நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன் அவர்கள், அதிமுகவையும், பிஜேபியையும் தன்னுடைய நகைச்சுவைப் பேச்சுக்களால் கிழித்துத் தொங்க விட்டார். தனக்கு திருமணமானதை மறைத்து, மனைவி பெயரைக் கூட வெளியே சொல்லாமல், இந்திய மக்களை ஏமாற்றிய மோடியை ‘பிராடு பையன்’ என்று குறிப்பிட்ட அவர், அமித்ஷாதான் மோடிக்கு மூளையாக செயல்படுவதாகவும், “அமித்ஷா சோலி முடிஞ்சதுன்னா அவன் சோலியும் முடிஞ்சிடும், நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டீங்களே, நீங்க ஏதாவது பண்ணுவீங்கனு நானும் நினைச்சுகிட்டு இருக்கேன், ஒரு சாயிபும் பண்ணித் தொலைய மாட்டீங்கரான்” என்று கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மேலும் ஐயப்பனுக்குத் தளபதியே வாஃபர் என்ற ஒரு முஸ்லிம்தான் என்பதையும், தமிழகத்தில் எப்படி முஸ்லிம்களும், இந்துக்களும் தங்களுக்குள் உறவினர்களாக வாழ்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டி, அதை சீர்குலைக்க முயலும் இந்துமத வெறியர்களையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
ஆன்மீகப் பேச்சாளராக அறியப்பட்ட நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் காவி வானரங்களின் தாதாவான எச்.ராஜா உள்ளிட்ட விச நாக்குப் பேர்வழிகளை கடும் எரிச்சல் அடையச் செய்திருக்கின்றது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சோலிய முடிக்க வேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணணைக் கைது செய்ய வேண்டும் என்று ‘அகிம்சா மூர்த்திகள்’ கூக்குரல் இட ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழக பா.ஜ.கவின் சார்பில் இது தொடர்பாக தமிழக காவல்துறைத் தலைவரிடம் திங்கட்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டது. அதில் "தேசத்திற்கும், பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும், வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும்" அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் நெல்லை கண்ணனைக் கைது செய்ய வலியுறுத்தி, சென்னையில் 'இலட்சக்கணக்கான' பாஜகவினர் கலந்து கொண்ட ‘மாபெரும்’ போராட்டமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 'இலட்சக்கணக்கான' பாஜகவினரை கடும் போராட்டத்துக்கு மத்தியில் கைது செய்த தமிழக காவல்துறை அவர்களை ஒரே ‘ஆட்டோவில்’ ஏற்றியதாகத் தெரிகின்றது.
எப்போதுமே பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனர்களுக்கும் சொம்பு தூக்குவதை தன்னுடைய பிறவிக் கடமையாக கருதும் மாநில அரசும், அதன் அடியாள் படையான தமிழக காவல்துறையும் இப்படி 'இலட்சக்கணக்கான' பாஜகவினர் நடத்திய போராட்டத்துக்குப் பயந்து நெல்லை கண்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது. அவர் மீது குற்றவியல் சட்டம் 504, 505(1) (b), 505(2) ,153 A, 506 (1) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றது. வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்திரவிடப்பட்டு இருக்கின்றது.
பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனர்களுக்கும் எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் அவர்களை மநு நீதிப்படி தண்டிப்பதுதான் காவல் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு உறுப்புகளின் பணி. அதைத் தான் தற்போது தமிழக காவல் துறையும் செய்துள்ளது.
‘வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் உயர் அதிகாரிகளிடம் படுத்துத்தான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்’ என்று எஸ்.வி. சேகர் என்ற கழிசடைப் பார்ப்பான் இங்கே இயல்பாக சொல்ல முடியும். அப்படி சொன்னதற்காக அவருக்கு காவல் துறை பாதுகாப்பும், நீதிமன்றப் பாதுகாப்பும் கிடைக்கும். எச்.ராஜா வைரமுத்துவின் தலையை வெட்ட வேண்டும் என்று சொன்னாலும், ‘ஹைகோர்ட்டாவது, மயிராவது’ என்று சொன்னாலும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பும், நீதிமன்றப் பாதுகாப்பும் கிடைக்கும்.
அதே போல நையினர் நாகேந்திரன் "ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியதை மன்னிக்கவே முடியாது. இனி வரும் காலங்களில் இந்துக்களைப் பழித்து பேசினால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும். ஆண்டாளைப் பற்றி தவறாகப் பேசிய வைரமுத்துவின் நாக்கை வெட்டினால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும்” என்று வெளிப்படையாக பொது மேடையில் அறிவித்தாலும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பும், நீதிமன்றப் பாதுகாப்பும் கிடைக்கும்.
சோடாபுட்டி ஜீயர் “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் ஒரு பொறுக்கியைப் போல பேசினாலும் அவருக்கும் காவல்துறை பாதுகாப்பும், நீதிமன்றப் பாதுகாப்பும் கிடைக்கும். ஏன் காயத்திரி ரகுராம் என்ற பாப்பாத்தி ‘திருமாவளவன் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பார்ப்பனக் கொழுப்பில் பேசினாலும் அவருக்கும் காவல்துறை பாதுகாப்பும், நீதிமன்றப் பாதுகாப்பும் கிடைக்கும்.
ஆனால் நெல்லை கண்ணன் நகைச்சுவைக்காக, சும்மானாட்சிக்கும் ‘சோலியை’ முடிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும் வீரம் பொத்துக் கொண்டு வந்து விடும். பார்ப்பானுக்கும், பார்ப்பன அடிமைகளுக்கும் ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி. இதுதான் இந்த வெட்கம் கெட்ட ஆட்சியின் யோக்கியதை. ஊருக்கு பத்துப் பேர் கூட இல்லாத ஒரு கட்சியைப் பார்த்து அதிமுக அரசு பயப்படுகின்றது என்றால், அடிப்படையில் அவர்களிடம் நேர்மையில்லை என்றுதான் அர்த்தம். ஊழல் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பார்ப்பனியத்தை நக்கிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த அடிமைகளின் ஆட்சி இருக்கின்றது என்பதற்கு ஓர் உதாரணம்தான் நெல்லை கண்ணன் அவர்களின் கைது.
மோடியின் படத்துக்கு செருப்பு மாலை போட்டு கலவரத்தைத் தூண்டப் பார்த்தாலும், பிரியாணி அண்டாவையும், செல்போன்களையும் கொள்ளை அடித்தாலும், நிர்மலா தேவி போன்ற நபர்கள் மூலம் விபச்சாரத் தொழில் நடத்தினாலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் மரியாதையில் அதிமுக எந்தக் குறையையும் வைப்பதில்லை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற விச நாக்குப் பார்ப்பான்கள் தமிழ் சமூகத்தின் மீது கக்கும் விசத்தை தமிழ் மக்கள் தன்மானமும், சுயமரியாதையும் அற்று சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என இந்த அடிமைகள் எதிர்பார்க்கின்றார்கள்.
‘வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்’ என்று ஒரு பழமொழி உள்ளது. அதே போல இந்த விச நாக்குப் பேர்வழிகளை இந்த அரசு கண்டு கொள்ளாமல் பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால், அரசு அடக்காததை, அமைப்புகள் சேர்ந்து அடக்கும் நிலை ஏற்படும் என்பது உறுதி. நெல்லை கண்ணன் சொன்னதில் தவறு இருக்கின்றதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள நெல்லை கண்ணனிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை. ஜிஎஸ்டியாலும், பணமதிப்பு நீக்கத்தாலும் வேலையிழந்து நடுத்தெருவுக்கு வந்த கோடிக்கணக்கான மக்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள், குஜராத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களின் குடும்பங்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள், அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று. அவர்கள் சொல்லாத எதையும் நெல்லை கண்ணன் நிச்சயம் பேசியிருக்க மாட்டார்.
- செ.கார்கி