‘ஈரான் முழுமையாக அழிய இருக்கிறது. அதன் உள்கட்டமைப்புகளை ஒருபோதும் மீண்டும் சீரமைக்க முடியாது’ என்று ஏப்ரல் முதல் வாரம் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, ஹோர்முஸ் தீவினைத் திறக்கவும், அமெரிக்காவுடன் போர்நிறுத்தம் செய்து கொள்ளவும் ஈரானுக்குப் பத்து நாட்கள் அவகாசம் அளிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பிறகு, இறுதியாக 48 மணி நேரம் எஞ்சியிருப்பதாகக் கூறினார். அவரின் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், "ஈரான் நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்" என்று உச்சகட்ட ஆணவத்துடன் உலகிற்கு அறிவித்தார். ‘ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழிய இருக்கிறது. அது ஒரு போதும் திரும்பாது’ என்று தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.iran war 484ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்கள், பாலங்கள், குடிமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அந்த நாட்டின் மிகவும் கேந்திரமான பகுதிகளை நிர்மூலமாக்குவதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர் நாட்டில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தது போல், பிற நாடுகளுக்கு என்று தனித்தனியான ஆட்சி உள்ளது, அவ்வவற்றுக்கு என வரையறுக்கப்பட்ட சட்டங்களும் நியாயங்களும் உள்ளன, அந்தந்த நாட்டிற்கென தனி இறையாண்மையுள்ளது என்பதையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு. தானே உலகத்தின் சர்வ அதிகாரம் மிக்க ஆட்சியாளரைப் போல் எக்களிப்புத் தாண்டவமாடுகிறார்.

அவர் பயன்படுத்தும் சொல்லாடல்கள் யாவும் ஐனநாயக மாண்புகளுக்கு விரோதமானவை என்பதோடு அடிப்படை மனிதப் பண்புகளுக்கே எதிரானவை என்பதை நடுநிலையாளர்களும் நல்லவர்களும் உணர்ந்துள்ளனர்.

2026 பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர் அலி ஓ செய்னி காமெனி. இவர் ஈரானின் உயர் அதிகாரம் படைத்த ஆன்மீகம் மற்றும் அரசியல் அதியுயர் தலைவராகப் பல்லாண்டுகள் பதவி வகித்தவர். இவரைத் திட்டமிட்டுக் கொன்று முடித்தனர்.

அதற்கும் முன்னதாக, கடந்த ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கா வெனிசுவேலா நாட்டின் மீது தொடர்ச்சியான அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தி, அந்நாட்டின் அரசுத் தலைவரான நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரசும் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் அந்நாட்டு நேரப்படி அதிகாலை இரண்டு மணிக்குத் தொடங்கியது. இத்தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட அதிநவீனப் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்ட தலைவரும், அவருடைய மனைவியும் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வெனிசுவேலா நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கத் தவறிய குற்றமும், உள்நாட்டில் பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய குற்றமும் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

அமெரிக்க அதிபரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வெனிசுவேலா தலைவரும் அந்நாட்டு மக்களால் வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்டவர். அப்படியிருக்க, இரவோடு இரவாக இன்னொரு நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் தலைவரை அவரது மனைவியுடன் கைது செய்ய எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?

அமெரிக்கத் தாக்குதலின் சட்டபூர்வமான தன்மையை அந்நாட்டு அதிகாரிகள் பலரே கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு அமெரிக்கத் தாக்குதலை 'ஓர் ஆபத்தான முன்னுதாரணம்' என்றார். பன்னாட்டுச் சட்டத்தைக் (International Law) கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார். போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குள் வெனிசுவேலா நாட்டிலிருந்து கடத்தப்படுவது உண்மையானால், அதைத் தன் நாட்டின் எல்லைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டியது அமெரிக்க அரசின் கடமை. அவ்வாறு தன்னால் இயலவில்லையெனில், தான் ராஜினாமா செய்வதை விட்டுவிட்டு, அடுத்த நாட்டின் தலைவரைக் கைது செய்யும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?

வெனிசுவேலா நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது கண்வைப்பதையும், பிற நாட்டை ஆதிக்கம் செய்வதையும், அடிமைப்படுத்துவதையும், மிரட்டுவதையும் தனது அன்றாடப் பணிகளாகக் கொண்டு இயங்குபவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இத்தகைய வரலாற்று வன்மங்களின் தொடர்ச்சிதான் ஈரான் தலைவர்களைத் கொன்றதும், ஈரானையே இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவேன் என்பது போன்ற கொக்கரிப்புகளும்.

அமெரிக்காவெங்கும் டிரம்பின் போர்வெறிக்கெதிராக மக்கள் வெள்ளமெனத் திரண்டு அறப்போர் நடத்துகின்றனர். அமெரிக்க முக்கிய அரசியலாளர்கள் பலர் அமெரிக்காவை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் டிரம்பின் போர் வெறியை வன்மையாகக் கண்டிக்கின்றனர். இத்தாலி, பிரிட்டன் தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், உள்ளிட்ட உலகின் பெரு நகரங்களில் வாழும் அமெரிக்கர்களும் அந்தந்த நாட்டவரும் டிரம்புக்கு எதிராக ஆர்ப்பரிக்கின்றனர்.

உலகின் எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தைகளில் தீர்வு உள்ளது. இனிவரும் போர்கள் எவையும் இதற்கு முன்பு வந்த போர்களைப் போல இருக்காது. ஒரு கட்டத்தில் மனிதனே நினைத்தாலும் கட்டுப்படுத்தி நிறுத்திவிடமுடியாத அளவுக்கான அழிவைத் தருவன - அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள காலகட்டத்தில் நடைபெறும் இக்காலப் போர்கள்.

‘கெட்ட போரிடும் உலகினை வேரொடு சாய்ப்போம்’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிதான் இன்றைய உலகப் பதாகையாக உயர்த்தப்பட வேண்டும்.

சமூகப் பொறுப்பும், சர்வதேசச் சிந்தனையும், தேசிய உணர்வும், தாய்மொழிப் பற்றும், மனித நேயமும் கொண்ட ‘உங்கள் நூலகம்’ உலக அளவிலான சமாதானத் தூதுவர்களாக விளங்கும் படைப்பாளிகளோடும் படிப்பாளிகளோடும் கரம் கோர்த்து, போரற்ற உலகம் படைக்க உறுதியேற்கிறது. ஆதிக்கம் செலுத்துகிற அழிவு சக்திகளுக்கு எதிராகக் கண்டனம் செய்கிறது. களத்தில் நிற்கிறது.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.