கடவுளின் வெற்று முகத்தைக் காண
நீங்கள் விரும்புகிறீர்களா?

காசாவுக்கு வாருங்கள்

உலகின் உண்மையான ஆட்சியாளரைக் காண
நீங்கள் விரும்புகிறீர்களா?

காசாவுக்கு வாருங்கள்

சுதந்திரத்தின் அருவருப்பான பொய்யைக் காண
நீங்கள் விரும்புகிறீர்களா?

காசாவுக்கு வாருங்கள்

மனித இதயத்தின்
மெய்யான நிறத்தைக் காண
நீங்கள் விரும்புகிறீர்களா?

காசாவுக்கு வாருங்கள்

எந்த டிராகன் தன் மூச்சால்
உலகை இருத்தலுக்கு
கொண்டு வந்தது என்பதைக் காண
நீங்கள் விரும்புகிறீர்களா?

காசாவுக்கு வாருங்கள்

உங்கள் எதிர்காலத்தை
உங்கள் உண்மையை
உங்கள் வலியை
உங்கள் எளிதான துரோகிகளைக் காண
நீங்கள் விரும்புகிறீர்களா?

காசாவுக்கு வாருங்கள்

எண்ணத்தில் சிறு மாற்றமிருந்தாலும்
வராதீர்கள்

ஏனென்றால்
நான் உங்களிடத்து
வந்து கொண்டிருக்கிறேன்
நெருப்புடன், ரோஜாப் பூவுடன், புயலுடனும்.
_____________________________________

இந்த் ரஜாப் (ஆறு வயதுக் குழந்தை) நினைவாக…

“பயமாக இருக்கு, யாராவது வாங்களேன்”
__ இந்த் ரஜாப்

என்ன செய்து விட்டீர்கள்
என்ன செய்து விட்டீர்கள்?

இன்னொரு முறையும் கேட்கிறேன்

ஒரு சின்னஞ்சிறு பெண்
ஆறே வயது அவளுக்கு
அவசர ஊர்தியை அலைபேசியில்
அழைக்கிறாள்
அதை நீங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

இதுதான் உங்கள் எதிரியின் முகமா?
இவளைத்தானா
நீங்கள் பலிகொள்ள விரும்புகிறீர்கள்?

ஒரு சிறு பெண்ணா
உங்களை அச்சுறுத்துகிறாள்?

இருக்கலாம்

ஏனென்றால்
நீங்கள் அவளைக் கொடூரமாகக்
கொன்றீர்கள்

நீங்கள் ஓநாய்களின் தேசமாக
ஆகிவிட்டீர்கள்
குள்ள நரிகளின் தேசமாக
ஆகிவிட்டீர்கள்

உங்கள் உண்மையான இலக்குதான் என்ன?
அழித்தொழிப்பதா?
நாட்டை விட்டு விரட்டியடிப்பதா?
நடுங்க வைத்து இடம்பெயரச் செய்வதா?

இந்தச் சிறு பெண்
இந்த ஆறுவயதுச் சிறுமி
அலைபேசியால் உங்கள் திட்டங்களை
அம்பலப்படுத்துகிறாள்

உங்களுக்கு அவள்
என்ன செய்துவிட்டாள்?

நீங்கள் அங்கிருந்தீர்கள்
அவளை நீங்கள் பார்த்தீர்கள்
அவளுடைய அவசர ஊர்தியை
நீங்கள் சுட்டுத் தள்ளினீர்கள்.

நீங்கள் அளவுக்கு மீறிச் சென்றுவிட்டீர்கள்
உங்கள் பொய்களும் பிரச்சாரங்களும் தாம்.

ஆடையின்றி
ஒன்றுமறியா இரத்தச் சகதியில்
பரிதாபகரமாகத் தோன்றுகிறாள்

கசாப்புக்காரர்கள்

வேறு சொற்களில்லை சொல்வதற்கு

ஆனால் இன்னொரு நேரம் இருந்தது
அதன் கூலிக் கொலைகாரர்கள் மீது
வரலாற்றின் முரண்நகை கொடூரமானது

அச்சுறுத்திக் கொலை செய்யப்பட்ட
இந்தச் சிறு பெண் பிழைத்திருக்க வலியோடு
ஒலிக்கும் அபாயச் சங்கு.

இருப்பினும் அக்குழந்தையின் ஆன்மா
வளர்ந்துவிட்ட ஒரு கேள்வியை
விடாமல் கேட்கிறது.

இங்கிருப்போரில் யூதர் யார்?
நாஜி யார்?

- டான் கார்ஜெயெஸ்கு, ஜெர்மனி டுபிஞ்சென் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தமிழில்: நிழல்வண்ணன்
நன்றி: countercurrents.org

Pin It