அமெரிக்காவில் இரண்டு முறைதான் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிபராகலாம். தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இது இரண்டாம் வாய்ப்பு. அடுத்து இனி அதிபராகும் வாய்ப்பு அவருக்கு இல்லை, முடியாது. அதனால் இரண்டாம் தடவை அதிபராக இருக்கும் போதே ஆடுஆடு என்று ஆடிவிட்டுப் போக முடிவு செய்திருக்கிறார் போலத் தெரிகிறது.

'அதோ பாக்கிஸ்தான் சொல்லிவிட்டது, ஏழெட்டுப் போர்களை நானே தடுத்து நிறுத்திவிட்டேன், அதனால் அமைதிக்கான நோபல் பரிசை எனக்குத்தான் தரவேண்டும்' என்று கிடையாய்க் காத்துக் கிடந்த டொனால்ட் ட்ரம்ப் அதை மரியா கொரீனா மச்சோடாவிடம் பறிகொடுத்து விட்டார். trump gazaஇப்போது இஸ்ரேல்-காசா போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துவதற்கு முனைகிறார். அதற்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைக்கிறார். இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொண்டது. காரணம், 20 அம்சத்திட்டம் இஸ்ரேலுக்குச் சாதகமாக இருக்கிறது. ஹமாஸ் அமைப்பு இத்திட்டத்தை நிறைவோடு ஏற்கவில்லை. காரணம், அவை நடுநிலையாகத் தயாரிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது. எனவே ட்ரம்ப் முன்னிலையில் நடந்த அமைதி ஒப்பந்தம் இஸ்ரேல்-ஹமாஸ் இருதரப்பினர் நேரடியாகப் பேசாமல் "கையெழுத்தாகிவிட்டது" என்று அறிவித்தார் ட்ரம்ப்.

இருந்தாலும், இந்த அறிவிப்புகள் சில பிரச்னைகளை உள்ளடக்கவில்லை, இரு தரப்பினரும் அவை குறித்து ஒரு தீர்வை எட்டவில்லை என்றே தோன்றுகிறது.

ஹமாஸின் ஆயுதக் குறைப்பைப் பற்றிய எந்த விளக்கங்களும் ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை.

 ஹமாஸ் முன்னதாகத் தமது ஆயுதங்களைக் குறைக்க மறுத்துவிட்டது. ஒரு பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று கூறிவிட்டது.

காஸாவின் எதிர்கால ஆட்சி குறித்துத் தெளிவு ஏதும் அந்த அம்சத்தில் இல்லை. ட்ரம்பின் 20 அம்சத் திட்டம், ஹமாஸுக்கு காஸாவில் எதிகாலத்தில் பங்கு இருக்காது என்றும் அந்தத் திட்டவரையறை கூறுவது எந்த அடிப்படையில் என்பதும் விளங்கவில்லை.

நெதன்யாகு, ட்ரம்பின் திட்டத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட, பாலஸ்தீன அதிகார சபையின் செயல்கள் இதற்கு உடன்படாதது போலத் தோன்றுகிறது.

இஸ்ரேலின் ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் தீவிர தேசியவாதிகள் பலர் காஸாவில் யூதக் குடியேற்றங்களைப் புனரமைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் இருக்கும் நிலையில் அமைதி ஒப்பந்தம் நிறைவேறியது என்கிறார் ட்ரம்ப். அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்பந்தத்தை மீறுகிறது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்பும் எதிர் நடவடிக்கையில் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

"வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதைத் தாமதப்படுத்துவது, காஸா முனையின் பல்வேறு பகுதிகளில், குண்டுகள் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்தப் பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த விதி மீறல்களுள் அடங்கும்.'' என்கிறது ஹமாஸ். இதையெல்லாம் காதில் வாங்காத ட்ரம்ப் ஹமாசை எச்சரிக்கிறார் அழித்துவிடுவேன், ஒழித்துவிடுவேன் என்று.

உண்மையைச் சொன்னால் இஸ்ரேல்-காசாவில் ட்ரம்ப் தலையீடுதான் அங்கு அமைதி ஏற்படத் தடையாக இருக்கிறது. அவர் வெளியேறினால் அந்தப் பணியை உலக நாடுகள் செய்து முடிக்கும்.

எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.