தொடர்புடைய படைப்புகள்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம், பூமிப்பந்தில் வாழும் மனிதகுலத்திற்கு ஓர் அறிவார்ந்த செய்தியைச் சொல்கிறது. இதன் உடனடி நோக்கம் போர் தீவிரமடைவதைத் தடுப்பதே ஆகும். இத்துடன் நவீன போர்முறையின் தாக்கம், இராஜதந்திரச் செயற்பாடுகள், கடந்தகால வரலாற்று அனுபவங்கள் ஆகியன முதன்மை நோக்கமாக முக்கியத்துவம் பெறுகின்றன.

வல்லாதிக்க இறுமாப்பு, தன்னலம் சார்ந்த புவிசார் பாதுகாப்பு காரணமாகப் போர் தொடங்கினாலும், இறுதியில் அவை வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருகின்றன என்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.

iowans rally to end war in iran

(Image courtesy: Jon Krieg/AFSC)

உலகளாவிய எதிர்ப்பையும் தாண்டி, மனிதகுல அழிவைத் தேடி, வலிந்து போர் தொடுக்கும் வல்லரசுகள், இறுதியில் ஆக்கப்பூர்வமான அரசியல் தீர்வுகளை நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதற்குப் பல உதாரணங்களை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அமெரிக்கா-ஈரான் போரும் இதற்கு விதிவிலக்கல்ல.

வரலாற்றுப் பின்னணி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை வேர்கள் பல தசாப்தங்களாக வேர்பிடித்து விழுதுவிட்டுள்ளன. மேற்கத்திய சக்திகளின் ஆதரவுடன் ஈரானியப் பிரதமர் முகமது மொசாடேக்கிற்கு எதிராக 1953-இல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு, ஈரானிய அரசியலில் ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்தியது. 1979-ஆம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சி, மேற்கத்திய சார்பு முடியாட்சிக்கு முடிவு கட்டியது; அமெரிக்காவை அவநம்பிக்கையுடனும் சந்தேகக் கண்ணுடனும் பார்த்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது. இவையாவும் பன்னாட்டு அரசியல் உறவுகளைத் தலைகீழாய் மாற்றியமைத்தன.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இராஜதந்திர நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், சித்தாந்த வேறுபாடுகள் ஆகியன ஒரு மோதல் போக்கை வடிவமைத்தன. அவ்வப்போது போர் பதற்றம் அதிகரித்தபோதும், பேரழிவைத் தரும் விளைவுகளை உணர்ந்து, இரு நாடுகளும் போர் ஏற்படுவதைத் தவிர்த்து வந்தன.

எனவே, சமீபத்திய போர் நிறுத்தம் என்பது பகைமையின் இடைநிறுத்தம் மட்டுமல்ல, வழக்கமான இராஜதந்திரத்திற்கு வழிகாட்டும் ஒரு வரலாற்றுப் போக்கின் தொடர்ச்சியாகும்.

கடந்த காலப் போரின் பாடங்கள்

வரலாற்றில் விரவிக் கிடக்கும் சான்றுகளில் வியட்நாம் போர் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. வரம்பற்ற இராணுவ வல்லாதிக்கத்தை அமெரிக்கா கொண்டிருந்த போதிலும், அது நிலையான அரசியல் தீர்வுக்கும் அமைதிக்கும் வழிவகுக்கவில்லை. பல ஆண்டுக்கால பனிப்போருக்குப் பின், பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடியாதவையாகின.

அதேபோன்று, ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் தலையீடு (1979–1989), அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையிலான தலையீடு (2001–2021) ஆகியன, வல்லாதிக்க இராணுவ வலிமையால் மட்டுமே களத்தில் உள்ள அரசியல் எதார்த்தங்களை மாற்றிவிட முடியாது என்பதை எடுத்துரைத்தன.

2003-ஆம் ஆண்டில் சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் நடந்த ஈராக் போர் மற்றொரு பாடத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியது. அதன் ஆரம்பகட்ட இராணுவ நடவடிக்கை, உடனடி நோக்கங்களை அடைந்தது; ஆனால் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைத்தன்மை, இராணுவத் தீர்வுகளின் குறைபாடுகளை அம்பலப்படுத்தியது. இராணுவ வல்லாதிக்க வெற்றியை விட அரசியல் ரீதியான மறுசீரமைப்பு மிகவும் கடினமானதாக அமைந்தது.

இந்த உதாரணங்கள் ஒரு பொதுவான உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றன. போர்க்களங்கள் எதார்த்த நிலையை மாற்றியமைக்கக்கூடும், ஆனால் நிலையான அமைதிக்கு அறிவார்ந்த இராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் ஆக்கப்பூர்வமான அரசியல் ஒப்பந்தங்கள் அவசியமாகும் என்பதை எடுத்தியம்புகின்றன.

எதார்த்தத்தை அங்கீகரிக்கும் போர்நிறுத்தம்

போர்நிறுத்தம் என்பது பெரும்பாலும் பலவீனத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில், அது அரசியல் முதிர்ச்சியின் அனுபவ வெளிப்பாடாக அமையலாம்.

நாடுகள் போரை நிறுத்த ஒப்புக்கொள்ளும்போது, அவை பல எதார்த்தங்களை அங்கீகரிக்கின்றன:

போர் தீவிரமடைவது கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பொதுமக்களுக்கு ஏற்படும் பெருந்துயரம் ஒரு கட்டத்தில் அரசியல் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

பொருளாதாரச் செலவுகளை நியாயப்படுத்துவது காலப்போக்கில் கடினமாகிறது.

பிராந்தியத்தின் நிலைத்தன்மையின்மை என்பது பரந்த அளவிலான பன்னாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.

இரு தரப்பினரின் மேலாதிக்கத்தை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது என்றாலும் அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் மேற்கூறப்பெற்ற எதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. எனவே, அறிவார்ந்த இராஜதந்திரம் என்பது அதிகாரத்திற்கு மாற்றான ஒன்றாக இல்லாமல், அதிகாரத்திற்குத் தேவையான ஒரு முக்கிய கூறாக மாறுகிறது.

போரினால் ஏற்படும் உயிரிழப்புகள்

போர் நிறுத்தத்தின் மிக முக்கியமான காரணமாகத் திகழ்வது போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகும். வரலாறு முழுவதும், இராணுவ மோதல்களின் பெருஞ்சுமையைப் பாமர மக்களே சுமந்து வந்துள்ளனர். முதல் உலகப் போரின் பேரழிவுகள் தொடங்கி ஈராக், சிரியா, பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், உக்ரைன் போர் வரை ஏற்பட்டுள்ள இடப்பெயர்வு, பொருளாதார நெருக்கடி, உளவியல் ரீதியான பாதிப்புகள், உயிரிழப்புகள் போன்றவற்றை அடிநிலை மக்கள் சந்தித்துள்ளது மறுக்கவியலா உண்மையே.

எனவே, போர் இல்லாத ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தின் வெற்றித் திருநாள் என்று கருதுவது மிகையன்று. இதை நினைவூட்டும் ஒரு நிகழ்வாக இந்தப் போர் நிறுத்தம் உள்ளது.

அதிகார அரசியலின் விமர்சனம்

இந்தப் போர், பன்னாட்டு உறவுகளில் காணப்பெறும் பரந்துபட்ட முரண்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. அமைதி, சனநாயகம், மனித உரிமைகள், அகில உலகச் சட்டங்கள் போன்றவற்றை வல்லரசுகள் அவ்வப்போது ஆதரிக்கும் அதே நேரத்தில், இராணுவத் திறன்களைப் பரவலாக மேம்படுத்தி, புவிசார் அரசியல் போட்டிகளிலும் ஈடுபடுகின்றன.

இந்த முரண்பாடு குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு மட்டும் தனித்துவமானதல்ல. வரலாறு முழுவதும், பேரரசுகளும் வல்லரசுகளும் புவிசார் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு இராணுவ நடவடிக்கைகள் அவசியம் என்று அவ்வப்போது நியாயப்படுத்தியுள்ளன.

பாதுகாப்புக் கவலைகள் நியாயமற்றவையா?

இராணுவத் தீர்வுகள் கடைசித் தேர்வாக இல்லாமல் முதன்மைத் தேர்வாக முன்வைக்கப்படும்போது, அதற்கு அந்த அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நம்பகத் தன்மையை விட, தன்னலம் சார்ந்த வல்லாதிக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதே இங்கு தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இதை புவிசார் அரசியல் பாதுகாப்பு என்ற சொல்லாடலில் மறைத்துக் கொள்வது நியாயமற்றது.

போரைத் தடுக்கும் இராஜதந்திரம்

தொடர்ச்சியான அறிவார்ந்த இராஜதந்திர உரையாடல் மூலம் தவிர்க்கப்பட்ட போர் நெருக்கடிகளை உலகம் பல முறை கண்டுள்ளது. 1962-ஆம் ஆண்டின் “கியூபா ஏவுகணை நெருக்கடி” மனிதகுலத்தை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டுவந்தது; ஆயினும் தகவல் தொடர்பும் பேச்சுவார்த்தையும் இறுதியில் பேரழிவைத் தடுத்தன.

அதேபோன்று, போர்ப்பதற்றங்கள் அபாயகரமான நிலையை எட்டுவதற்கு முன்பே மேற்கொள்ளப்படும் இராஜதந்திரச் செயற்பாடுகள், இராணுவ மோதல்களைத் தடுத்து நிறுத்தக் கூடியவையாகும். எனவே, போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவதே அறிவார்ந்த இராஜதந்திரத்தின் வெற்றியாகும். எதிர்கால மோதல்களைத் தடுக்கும் திறன்கொண்ட வழிமுறைகளை உருவாக்கும் செயற்பாடுகள் வரலாற்றில் அளவிடப்படும்.

முடிவுரை

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் பன்னாட்டுச் சமூகத்திற்கு ஒரு வலுவான, ஆக்கப்பூர்வமான செய்தியைச் சொல்கிறது: இராணுவ மோதல்கள் போர்க்களத்தை வடிவமைக்கலாம், ஆனால் அறிவார்ந்த இராஜதந்திரமே விளைவுகளையும் முடிவுகளையும் தீர்மானிக்கிறது. வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட எண்ணற்ற பிற போர்களின் அனுபவங்கள், போர்கள் தாமாகவே நீடித்த நிலையான தீர்வுகளை அரிதாகவே உருவாக்குகின்றன என்பதை நிரூபிக்கின்றன.

இந்தப் போர் நிறுத்தம் என்பது சண்டையை நிறுத்துவது மட்டுமல்ல; மனிதகுலத்தின் தகராறுகளைத் தீர்ப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிமுறைகளை வெளிப்படுத்தும் உரையாடலாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பதற்றத்தை அதிகரிப்பதற்கு முன் பேச்சுவார்த்தைக்கும், உலக அமைதிக்கும் முன்னுரிமை அளிக்குமாறு இது உலகத் தலைவர்களுக்குச் செய்தி சொல்கிறது.

ஒவ்வொரு போரும் இறுதியில் போர் நிறுத்தத்திற்கு ஒரு வழியைத் தேடும் என்று வரலாறு கற்பிக்கிறது. போரில் ஈடுபடுவதற்கு முன் போர் நிறுத்தத்திற்கான வழியைத் தேடுவதே புத்திசாலித்தனமாகும். எனவே, அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தத்தின் நோக்கம் தெளிவாகிறது: நிலைத்த அமைதி என்பது வெற்றியின் மூலம் மட்டும் அடையப்படுவதில்லை, மாறாக பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து, புவிசார் அரசியல் லட்சியங்களுக்கு மேலாக மனித நலனைக் காக்கக் காட்டும் தீரமான சமூக அக்கறையின் மூலமே அடையப்படுகிறது.

- ச.மோகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.