தமிழ்நாடு முதலமைச்சர் நடிகர் விஜய் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது குழந்தைகள், சிறுமிகள், முதியோர் யாருக்குமே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும், பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும், இதை முன்கூட்டியே தடுக்காமல் முடிந்ததற்குப் பிறகு வழக்குகளைப் பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும்,
தான் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நிமிடமே இதுபோன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்துவேன் என்றும் பொதுக்கூட்ட மேடைகளில் யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு சிறப்பாகப் பேசி நடித்துக் காட்டினார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிற நடிகர் விஜய், அவருக்கு இருக்கிற பெரும் ரசிகர் கூட்டம், சினிமா கவர்ச்சி, அவருடைய நடிப்பு ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு திராவிடமாடல் ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும், குறைபாடுகளையும் மக்களிடத்தில் பெரிய பிம்பமாக கட்டுவதற்கு முடிந்தது, அவரை அரசியலுக்கு இழுத்து வந்த அவரது எஜமானர்களால்.
அரசு நிர்வாகம் பற்றிய புரிதலோ, ஆட்சி அதிகாரம் பற்றிய தெளிவோ, அரசியல் குறித்த அடிப்படை அறிவோ, குறைந்தபட்சம் சமூக அக்கறையோ எதுவும் இல்லாத நடிகர் விஜய், தான் நடிக்கிற திரைப்படங்களுக்கான ஒப்பந்தப் பணத்தைக் கூட கருப்பில் கொஞ்சம், வெள்ளையில் கொஞ்சம் என்று வாங்கி சொத்துகளை குவித்துக் கொண்டவர்.
அவர் வாங்கிய ஒரு வெளிநாட்டு காருக்குக்கூட நேர்மையாக வரி கட்ட மறுத்து நீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்ற நடிகர் விஜய், எதிலும் எப்போதும் உண்மையானவராக இருப்பவர் இல்லை.
இந்தியாவின் பெருமை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிற குடும்பம், மனைவி, குழந்தைகள் என்கிற சராசரி கட்டமைப்பில் கூட அவர் உண்மையானவராக, நேர்மையாளராக நடந்து கொள்ளவில்லை என்பதை அவருடைய மனைவி சங்கீதா அவர்கள் கொடுத்திருக்கிற விவாகரத்து வழக்கும், அவருடைய குழந்தைகள் கூட அவரை சந்திக்காத அல்லது குழந்தைகளைக் கூட இவர் சந்திக்காத அவலமும் ஊரறிந்த உண்மையாகும். இவையெல்லாம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை, ஒழுக்கத்தை, அறிவு, நாணயத்தை அளவிட்டு சொல்கின்றன.
தனி வாழ்க்கையில் ஒழுக்கமும் நேர்மையும் இல்லாத ஒருவன் பொது வாழ்க்கையில் ஒரு சமூக அரசியல் களத்தில் தலைமை தாங்குகிற போது அது பொது சமூகத்தை எந்த அளவிற்கு சீரழிக்கும் என்பதற்கு கடந்த ஒரு மாத கால நடிகர் விஜயின் ரீல்ஸ் ஆட்சியே ஆகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.
"விஜய் சார்! நீங்க தெறி படத்தில் ஓடி வந்து குற்றவாளியைக் கண்டுபிடித்து பாலத்துல கட்டித் தொங்க விட்ட மாதிரி எங்க ஊருக்கும் வந்து குற்றவாளிகளுக்கு நீங்க தண்டனை தரணும்" என்று அப்பாவியாகப் புலம்புகிற தாய்மார்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டுத் தெருக்களில் பரிதாபமாகத் திரிகிறார்கள். நடக்கிற குற்றங்களுக்கு குறைந்தபட்சம் காவல்துறை அதிகாரிகளை அழைத்துக் கூட ஓர் ஆய்வுக் கூட்டத்தை இதுவரை நடத்தவில்லை முதல்வராக இருக்கிற நடிகர் விஜய். அவரும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து இதுவரையும் பேசவில்லை.
அவ்வளவு ஏன் இவர் கட்சி தொடங்கி நடத்திய போதும், பொய்களைப் பேசியே வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதும், கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்து வருகிற மிகப்பெரும் பாலியல் போதை மற்றும் சமூக குற்றங்கள் என எதன் பொருட்டும் இதுவரை பத்திரிகையாளர்களையே சந்திக்காமல் அமைதியே உருவாக நாட்டையும் மக்களையும் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி அலட்சியமாகக் கடந்து செல்லுகிறார் 'க்யூட்' முதல்வர் நடிகர் விஜய் .
தமிழ்நாடு இதுவரை இது போன்ற ஓர் அவலமான ஆட்சியைக் கண்டதில்லை. இதுவரை இது போன்ற ஓர் அலட்சியமான, பொறுப்பற்ற விட்டேர்த்தியான ஒரு தலைவரை, முதலமைச்சரைக் கண்டதில்லை என்கிற அசிங்கமான காலகட்டத்தை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது!
இதெல்லாம் கதையல்ல நிஜம்!!
- காசு. நாகராசன்