‘இரையாகும் இறையாண்மை”

ஆசிரியர் : சு.அழகேஸ்வரன்,

விலை : ரூ.40/-

பக்கங்கள் : 56

                azhakeshwaran bookஇந்தியாவில் 1990 களிலிருந்து தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரம், தொழில்கள், வங்கிகள், கல்வி, மருத்துவம், ஆயுள்காப்பீடு, போக்குவரத்து, விவசாயம் முதலிய அனைத்துத் துறைகளிலும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் தீவிரமாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போதைய பா.ஜ.க ஆட்சியிலும் அமல்படுத்தப்படுகிறது.

                இந்திய நாட்டின் இயற்கை வளங்களையும், தொழில் வளங்களையும், மனித வளங்களையும் அன்னிய நாட்டு கார்பரேட் நிறுவனங்கள் சுரண்டி கொள்ளையடிப்பதற்கு அகலமான கதவுகளை திறந்துவிட்டு உள்ளனர் ஆட்சியாளர்கள்.

                இந்திய நாட்டில் தற்போது அந்நிய நாட்டு கார்பரேட் நிறுவனங்களின், அந்நிய நாட்டு கம்பெனிகளின் சுரண்டலையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடும் புரட்சிகர இடதுசாரிகளை, மக்கள் தேசவிரோதிகள் எனவும், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் எனவும் கூறி அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசில் தீவிரமடைந்து வருகிறது.

                ஆனால், இந்தியாவின் இயற்கை வளத்தையும், தொழில் வளத்தையும், மனித வளத்தையும் அந்நிய நாடுகளுக்கு கூறுபோட்டு விற்கும் கும்பல் தேசபக்தர்கள் என்று கொண்டாடப்படும் அவலம் நடந்தேறி வருகிறது.

                இந்திய ராணுவம் மிகவும் பலம் வாய்ந்தது. அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பிருந்து இந்தியாவை பாதுகாத்து வருகிறது. அதனால் இராணுவ ஒப்பந்தங்கள் குறித்து பேசுவது, விமர்சனம் செய்வது தேச விரோதமானது என்று ஆட்சியாளர்கள் கூப்பாடு போடுகிறார்கள்.

                இந்தியா - அமெரிக்க ராணுவ உறவுகள் குறித்து பல ஆதரங்களுடன் விரிவாக அலசி ஆராய்கிறது இந்நூல்.

                ‘ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்” அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் 1995 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ அதிகாரிகள் முதல் முறையாக பயிற்சிக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார்கள். ராணுவ ஊழியர்களும் இருநாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர்.

                மேலும், இந்நூலில் பாரதிய ஜனதா கட்சியின் வாஜ்பாய் தலைமையிலான அரசு, அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அலுவலகத்தை புதுடெல்லியில் துவக்குவதற்கு அனுமதி அளித்தது. மேலும், வாஜ்பாய் தலைமையிலான அரசு அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மலாக்கா வளைகுடாப் பகுதியில் சென்றுவர அனுமதி வழங்கியது. பின்னர் பதவியேற்ற காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுக்கிடையே போடப்பட்டுந்த குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கொள்கைகளுக்கு விரோதமாக அமெரிக்காவுடன் கூடிகுலாவும் அணுகுமுறையை மேந்கொண்டது. மேலும், ‘இந்திய - அமெரிக்கா பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒப்பந்தம்” 28.06.2005 அன்று போடப்பட்டது. பின்னர் ’பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில் நுட்ப முன்முயற்சி குழு” அமைக்கப்பட்டது. அதையொட்டி, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொண்டு கூட்டாக ஆயுதத் தளவாடங்கள் தயாரிப்பதற்கும், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிவதற்கும் உரிய நடவடிக்கைகளை மன்மோகன்சிங் அரசு தீவிரமாக்கிது.

                 பாரதிய ஜனதா கட்சி 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதையொட்டி, நரேந்திர மோடி பிரதமராக பதவியில் அமர்ந்தார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி 2002 ஆம் ஆண்டு பதவி வகித்த போது முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார் எனக்கூறி நரேந்திர மோடியின் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா.

                ஆனால், 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடன், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியல் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் நரேந்திர மோடியை அமெரிக்க நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார். எப்படி உள்ளது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு?

                நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு, செப்டம்பார் மாதம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க நாட்டு கம்பெனிகள்ஃ நிறுவனங்கள் கலந்து கொண்ட அமெரிக்க - இந்தியா வியாபாரக் குழுமக் கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றினார்.

                நரேந்திர மோடியின் அமெரிக்க நாட்டு சுற்றுப் பயணத்திற்கு பின்னர், இந்திய பசிபிக் கடல் பகுதிகளில் தடையற்ற, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உத்தரவாதப் படுத்துவதற்கான கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாகக் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், அமெரிக்கா, ஹனிவெல் நிறுவனத்தின் ஆயுதத் தளவாட தொழில் நுட்பத்தை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

                அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்புத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்வது, ராணுவம் சம்பந்தமான கல்வி மற்றும் இந்தியா நிறுவவுள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகப் பணிகளுக்கு உதவிகள் செய்வது என்பன போன்ற பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

                அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 22.02.2015 அன்று இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது நவீன ஆயுதக் தளவாடங்களை கூட்டாக தயாரிப்பது, ஆளில்லா உளவு விமானம், விமான கண்காணிப்பு கருவி, போர் பாதுகாப்புக்குழு உட்பட பல புதிய திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

                நரேந்திர மோடியும், பாரக் ஒபாமாவும் புதுடெல்லியில் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், விமானந்தாங்கிப் போர்க் கப்பல் கட்டுமானம் மற்றும் ஜெட் இஞ்சின் தொழில் நுட்பத்தை பரிமாறிக்கொள்ள பணிக்குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

                ‘ஆசியாவை மறுசமன்படுத்துதல்” என்ற திட்டம் சனவரி 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதையாடுத்து, ‘ஆசிய பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் அமெரிக்கா - இந்தியா தொலைநோக்கு அறிக்கை” வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்திய - பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது.

                ஆனால், ஜப்பான், தென்கொரியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகள், ஆசிய - பசிபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும், ஆசியா - பசிபிக் பிராந்தியம் விற்பனைக்கு அல்ல என்ற முழக்கத்தை முன்வைத்து பலமான எதிர்ப்புகளை தெரிவித்தன.

                இந்தியாவில் ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசு அணு ஆயுதங்களை சுமந்து வரும் அமெரிக்காவின் கப்பல்களையும், விமானங்களையும் இந்திய கடல் எல்லையில் அனுமதித்து வருகிறது மேலும், அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் முதலிய நாடுகளில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்கிறது.

                இறுதியாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும், கட்டுபாட்டிற்கும் இந்தியா சென்றுள்ளது. நரேந்திர மோடி அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் வேட்டு வைக்கும் செயலாகும்.

                அமெரிக்காவுடனான பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி அரசு மேற்கொண்டிருக்கும் ராணுவ உறவுகளை, ஒப்பந்தங்களை அனுமதிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கும், தேசப் பாதுகாப்பிற்கும் விரோதமானது ஆகும்.

                எனவே, இந்தியாவில் உள்ள புரட்சிகர கட்சிகள், இடதுசாரி கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், சனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, இந்தியாவின் இறையாண்மை இரையாகாமல் பாதுகாக்கப் போரட வேண்டியது இன்றைய வரலாற்றுக் கடமையாகும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

                இந்நூல் தமிழக வாசகர்களுக்கு இந்திய ராணுவம், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதை விரிவாக விளக்குகிறது.

                எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து இடதுசாரி, முற்போக்கு சக்திகளும் இந்நூலை படித்து பயன்பெற வேண்டும். நூலின் ஆசிரியர் முன் வைக்கும் கருத்துக்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள், விமர்சன அரங்குகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

- பி.தயாளன்

Pin It