தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் உதகமண்டலத்தில் கடந்த 28.05.2024 நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பின்வரும் வாசகங்களைப் பேசியுள்ளார்.

”தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம், நமது பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக திராவிட இயக்கக் கதைகளால் அப்பாடத்திட்டம் நிரம்பியுள்ளது”. மேலும் வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், வள்ளலாரின் சன்மார்க்க இயக்கம் ஆகிய வரலாறுகளும் தவறவிடப்பட்டுள்ளன என்று பேசியிருக்கிறார்.keezhadi 511அரசியலமைப்பினால் மதிப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு தனது அறியாமை மொத்தத்தையும் பொதுமேடையில் அம்பலப்படுத்தி வருகிறார் ஆளுநர். மேற்கண்ட செய்தி உண்மையா என்பது குறித்துத் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால்கூடச் சொல்லி விடுவார்கள்.

சான்றாக, 11ஆம் வகுப்பு, வரலாறு (தொகுதி 2) பாடநூலில், 17வது பாடத்தின் தலைப்பு ’ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்’. அப்பாடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அதே பாடநூலில் பாடம் 19-இல் 'நவீனத்தை நோக்கி’ என்ற தலைப்பில், வள்ளலார், வைகுண்டர் ஆகியவர்களைப் பற்றிய விரிவான வரலாறு தரப்பட்டுள்ளது. இதே போன்ற வரலாறுகளை நாம் மற்ற வகுப்புகளின் பாடநூல்களிலும் காண முடியும். ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல இவற்றை எல்லாம் மறைக்க நினைக்கிறாரே ஆளுநர்? தமிழர்கள் ஒன்றும் தெரியாத அறிவிலிகள் என்று நினைத்துக் கொண்டாரா, தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது என்று வயிறு எரிகிறார். இந்திய வரலாற்றுடன் ஒப்பிடும்போது, குறைவான அளவே தமிழக வரலாறு, அதுவும் திராவிட இயக்க வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், திராவிட இயக்க வரலாறையும், சாதனைகளையும் இன்னும் கூடுதல் பக்கங்கள் ஒதுக்கி, பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பாக, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய வரலாறு பாடநூல்களில் இடம்பெற வேண்டும். திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும். ஆனால் இதற்கே பொறுக்கவில்லை ஆளுநருக்கு. தமிழர் உரிமை மீட்க, திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்கள் ஆளுநருக்கும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும் கதைகளாகத்தான் தெரியும். அவை கதைகள் அல்ல, தமிழரின் தன்மானத்தை மீட்டெடுக்க, நூறாண்டு காலம் நடந்த உரிமைப் போரின் களங்கள். திராவிட இயக்க வரலாறே தமிழ்நாட்டின் போராட்ட வரலாறுதான்.

கீழடி அகழாய்வுகளைத் தொடர்ந்து, இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். அத்தகைய பணிகள் தொடங்கப்பட வேண்டும். இன்னும் விரிவாக, திராவிட இயக்கத்தைப் பற்றிய வரலாறு மாணவச் செல்வங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அது மட்டுமே ஆளுநரைப் போல நிகழ்காலத்திலேயே வரலாற்றைத் திரிப்பவர்களுக்கு, நாம் புகட்டும் பாடமாக இருக்க முடியும்.

- வெற்றிச்செல்வன்

Pin It