இந்திய அரசை ஆண்ட ஆளுகிற கட்சிகளின் மாநில ஆளுமைகள் மாநில தன்னாட்சி குறித்து உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்.
குறிப்பாக தற்பொழுது ஒன்றிய அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஆளுமைகள் மாநில தன்னாட்சி குறித்து குரல் எழுப்புவது அவசியம்.
இங்கு மாநில அரசின் அதிகாரத்தை பறித்துதான் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு நடைபெறுகிறது.
மாநில மக்களின் நலன்தான் ஒட்டுமொத்த நாட்டின் நலனாக இருக்கும் பொழுது, மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் தானே?
இது வெளிப்படையாக தெரியும் பொழுது ஒன்றிய அரசை ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்பொழுது ஆளுகிற பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளின் தமிழ்நாட்டு ஆளுமைகள் மாநில தன்னாட்சி குறித்து பேச தயங்குவது ஏன்?
தற்பொழுது ஆளும் ஒன்றிய பாஜக அரசிடம் அதிகாரம் குவியும் பொழுதெல்லாம் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது! அப்பொழுதெல்லாம் எந்த பதட்டமும் இல்லாமல் பதிலளிக்கிறார்கள் பாஜகவின் மாநில தலைவர்கள்.
மத்திய அரசு அனுமதித்தால் தான் மாநில அரசால் செயல்பட முடியும் என்றும்,
மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டால் மாநில அரசுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்றும்,
மத்திய அரசின் திட்டங்களோடு இணங்கி நடக்கவில்லை என்றால் மாநில அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் என்றும் வெளிப்படையாகவே ஒன்றிய அரசை ஆளுகிற கட்சிகளின் தமிழ்நாட்டு ஆளுமைகள் கூறுவது மாநிலத்தின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் அல்லவா?
ஆளுநரை கொண்டு மாநில அரசின் சட்ட திட்டங்களை முடக்கி போட்டால் ஆளுநரோடு இணக்கமாக சென்று மாநில நலனை காத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொல்லும் அதிகார வர்க்கத்தை என்னென்று சொல்வது?
மத்தியில் ஆள்வது உங்கள் கட்சி என்றாலும் பறிக்கப்படும் அதிகாரம் உங்கள் மாநிலத்தின் அதிகாரம் அல்லவா?
மாநிலத்தின் அதிகாரம் பறிபோனால் மாநில மக்களின் நலனும் சேர்ந்தே பறிபோகும் என்பது உங்களுக்கு தெரியாதா?
மாநிலத்தை ஆளுகிற கட்சிகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காக மாநில நலனை பறி கொடுப்பது சரியாகுமா?
அண்டை மாநிலங்களில் இது போன்று தான் மாநில நலன்களை விட்டுக் கொடுத்து அரசியல் செய்கிறார்களா?
ஒரு சில உதாரணங்களை கூறுகிறேன்...
ஒன்றிய அரசை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த பொழுது கேரள சட்டமன்றத்தில் அதிகாரம் செலுத்தியதும் முதலமைச்சர் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தான். ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி நடந்தாலும் ஒன்றிய அரசின் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத்தை கேரளாவில் ஆட்சி செய்த மாநில காங்கிரஸ் கட்சி எதிர்த்தது.
மதுரையைச் சேர்ந்த பாண்டியன் என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒரிசா மாநிலத்தில் செல்வாக்கு பெற்று அம் மாநில தலைமையாக உருவான பொழுது ஒரு தமிழர் உங்களை ஆள விடலாமா என்ற பரப்புரையை ஒன்றிய அரசை வழிநடத்தும் பிரதமரே செய்தார் என்பது நாம் அறிந்தது. இது அறமற்ற பரப்புரை என்றாலும் அம்மாநில மக்களுக்கு அதிகாரத் தலைமை செல்ல வேண்டும் என்ற அடிப்படை நிறைந்தது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்காக அங்குள்ள தமிழர் பரப்பில் பரப்புரையில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையிலேயே இசைத்துக் கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியிலேயே நிறுத்தினர் கர்நாடகா பாஜகவினர் . தமிழக பாஜக தலைவர் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. கர்நாடக பாஜக தலைமை கர்நாடக உரிமைக்காக மட்டுமே என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.
இப்படித்தான் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தங்கள் மாநில நலனை பறி கொடுக்க எந்த மாநிலத் தலைமையும் தயாராக இல்லை. தமிழ்நாட்டைத் தவிர.
ஒன்றிய அளவில் ஆளுகை செய்யும் கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் போதிய அங்கீகாரம் இல்லை என்பதற்காக மாநில கட்சிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பாஜக மாநில நலனை மறந்து விட்டு மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு ஆள் சேர்ப்பது யானை தானே தன் தலையில் சேற்றை வாரி இறைத்துக்கொண்டது போல் ஆகும்.
ஒன்றிய அரசின் அதிகார வரம்பை மீறி மாநிலத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதெல்லாம் தன் கட்சி என்றும் பாராமல் மாநில நலனை கருத்தில் கொண்டு கருத்து கூறும் வழக்கம் பாஜகவில் உருவானால் தமிழ்நாட்டில் பாஜகவிற்கான வாய்ப்புகளும் வளமாக இருக்கும்.
ஒன்றிய அரசால் நியமனம் செய்த ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வில் ஒன்றிய அரசின் நிறுவனத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திருத்தம் செய்யும்பொழுது ஒன்றிய அரசை ஆளும் கட்சியினுடைய மாநில பிரதிநிதி என்பதையெல்லாம் கடந்து கோபம் கொப்பளித்திருக்க வேண்டும்.
கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும் பொழுது அருகில் இருப்பவர் தனது கட்சியின் தமிழ்நாட்டு தலைமை தானே என்றும் கூட பார்க்காமல் கன்னட மாதா பாடலை பாடிவிட்டு நிகழ்ச்சியை நடத்து என்று கதறும் மாநில உணர்வு தமிழ்நாட்டில் உள்ள பாஜக ஆளுமைகளுக்கு வர வேண்டும்.
அதை விடுத்து ஆளுநருக்கு ஆதரவாக ஒன்றிய அரசு அலுவலகத்திற்கு ஆதரவாக மாநில உரிமையை விட்டுக் கொடுப்பது விரும்பத்தக்கதல்ல.
நாணயம் வெளியிடுதல், வங்கி நிர்வாகம், ராணுவ கட்டமைப்பு போன்ற ஒட்டுமொத்த ஒன்றியத்திற்குமான பொதுவான செயல்பாடுகளை தவிர ஏனைய அத்தனை துறைகளையும் மாநில அரசே அதிகாரம் செலுத்த வேண்டும்.
அப்போதுதான் மாநில தன்னாட்சி மலரும். ஒட்டுமொத்த ஒன்றிய அரசு வலிமையான அரசாக மாறும்.
ஒரு பகுதி மக்களின் பண்பாடு, நிலம், மொழி, பழக்கவழக்கம், கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் பொழுது அப்பகுதி மக்கள் எழுந்து நின்று போராடுவது தவிர்க்க முடியாததாகும்.
அப்படி ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் பொழுது உரிமையை பறிகொடுக்கும் மாநிலத்திலிருந்தே ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் செயலாக எள்ளி நகையாடப் படும்.
ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராக ஒன்றியத்தில் ஆளும் உங்கள் கட்சிக்கு எதிராக உங்களால் குரல் எழுப்ப முடிந்தால் நீங்கள் தான் இம்மண்ணின் மக்களுக்கான தவிர்க்க முடியாத தலைமை.
இயங்குவோம்...
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்.