தேர்தல் அரசியலில் பங்கேற்கும் கட்சிகளின் கூட்டணி, கொள்கைக் கூட்டணியாக இருப்பது அரிது. ஒரு கட்சியையோ அல்லது அந்தக் கட்சி சார்ந்த சித்தாந்தத்தையோ அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக அமைக்கப்படும் கூட்டணி ஒரு வகை. அதை விட எந்தக் கட்சி அல்லது எந்தச் சித்தாந்தம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக அமைக்கப்படும் கூட்டணியே பொதுவாகத் தேர்தல் கூட்டணியாக இருக்கிறது.
அண்மையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக. தமிழ்நாட்டில் புதியதொரு கூட்டணியை உருவாக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. இவர்கள் யாரை ஆட்சியில் அமர்த்துவதற்காக அல்லது யார் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காகப் புதியதொரு கூட்டணியை உருவாக்கப் பார்க்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.அதிமுக என்ன காரணத்திற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது?
பாஜக ஆட்சியில் நடைபெறும் அவலங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலா?
பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் மதச்சார்பற்ற தன்மை அகற்றப்பட்டு இந்துத்துவ மதவெறி தலைவிரித்தாடுவதைக் கண்டித்தா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலைகள் செய்யப்பட்டதை எதிர்த்தா?
சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், காய்கறி ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தா?
பாஜகவின் தமிழ் விரோத, தமிழர் விரோத அரசியல் செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமலா?
இப்படிப்பட்டவர்களிடம் அடுத்த முறையும் ஆட்சி அதிகாரம் வந்து சேர்ந்தால் நாடு என்ன கேடுகளைச் சந்திக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தா?
இவற்றுள் எந்த ஒரு காரணத்திற்காகவும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தரப்பில் தெரிவித்ததாகத் தெரியவில்லை. தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் தரக்குறைவாக பாஜகவினர் பேசுவது இன்றுதான் அதிமுகவிற்குத் தெரிந்ததா அல்லது தற்போது அதிமுகவின் தலைவர்களாக இருப்பவர்களைப் பாஜகவினர் இழிவு செய்வது இதுதான் முதல் முறையா?
அவர்களுக்கு அண்ணாமலை என்கின்ற தனிநபர் மட்டுமே பிரச்சனையாக இருக்கிறார். நமக்குத் தனிநபர்கள் பிரச்சனையல்ல. கொள்கைதான் பிரச்சனை. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக் காரணங்களுக்காகவும் இன்னும் பல்வேறு மக்கள் விரோத செயல்பாடுகளுக்காகவும் நாம் பாஜகவை எதிர்க்கிறோம்.
அதிமுக நடத்துவது ஒரு நாடகம் என்பது பார்ப்பவர்கள் அனைவருக்கும் புரிகின்ற ஒன்று. ஆனால் இந்த நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதைத் தமிழர்கள் அவர்களுக்கு உணர்த்துவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது பெரும்பான்மையானவர்களால் அரசியலில் ஓரங்கட்டப்பட்டுவிட்டது பாஜக. இது திராவிட இயக்கக் கொள்கையின் வெற்றி. ஆனால் அதேபோல பாஜக இந்திய அளவில் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றால் INDIA கூட்டணி இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
அதிமுக உருவாக்க நினைக்கும் கூட்டணியால் தமிழ்நாட்டில் இப்போது இருக்கிற INDIA கூட்டணியில் எந்த வகையிலும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அந்த அளவிற்குக் கொள்கைக் கூட்டணியாக இக்கூட்டணி இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இக்கூட்டணி இப்போது போல் எப்போதும் பாஜக அகற்றப்படும் வரையில் தொடர வேண்டும். தொகுதிப் பங்கீட்டிற்காகவோ அல்லது வேறு சில ஆதாயங்களுக்காகவோ இக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது.
அதிமுக பாஜகவிலிருந்து பிரிந்து வந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் சேரும் வாய்ப்புகளே அதிகம். அதிமுகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. எனவே அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததே தவிர அவர்கள் உறவு முறியவில்லை. இந்த உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து INDIA கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
- மா.உதயகுமார்