வரும் நவம்பர் 6, 11 ஆகிய நாள்களில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி முடிவுகள் வெளிவரும் என அறிவித்துள்ளனர்!

tejaswi yadavஇந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையில்தான் கடுமையான போட்டி இருக்கிறது என்பதை அறிவோம். இந்தியா கூட்டணியில் ஒரு குழப்பம் நிலவுவதாகவும், 11 இடங்களில் கூட்டணிக் கட்சிகளே நேரடியாக மோதுகின்றன என்றும் செய்திகள் வெளிவந்த போது, ஜனநாயக உணர்வாளர்கள் அனைவருக்கும் அது கவலை தந்தது!

இப்போது நிலைமை மாறி இருக்கிறது!

இந்தியா கூட்டணிக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டு, காங்கிரஸின் சார்பாளர் அசோக் கெலாட், பீகாரின் அடுத்த முதல்வர் தேஜஸ்வி யாதவ்தான் என்று அறிவித்திருக்கிறார்! இன்னொரு கட்சியிலிருந்து துணை முதல்வர் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது !

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ, நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. முதலமைச்சர் யார் என்பதைத் தேர்தல் முடிந்த பிறகுதான் அறிவிக்க முடியும் என்று அமித்ஷா கூறியுள்ளார்! அதாவது அடுத்த முதலமைச்சர் நிதிஷ்குமார் இல்லை என்பதை, மறைமுகமாக பாஜக தெரிவித்திருக்கிறது!

தங்களோடு கூட்டணி சேரும் கட்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு, அந்த இடத்திற்குத் தாங்கள் வந்து விட வேண்டும் என்பதுதான் எப்போதும் பாஜகவின் திட்டம் ! தமிழ்நாட்டில் அதிமுகவை அழிக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதைப் போல, பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை அழிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதே இதன் பொருள்!

வஞ்சகமான முறையில் அடுத்தவர்களை அழிக்க நினைப்பவர்கள், முதலில் தங்களின் அழிவைத் தேடி கொள்வார்கள் என்பதே வரலாறு சொல்லும் செய்தி !

எப்படியோ, வரும் தேர்தலில் பீகாரில் ஓர் அரசியல் மாற்றம் நடைபெற இருக்கிறது என்பது தெரிகிறது! ஆம், வாக்குத் திருட்டு எப்படி நடைபெற்று இருக்கிறது என்பதை அங்குதானே ராகுல் காந்தி முதலில் அம்பலப்படுத்தினார்! அந்த இடத்திலிருந்து மாற்றம் தொடங்குவது பொருத்தமாகத்தான் இருக்கும் !

எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம், யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் எல்லாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்பு காட்ட வேண்டிய நேரம் இது! இந்தியா கூட்டணி அதனைக் கவனமாகச் செய்து முடிக்கும் என்று நம்புவோம் !

இந்தியாவிற்கான எதிர்கால மாற்றத்தைப் பீகார் தொடக்கி வைக்கட்டும்! பீகாரின் அடுத்த முதல்வர் தேஜஸ்விக்கு நம் அன்பான வாழ்த்துகள்!

சுப. வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.