தமிழ்நாட்டில் அமைந்திருக்கிற நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை, பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது சங்பரிவார் கும்பல் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. வரலாற்றுக் காலத்தில் இருந்து பார்ப்பனர்கள் மேற்கொண்டு வருகிற சூழ்ச்சி அரசியலை இன்றைய அரசியலோடு ஒப்பாய்வு செய்து, தந்தை பெரியார் வழியில் இளைஞர்களை சுயமரியாதை உணர்வாளர்களாக மாற்றி தமிழ்நாட்டு அரசியலில் பெரியாரியலை மறு கட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

vijay 457கழகங்கள் இல்லாத ஆட்சி என்று கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே விளம்பரம் செய்தது பாஜக. அதாவது திமுக - அதிமுக அல்லாத ஓர் ஆட்சி, அதுவும் பாஜக ஆட்சி என்பதே அந்த விளம்பர முழக்கத்தின் நோக்கம்.

1967 இல் அமைந்த திமுக ஆட்சி காரணமாக, தமிழ்நாட்டு அரசியலில் சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றோடு, தமிழ்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்புகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவு வளர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா அம்மையாரின் காலத்தில் சுயமரியாதை என்பது விலக்கப்பட்ட போதும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மாநில உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்ட  போதும், மேற்கண்ட பொதுவான வேலைத்திட்டங்களில் இருந்து அதிமுகவால் பெரியளவில் விலகிட முடியவில்லை. அதனால் சங் பரிவார் கும்பலால் வடநாடுகளில் செய்வது போல மக்களைப் பின்னோக்கி இழுத்துப் போகும் சமூக விரோத, பிரிவினை, வன்முறை அரசியலை தமிழ்நாட்டிற்குள் செய்ய முடியவில்லை.

பொதுவாக ஆட்சியாளர்களின் மீதான மக்களின் இயல்பான சில குறைபாடுகள் காரணமாக கோபம் எழும், சிலபல தவறுகளால் ஆட்சி மாற்றங்களும் நிகழும். அதேசமயம் பார்ப்பனர்களால் தயாரிக்கப்பட்ட புதிய புதிய தலைவர்கள் கூட திராவிடத்தின் அடிப்படைக்கு வெளியே சிந்திக்கவோ, செயல்படவோ முடியாத அளவிற்குத் தமிழ்ச் சமூகம் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் பண்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தமுறை பார்ப்பனர்கள் புதிய கோணத்தில் சிந்தித்துத் திட்டமிட்டு தமிழ்நாட்டு அரசியலில் முன்னேற முயன்று இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்; நாம், கொஞ்சம் பின்னோக்கித் தள்ளப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதன்முறையாக கருப்பு வண்ணமில்லாத ஒரு கொடி, திராவிடம் என்கிற பெயரில்லாமல் தமிழ்நாட்டைப் புறந்தள்ளி தமிழக அடையாளத்தோடு பெயரிடப்பட்ட ஒருகட்சி, திராவிட இயக்கக் கோட்பாடுகள் எதையும் பேசாமல், அரசியலற்ற கோமாளித்தனமான, நாகரிகமற்ற ஆபாசமான பேச்சு, கவர்ச்சியான நடிப்பு, போலியான வேடம் ஆகிய நடவடிக்கைகளை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு நடிகரின் கட்சி தமிழ்நாட்டின் ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை தமிழ்நாட்டு அரசியலைச் சூழ்ந்திடாத அவலமாக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விலை வைத்தல், பணத்துக்காகவும், பதவிக்காகவும் கட்சி தாவுதல் ஆகிய அரசியல் சீர்கேடுகளையும் முதன்முறையாக தமிழ்நாட்டு அரசியல் களம் இப்போது சந்தித்து வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத் திட்டங்களில் முதன்மையானது இருமொழிக் கொள்கை. அதைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் ஆயிரம் சிபிஎஸ்சி பள்ளிகளுக்குத் தடையின்மைச் சான்று வழங்கப் படுகிறது. அதேநேரம் கிராமப்புற தொடக்கப் பள்ளிகள் மூடப்படுகின்றன.

கோயில் பணம் கோயிலுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று சொல்லுகிற பார்ப்பனர், அறநிலையத்துறைக்கு அமைச்சர் ஆகிறார். அவரோ பழனி முருகனின் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இரண்டுகோடிக்குக் கைமாற்றிவிட்ட பிரச்சனையில் தன்னை யாரேனும் குற்றம் சாட்டினால்... என்று மிரட்டுகிறார்.

கட்சி தொடங்கியதிலிருந்து முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை அவமரியாதையாகப் பேசுவதை இன்றைய முதலமைச்சர் நடிகர் விஜயும், அவரது அமைச்சரவை சகாக்களும் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்களில் கேள்வி கேட்டாலே அவமதிப்பு வழக்குப் போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.

இன்னொருபக்கம், தமிழ்நாட்டின் கடனை அடைப்போம், மதுவை ஒழிப்போம், ஜாதி மதத்தை வீட்டில் பூட்டிப் பத்திரப்படுத்துவோம் என்று கிளம்பியிருக்கிறார் அய்பிஎஸ் அண்ணாம'லய்'.

மேற்கு வங்கத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த பொதுவுடமை அரசை அகற்றத் தாற்காலிகமாக ஒரு மாற்று அரசை உருவாக்கி, தற்போது நேரிடையாகவே பாஜக ஆட்சியை அமைத்திருக்கிற சங்பரிவார், தமிழ்நாட்டிலும் அதே நடைமுறையில் ஓயாது முயன்று முதற்கட்டமாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மாற்றி மாற்றத்தின் பேரால் ஒரு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் பின்னணியில் சங்பரிவார் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்கிற உண்மையை மேற்கு வங்கம் உணராமல் இருக்கலாம். ஆனால், பெரியாரின் தமிழ்நாடு இதை நன்கு உணர்ந்திருக்கிறது.

பார்ப்பன சூழ்ச்சி அரசியலை நூற்றாண்டுக்கும் முன்பே முறியடித்த வரலாறு திராவிட இயக்கத்திற்கு, சுயமரியாதை இயக்கத்திற்கு இருக்கிறது.

வரலாற்றிலிருந்து நாம் கற்ற பாடங்களின் வழியாக இன்றைக்குக் கிளைவிட்டிருக்கிற ஆரிய பார்ப்பன சூழ்ச்சி அரசியலையும் நாம் முறியடிப்போம்! முறியடிக்க உறுதியேற்போம்!!

- காசு.நாகராசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.