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.