இந்தியாவின் 75 ஆண்டுகாலக் குடியரசு வரலாற்றில், தமிழ்நாடு எப்போதும் ஒரு தனித்துவமான திசைகாட்டியாக இருந்து வருகிறது. திராவிட இயக்கம் 'இந்தியா' என்பதை ஒரு 'ஒன்றியமாக' (Union of States) மட்டுமே பார்க்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவே "India, that is Bharat, shall be a Union of States" என்றுதான் தொடங்குகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள " வெல்வோம் ஒன்றாக" என்ற செய்தி, வெறும் அரசியல் முழக்கமல்ல; அது நீதிக்கட்சி தொடங்கி இன்று வரை வளர்ந்து நிற்கும் திராவிட இயக்கத்தின் தத்துவச் சுருக்கம். அது வெறும் வாழ்த்து மடல் மட்டுமல்ல; அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கான அறைகூவல்.
“Let’s celebrate a unified India. Not a uniform India." என்று அவர் சொல்லியிருப்பது இன்றைய இந்திய அரசியல் சூழலில் மிக முக்கியமான தத்துவார்த்த நிலைப்பாட்டைப் பதிவு செய்கிறது.
திராவிட இயக்கம் எப்போதும் "ஒற்றைத்தன்மைக்கு" (Uniformity) எதிரானது. அதே நேரத்தில் "ஒற்றுமைக்கு" (Unity) ஆதரவானது.
அதிகாரம் என்பது ஒரே இடத்தில் குவியக்கூடாது. டெல்லியில் குவியும் அதிகாரம் ஜனநாயகத்தை நசுக்கும். முதலமைச்சரின் செய்தியில் உள்ள "Unified India" என்பது கூட்டாச்சி ( Federal Government) முறையின் தேவையை வலியுறுத்துகிறது. இது முத்தமிழறிஞர் கலைஞரின் "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற முழக்கத்தின் புதிய பரிமாணம்.
இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் தொகுப்பு. இதைச் சிதைத்துவிட்டு 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்' என மாற்றுவது இந்திய அமைப்பிற்கே எதிரானது என்பது தான் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
"யாரையும் பின்னுக்குத் தள்ளிவிடாமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி" (Leave no one behind) என்பதே திராவிட மாடலின் இலக்கு. இது தந்தை பெரியார் முன்வைத்த சமூக நீதியின் நவீன வடிவம்.திராவிட மாடல் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அது சமூகப் படிநிலைகளை உடைக்கும் வளர்ச்சி,
விளிம்புநிலை மக்களும் அதிகாரத்தில் பங்கு பெறுவதே உண்மையான ஜனநாயகம் என்பதை முதல்வரின் செய்தி முன்னிறுத்துகிறது. சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒரு மனிதனும், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவருக்கு இணையான மரியாதையையும் வாய்ப்பையும் பெறுவதே "Dignity" (கண்ணியம்) என்று முதலமைச்சர் குறிப்பிடுகிறார்.
“Languages coexist with pride" என்ற முதலமைச்சரின் வரிகள், தமிழ்நாட்டின் தியாகங்கள் நிறைந்த மொழிப்போர் வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் இந்தி திணிப்புக்கு எதிரான நீண்ட கால போராட்ட வரலாற்றைக் கொண்ட தமிழ்நாட்டின் உரிமைக்குரல் இது. ஒரு மொழி மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், அனைத்து மொழிகளும் சமமான அந்தஸ்தைப் பெற வேண்டும். தாய்மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் அறிவுசார் சொத்து.இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது வெறுப்பினால் அல்ல; மாறாக, தமிழ் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளுமே சமமான மரியாதையைப் பெற வேண்டும் என்ற தார்மீகக் கோபத்தினால்.
"Faith is a personal truth" (நம்பிக்கை என்பது தனிப்பட்ட உண்மை) என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை வலியுறுத்துகிறது. மதம் என்பது மனிதனுக்கும் அவர் சார்ந்த நம்பிக்கைக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். ஆனால், அரசு என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.இதை பொதுவெளியில் திணிப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது என்பது திராவிடக் கொள்கை. மொழி, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களின் பன்முகத்தன்மை (Diversity) பாதுகாக்கப்படும்போதுதான் இந்தியா "plural and proud" (பன்மைத்துவம் மிக்க பெருமிதம்) கொண்ட நாடாக இருக்கும்.
பெரியாரின் சமூக சீர்திருத்தம்
அண்ணாவின் அரசியல் சீர்திருத்தம் மற்றும் தலைவர் கலைஞரின் நிர்வாகச் சீர்திருத்தம் இவை மூன்றும் இணையும் புள்ளியில் தான் நவீன தமிழ்நாடு இயங்குகிறது என்பதே முதல்வரின் வாழ்த்து மடல் சொல்லும் செய்தி.
தமிழ்நாடு இன்று காட்டும் இந்த ஜனநாயக வழிமுறை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பாடமாகும். பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மற்றும் மொழிப்பற்று ஆகியவற்றை இணைத்து ஒரு மாநிலம் எப்படி வளர முடியும் என்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
வெல்வோம், ஒன்றாக! என்பது வெறும் தமிழ்நாட்டிற்கான முழக்கமல்ல; இது ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கான ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் குரல்.
- நெல்லை பாபு