குழந்தைகள் மருத்துவத்தில் முன்னணியில் இருக்கும் கேரளா

கேரளாவில் பிறக்கும் குழந்தைகள் 5 வயதை அடைவதற்குள் இறக்கும் விகிதம் மிகக் குறைவு. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட குறைவானதாகும்! ஆனால், உத்திரபிரதேசத்தில் இவ் விகிதம் ஆப்கானிஸ்தானத்தை விட அதிகமாக உள்ளது! உத்தரப் பிரதேசத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 5 வயதை எட்டுவதற்கு முன் 60 குழந்தைகள் இறக்கின்றன என்பது ஒப்பு நோக்கத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

இன்னும் இரு வாரங்களில் இந்தியா தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், நிலம் சூழ் வட பகுதியை வசியப்படுத்தியுள்ள நரேந்திர மோடியின் மீதே தேர்தல் வல்லுநர்கள் தங்கள் கவனத்தை குவிக்கின்றனர்! நரேந்திர மோடியையும் அவர் கட்சியான பாசக-வையும் தெற்கு மாநிலங்கள் புறம் தள்ளுவதை அவர்கள் கவனத்தில் கொள்ளுவதில்லை. பாசக-வின் ஒட்டுமொத்த வெற்றியை இது பாதிக்காது என்று அவர்கள் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும்.

வட மாநிலங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டுள்ளதால் அவை இயல்பாகவே முதன்மை கவனம் பெறுகின்றன. பிரேசிலை காட்டிலும் அதிக மக்கள் தொகையும், சகாரா ஆப்ரிக்க நாடுகளை விட மிகுதியான வறுமையும் உடைய உத்திரபிரதேசத்தை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களுடைய கையில் ஒன்றிய கூட்டாட்சியின் கடிவாளம் இருக்கும். உத்திர பிரதேசமும் அதன் அண்டை மாநிலங்களும் நரேந்திர மோடிக்கு மூன்றாவது முறையும் வாய்ப்பு வழங்குவதற்கு அணியமாக உள்ளன என்பது கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஆகும். மாற்றுக் கட்சித் தலைவர்களை சிறைப்படுத்தியும் அவர்களின் கட்சிக்கான நிதி ஆதாரங்களை முடக்கியும் தேர்தலில் பெருவெற்றி பெற்றிட முனைவதாக மோடியை எதிர்க்கட்சிகள் கூட்டணி குற்றம் சாட்டுகிறது. எனவே மூன்றாவது முறை மோடி ஆட்சிக்கு வந்தால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆணிவேரான மதச் சார்பின்மை வேரறுக்கப்படும் என்று எதிர் கட்சிகள் கூட்டணி அஞ்சுகிறது. அத்தகு திட்டம் ஏதும் இல்லை என்று தலைமை அமைச்சர் மோடி உதட்டளவில் மறுத்தாலும், "இந்து நாடு" என்னும் வீரிய முழக்கம் தேர்தலில் பெரும் விளைச்சலைத் தரும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

modi 361இதன் விளைவுகள் தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

வடக்கு-தெற்கு பிளவு

 வட இந்தியா தென்னிந்தியா எனப் பிரிக்கும் 675 மைல் நீளமுள்ள விந்திய மலைக்கு தெற்கில் அமைந்துள்ள தக்காணம் ஒரு புவியியல் பிரிவாக மட்டும் இருக்கப் போவதில்லை. வளர்ச்சி மட்டத்திலும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான பிளவு விரிந்து கொண்டே போகின்றது! மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் வடக்கு தெற்கு பிளவு மேலும் விரிந்துள்ளது. வாக்காளர்களுக்கு மறு பயனாக வளர்ச்சி திட்டங்கள் ஏதும் வட மாநிலங்களுக்கு மோடி அரசு வழங்குவதில்லை. பொருளாதார மேம்பாடு,குமுகாய முன்னேற்றம் ஆகிய இரண்டுக்கும் தென் மாநிலங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. ஒன்றிய அரசுக்கும் வட மாநில அரசுகளுக்கும் இவை இரண்டும் குறித்து எவ்வித கவலையும் இல்லை. மாறாக, இவ் வெற்றிடத்தை உணர்ச்சிகளை தூண்டும் மதவெறி பேச்சுகளால் நிரப்புகின்றன. இந்து அல்லாதோரை துன்புறுத்துவது, அதுவும் குறிப்பாக மொத்த மக்கள்தொகையில் வெறும் 14 விழுக்காடு மட்டுமே உடைய இசுலாமியரை. இனியும் ஐந்தாண்டு கால பாசக ஆட்சி என்பது 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், பன்முகத்தன்மை திறந்த சந்தை சனநாயகம் ஆகிய அனைத்தையும் சிதைக்கும்.

தொழில் முதலீட்டுக்கு இசைவான இடம் தெற்கே

நாட்டின் வளர்ந்து வரும் நவீன பொருளாதார சூழலில், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் உலக முதலீட்டாளர்களின் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் இருப்பது தென் மாநிலங்களில் தான். இங்குதான் தொழில் வளர்ச்சிக்கான இணக்கமான சூழல் நிலவுகிறது. பல்லாண்டு காலமாக தென்னாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சமூக சீர்திருத்தங்களின் விளைவாக இங்கு உள்ள முப்பெரும் மதங்களான இந்து, இசுலாம், கிறித்துவம் ஆகிய மதங்களை பின்பற்றுவோர் இடையே நயத்தக்க நல்லிணக்கமும் நாகரிகமான சகோதரத்துவ குடிமைப் பண்பாடும் நிலவுகிறது. எனவே இங்கு வாழ்க்கைத் தரமும் மிக உயர்ந்து உள்ளது. இங்கு ஏழ்மை விழுக்காடு 2 மட்டுமே ஆனால் 12 ஆண்டுகளுக்கு மேலாக மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் ஏழ்மை விழுக்காடோ 12.

 மதவெறி போர் முழக்கம்

நெடுங்காலமாக வளர்ச்சி மறுக்கப்பட்ட காரணத்தால், வட மாநிலத்தவர் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்வதை நிறுத்தி விட்டனர். பெரும்பான்மை மதத்தினர் தம் மத அடையாளத்தை போர் வெறி முழக்கத்தோடு முன்னெடுத்தலெ நாகரிகத்தின் உச்சம் என்ற கருத்துப் போதையில் திளைக்கின்றனர்! 16-ஆம் நூற்றாண்டு தொடங்கி இருந்து வந்த மசூதியை 1996-ம் ஆண்டு மதவெறி கும்பல் இடித்து வீழ்த்தியது! அந்த இடத்தில் கட்டப்பட்ட இராமர் கோயிலுக்கு விழா எடுத்து திறந்து வைத்த மோடியை தங்களின் மீட்பராகவே பெரும்பான்மை மதத்தோர் பார்க்கின்றனர். இசுலாமிய மன்னர்களின் தொடர் வெற்றிகளால் முகலாய பேரரசு அமைந்து, அது உருவாக்கியது தான் புகழ்பெற்ற தாஜ்மஹால்! இவர்களின் வெற்றிகளால் தங்களின் பெருமைமிக்க உணர்வுகள் சிறுமைப்படுத்தப்பட்டன. இழந்த அந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டியவராகவே மோடியை பெரும்பான்மை மதத்தோர் கொண்டாடுகின்றனர்! மேலும் மோடி தங்களுக்கு இலவச உணவு வழங்குவதையும் வங்கி கணக்குகளில் சற்று பணமும் இடுவதையும் இவர்கள் கூடுதல் ஊக்கப் பயனாக கருதுகின்றனர். வடக்கில் வாழும் குடிமகன், தான் ஒரு பயனாளி ஆக இருப்பதில் நிறைவடைகிறான்.

அரசியலும் வறுமையும்

 தெற்கு மாநிலங்கள் ஐந்துமே வளர்ச்சியை விரும்புகின்றன. ஆனால் வறுமை கோலோச்சும் வட மாநிலங்களோ எண்ணிக்கை பலத்தால் நாடாளுமன்றத்தில் அளவுக்கு மீறி ஆதிக்கம் செலுத்துகின்றன. படையெடுப்பை காட்டிலும், கடல் வழி வணிகத்தின் வாயிலாக இசுலாமிய பரவல் நிகழ்ந்த தென் நாட்டை கோயில் குறித்த சர்ச்சை பேச்சுகளால் ஈர்க்க இயலாது. ஏனெனில் தென்னாட்டில் பல பெரும் கோயில்கள் உள்ளன. ஒடுக்கப்பட்டோருக்கான கோயில் நுழைவும் வழிபாட்டு உரிமையும் இங்கு கிடைக்கப்பெற்று நூறு ஆண்டுகள் ஆகிறது! 'பெரியார்' என்று அழைக்கப்படுகிற ஈவெ.ராமசாமி அவர்கள் தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கம் பின்னர் அரசியல் இயக்கமாக மாறி சனாதன சாதி அமைப்புக்கு அறைகூவல் விடுத்து - பல உரிமைப் போர்களை முன்னெடுத்து தமிழ்நாட்டு குமுகாய அமைப்பை சனநாயகப் படுத்தியது.

திராவிட மாதிரி

1947 இந்தியா விடுதலை பெற்ற பிறகு, வேளாண் நிலங்களை எல்லோருக்கும் பகிர்ந்து அளிப்பது என்பது ஒரே நாளில் நடத்தி முடிக்கின்ற மந்திரச் செயலன்று என்பதை நன்கு உணர்ந்து, தொலை நோக்கோடு திராவிட இயக்கம், கல்வி, மக்கள் நல்வாழ்வு, மற்றும் வேளாண் சாராத தொழில்கள் முதலியவற்றில் கவனம் செலுத்தியது. இதுவே சமூக நீதியை பெற சரியான வழி என்ற உறுதியோடு செயல்பட்டது. இதுவே "திராவிட மாதிரி" என்று அழைக்கப்படுகிறது. "திரமிள" என்பதன் திரிபே "திராவிடம்" என்ற சொல் ஆகும். தமிழ் மொழி பெருமையே திராவிடக் கொள்கைக்கும் திராவிட அரசியல்வாதிகளுக்கும் ஊற்றுக் கண்ணாக திகழ்கிறது. இதன் பொருளாதார மாதிரி என்பது பொது அறிவும் பட்டறிவும் கலந்து விளைந்ததே! வட இந்தியாவில் இத் தகு நிலையைக் காண இயலாது. அங்கு சமூக சீர்திருத்த வரலாறு கிடையாது. மேலும், அங்குள்ள கீழ் தட்டு மக்களின் தலைவர்களிடம், அம் மக்களை நகர முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் 18-23 வயதுடையோரில் 47% உயர்கல்வி பெறுகின்றனர். இது பீகாரில் 17% மட்டுமே!

 மத்திய பிரதேச அரசு, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பங்கு படுக்கைகளை பணம் செலுத்தும் நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. தனியார் மருத்துவம் எட்டாக்கனியாக உள்ள பழங்குடியினருக்கும் நகர் புற ஏழைகளுக்கும் இது கிட்டத்தட்ட ஒரு மரண தண்டனையே! தமிழ்நாட்டில் 1990-களில் மக்கள் நல் வாழ்வுத் துறை செயலராக இருந்த ஆர்.பூர்ணலிங்கம், தரமான மருந்துகள் கொள்முதல் செய்வதை ஒருமுகப்படுத்தி செலவுகளை பெருமளவு குறைத்தார். " வட மாநிலமான *உபி* தன் மொத்த வருவாயின் பெரும் பகுதியை மருத்துவத் துறைக்கு ஒதுக்கினாலும், மக்கள் தங்கள் கைப்பணத்தை செலவு செய்தலை பொருத்த வரையில் உபி-காரர்கள் செலவு செய்வதை விட 24% குறைவாகவே தமிழ்நாட்டவர்க்கு செலவாகிறது; மனித வளத்துக்கு அடிப்படையான கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகிய இரு துறைகளின் பால் மிகுந்த கவனம் செலுத்துகின்ற அறிவார்ந்த அரசியல் தலைவர்கள் வட மாநிலங்களில் ஆட்சிக்கு வர வேண்டும்" என்கிறார் பூர்ணலிங்கம்.

கல்வி மக்கள் நல்வாழ்வு

 கல்வியும் மக்கள் நல்வாழ்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இப் பிணைப்பை கேரளாவில் பெருமளவு காணலாம். வெப்ப மண்டல குழந்தைகள் மருத்துவத்தில்' தனித்திறன் வாய்ந்த மரு.அந்தோனி கொல்லனூரை நான் சந்தித்தேன். இவர் ஐநா யூனிசெஃப்பில் முன்பு பணிபுரிந்தவர். நாட்டின் பல பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களான போலியோவை ஒழித்தல், குழந்தை சாவை குறைத்தல், பாதுகாப்பான தாய்மை ஆகியவற்றில் முதன்மை பணியாற்றியவர். "வட மாநிலங்களில் பெண்கள் பொது மேடைகளில் பேச முன் வருவதில்லை. ஆனால் கேரளாவில் தமது மதமோ, பொருளாதார நிலையோ அவை எப்படி இருந்தாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல், தகுந்த தரவுகளுடன் அரசு அலுவலர்களை கேள்விகளால் துளைத்து குறைபாடுகளுக்கு அவர்களை பொறுப்பு ஏற்க வைப்பர்; வாக்காளர்களுக்கு கல்வி அறிவு இல்லை எனில், அரசு அலுவலர்கள் பொய்களைச் சொல்லி தம் குறைபாடுகளை பூசி மெழுகுவர்" என்கிறார் அந்தோனி கொல்லனூர். மருத்துவர் கொல்லனூர் உபி-யில் பணிபுரிந்த பொழுது, போலியோ பாதித்தோர் எண்ணிக்கையில் பொய்களையே அரசு அலுவலர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலும், அண்மையில் கோவிட் சாவு எண்ணிக்கையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையிலும் இதுதான் நடந்தது என்கிறார் கொல்லனூர்.

 கேரளாவில் மக்கள் நல்வாழ்வு

கொச்சியில் தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் சமுதாய நல்வாழ்வு மையத்தை பார்வையிடுமாறு என்னை அழைத்தார் மருத்துவர் கொல்லனூர். கிபி 1500-ல் ஐரோப்பியர்கள் முதல் முதலாக வருகை புரிந்த இத் துறைமுக நகரம் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் நல் வாழ்வு மையத்தில் மருத்துவர், செவிலியர், மருந்துகள், படுக்கைகள், நவீன முறை நோய் கண்டறிதல், நோய் தடுப்பு முகாம், மற்றும் பல் மருத்துவம் ஆகிய அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இது அங்கு வாழும் மீனவர்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்கிறது. இப்படிப்பட்ட மருத்துவ சேவைகள் பெற வட மாநில மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் கட்டாய நிலையே இருக்கிறது. ஆனால் கேரளாவில் அனைத்து மருத்துவ வசதிகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்தகு சிறப்பான "தெற்கு மாதிரி" மருத்துவத்தை* தில்லியில் செயல்படுத்த முனைந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தென் மாநில மக்கள் மனநிலை

 தென் மாநில மக்களின் மனநிலை மோடிக்கு எதிராகவே உள்ளது. இதை தெளிவாக விளக்குகிறார் பி. தியாகராஜன். இவர் நியூயார்க்கிலும் சிங்கப்பூரிலும் வங்கி மற்றும் நிதி முதலீட்டு அறிவுரையாளராக முன்பு பணியாற்றியவர். தற்போது தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார். ஒன்றிய அரசின் ஒரு சார்பு நிதி பகிர்வுக்கு எதிராக வலுவாக குரல் கொடுப்பவர் இவர். தென் மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த வரி வருவாயை விட உ.பி. மாநிலத்துக்கு அதிகம் வழங்கப்படுகிறது இவர் உ.பி- க்கு அதிகம் வழங்குவதை குறை கூறவில்லை. ஆனால் அதிகம் வழங்கினாலும் அதற்கு தகுந்த அளவுக்கு உ.பி. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்று கவலைப்படுகிறார். மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு நெடுங்காலமாக தொழிலாளர்களை வழங்கிக் கொண்டிருந்த கேரளத்தில் கோவிட்டுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் மேற்கு நாடுகளுக்கு செல்லும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை

வெகுவாக கூடியுள்ளது. 100 விழுக்காடு படிப்பறிவு, பெண்களின் பொருளாதார ஆற்றல், குடும்பக் கட்டுப்பாடு முதலியவற்றால் கேரள தொழிலாளர் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது கேரள அரசு எதிர்கொள்ளும் மிகப் பெரும் அறைகூவல்! எனவே இதை ஈடு செய்ய வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை கேரள அரசு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக முகமது தில்ஷாத்தின் உண்மை கதையை சொல்லலாம்: கேரளாவில் பணிபுரியும் பீகாரை சார்ந்த படிப்பு அறிவற்ற ஒரு இசுலாமிய தொழிலாளியின் மகன்தான் தில்ஷாத். கேரள அரசு நடத்தும் உயர் பள்ளி கல்வித் தேர்வில் 2019-ல் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் மலையாள மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகே மேற்படி தேர்வை எழுதி உள்ளார். ஆனால் வட மாநிலங்களில் தில்ஷாத்தை போன்ற பலர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை அவர்களது பெற்றோர் வாழ்க்கையில் இருந்து எந்த வகையிலும் வேறுபடவில்லை!

 தமிழ்நாடு மற்றும் கேரளா வாக்காளர்கள் பாசக-வை தோல்வியடைய செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மற்ற தென் மாநிலங்களில் பாசக-வின் வெற்றி மட்டுப் படுத்தப்படும் என்று தேர்தல் கணிப்பர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தெற்கை பொருட்படுத்த தேவையில்லை என்கிறார்கள். ஏனெனில், பீகார் 40 உ பி 80 என நாடாளு மன்றங்களின் கூட்டு எண்ணிக்கை தமிழ்நாடு மற்றும் கேரள நாடாளு மன்றங்களின் கூட்டு எண்ணிக்கையான 59-ஐ விட இருமடங்கு அதிகமாகும். எனவே இந்த ஆண்டும் உபி, பீகாருக்கு நாடாளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவம் இருக்கும். மேலும் 545 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய நாடாளுமன்ற எண்ணிக்கை , புதிய மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் உயர்த்தப்படும். எனவே 2029-ல் நாடாளுமன்றத்தில் தெற்கின் குரல் மேலும் குறையும்!

 ஏற்கனவே ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில அரசுகள் அதிகாரங்களில் மூக்கை நுழைத்து மாநில அரசுகளை அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் செயல்படும் பொதுமக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு "ஜனகீய ஆரோக்ய கேந்த்ராஸ்" என்று பெயர். இதை "ஆயுஷ்மன் ஆரோக்ய மந்திர்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. ஆனால் கேரள மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் "இப் பெயர் எங்கள் மொழிக்கும் பண்பாட்டுக்கும் இசைவானது அல்ல" என்று கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மருத்துவ நிதியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. வரி வருவாயில் மாநிலத்திற்கு உரிய பங்கை ஒன்றிய அரசு வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து கர்நாடக முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மோடி எதிர்ப்பின் கோட்டையாக கருதப்படும் தமிழ்நாட்டில் தான் ஆப்பிள் நிறுவனத்திற்காக தயாரிக்கப்படும் ஐ-போன்15s உற்பத்தி நிறுவனம் உள்ளது. நாட்டில் ஏற்றுமதி ஆகும் மொத்த மின்னணு பொருள்களில் 30 விழுக்காடு இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. "தொழில் நடத்துவதற்கான உகந்த - சுதந்திரம் மற்றும் இணக்கமான சூழல் குஜராத்தை .விட இங்கு தான் இருக்கிறது" என்று உலக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

 வட மாநிலங்கள் சாதி மதங்களை உயர்த்திப் பிடிக்கும் சனாதன சமூக அமைப்பில் சிக்குண்டு கிடக்கின்றன. இந்த அமைப்பு பெண்களையும் சிறுபான்மையரையும் அடித்தட்டு மக்களையும் அடக்கி ஒடுக்குகிறது. அரசியல் தலைவர்கள் "லவ் ஜிகாத்" என்ற பெயரில் இந்து பெண்களை காதலிக்கும் இசுலாமிய இளைஞர்களை தண்டிப்பது, மதவெறி கும்பல்களை வைத்து கிருத்துவ தேவாலயங்களை தாக்குவதுமாக இருக்கும் சூழலில், இங்கு முதலீடு செய்ய யார் தான் முன் வருவர்? மக்கள் தொகையில் 80% உள்ள இந்துக்களுக்கு முறையே 14%, 2% உள்ள இசுலாமியர் மற்றும் கிறித்துவர்கள் இடமிருந்து பாதுகாப்பு தேவையில்லை! மோசமான கல்வி, தரமற்ற மருத்துவம், பெருகும் வேலையின்மை, மற்றும் கடும் வறுமை ஆகியவற்றில் மூழ்கடிக்கப்பட்டுள்ள இவர்களை மீட்பதே இன்றைய காலக்கட்டத்தில் முதல் தேவையாகும்.

('பூளும்பெர்க்' இணையத்தில் வந்த கட்டுரை)

- ஆன்டி முகர்ஜி.

தமிழில்: வழக்குரைஞர் து.சேகர் அண்ணாத்துரை, மாநில இணைச்செயலர், தமிழ்நாடு & புதுச்சேரி பியூசிஎல்.

Pin It