பாஜகவின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்ட வியூக வகுப்பாளர்களின் தவறான வழிகாட்டலில் தப்புத் தப்பாகச் செயல்படுகிறார் அதிமுகவின் கடைசிப் பொதுச் செயலாளர் திருவாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

eps cartoon 420தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் கோலோச்சி வந்த ஒரு மிகப்பெரிய கட்சியின் கடைசிப் பக்கத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, மக்களை விட்டு விலகி.

1967 க்குப் பிறகு சாதாரண குப்பனையும், சுப்பனையும் படிக்க வைத்து அதிகாரத்தில் அமர்த்தி, அவர்களின் வாரிசுகளை இன்று அமெரிக்க - அய்ரோப்பிய நாடுகளின் ஒயிட்காலர் ஜாப் எனப்படும் உச்ச பதவிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது திமுகழக ஆட்சி அதிகாரம் என்பது எடப்பாடிக்குத் தெரியவில்லை.

நூறாண்டுகளுக்கும் மேலாக சுயமரியாதை உணர்வோடு, தேநீர்க் கடையிலும், சவரக் கடைகளிலும், தெரு முனையிலும் அரசியல் பேசிப் பழகி வளர்ந்திருக்கிற தமிழ்நாட்டு மக்கள், பார்ப்பனர்களால் கட்டப்பட்டிருக்கிற ஜாதி , கடவுள், மதம், பண்பாடு என்கிற எல்லாவகை ஆயுதங்களையும் வெறும் பொழுதுபோக்கு விசயங்களாகக் கருதுகிறவர்களே தவிர அரசியலில் கலக்க மாட்டார்கள் என்கிற எளிய உண்மையை, மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து அதிகாரம் செய்கிற பார்ப்பனர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாவம் , எம்ஜியார் ஜெயலலிதா என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே குப்பை கொட்டி வருகிற எடப்பாடி பழனிசாமி வகையறாக்களுக்கு இந்த எளிய அரசியல் புரியவில்லை.

தமிழ்நாட்டின் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் முகவர்களை நியமிக்கும் தகுதி, நகரம் ஒன்றியம் என குக்கிராமங்கள் வரைக்கும் கிளைக் கழகங்கள், 20% நிரந்தர வாக்கு வங்கி என்கிற மாபெரும் மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரு கட்சியை கேவலம் ஒரு சதவீதம் செல்வாக்கு கூட இல்லாத ஒரு கட்சிக்காரன் எங்கயோ டெல்லியில் இருந்து வந்து, இல்லையில்லை இவர்களை டெல்லிக்கு இழுத்துக் கொண்டுபோய் நிறுத்தி, "நாம ஜோடி போடலாமா?" னு கேட்கிறான், அதற்கும் கைகட்டி வாய் பொத்தி நின்று ஒருவர் சம்மதிக்கிறார் என்றால் இது அரசியலா? இதன் பெயர் கூட்டணியா? என்பதே தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய கேள்வி.

எப்போது நட்டநடு ராத்திரியில் நாலு கார் மாறிப்போய் சந்தையில் மாட்டுத் தரகர்கள் பேரம் பேசுவதுபோல கமுக்கமாக கட்சியை குஜராத் மார்வாடிகளிடம் அடமானம் வைத்துவிட்டு வந்தாரோ அப்போதே அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் வெறுத்துப் போனார்கள். தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவை முற்றாக நிராகரித்து விட்டனர்.

இப்படிப்பட்டத் தமிழ்நாட்டில், மக்களால் புறந்தள்ளப் பட்டவர்களும், நிராகரிக்கப் பட்டவர்களுமான அதிமுக-பாஜக கூட்டணியில், நாக்பூர் திட்டப்படி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றிரண்டு விளையாட்டு 'பொம்மைகளை' விபரம் புரியாமல் கூட்டணிக்கு அழைத்து மேலும் அசிங்கப்பட்டுப் போன எடப்பாடி பழனிசாமி, விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். திமுக கூட்டணிக் கட்சிகளையும், தலைவர்களையும் திட்டித் தீர்த்த பழனிசாமி, இப்போது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்று, திராவிடமாடல் அரசின் முதலமைச்சர் அவர்களையும் தரங்குறைந்த விமர்சனங்களைச் செய்து வருகிறார். இதுவும் புதிதல்ல இது அவருடைய தானைத் தலைவியின் வழிதான்.

எடப்பாடி பழனிசாமி அமீத்ஷா வீட்டிற்கு போய்வந்த நாள் முதலாக பாஜக கும்பல் கூட்டணி ஆட்சி என்றே சொல்கிறது. அதை வலுவாக மறுக்கக் கூட திராணியற்று திணறிக் கொண்டிருக்கிறார் திருவாளர் பழனிசாமி அவர்கள். இதை அதிமுகவின் தலைவர்கள் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் உட்பட யாருமே ரசிக்கவில்லை. மாறாக, எல்லோரும் சிவசேனை, அகாலி தளம், ஜனதா தளம் கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து கலங்கிப் போயிருக்கிறார்கள். தன் சொந்தக் கருத்தை, தன் சொந்த சுயமரியாதையை, தனது சொந்தக் கட்சியைக் காப்பாற்றக் கூட திராணியற்று நிற்கிற பழனிசாமியை நம்புவதற்கு அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை.

திமுகவிற்கு எதிராக, சமூகநீதிக்கு எதிராக பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக தமிழ்நாடு சமூக அரசியல் களத்தின் நிலையறிந்து எம்ஜியார் ஜெயலலிதா ஆகியோரால் ஓரளவு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தகுதி என்கிற ஒன்றே அறியாத சிறு கூட்டத்தால், சுயமரியாதை என்பதையே உணர்ந்திடாத அடிமைகளால் அதிமுக என்கிற கட்சியின் கடைசி அத்தியாயம் எழுதப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இனப்பகைவர்களை நேருக்கு நேர் சந்திக்கிற போரை திராவிட மாடல் அரசு, திமுகழக கூட்டணி எதிர்கொள்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவில் மீண்டும் திராவிட இயக்கக் கொடியை நாட்டிட தமிழர்கள் ஓரணியில் திரண்டு போரிட வேண்டும்! ஆம் மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!!

- காசு. நாகராசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.