21ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் சமூகத்தில், கல்வி மற்றும் திறன் மேம்பாடு என்பது ஒவ்வொரு தனிநபரின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மிக அவசியமான கூறுகளாக மாறியுள்ளன . இதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களை உலகத் தரத்திலான வல்லுனர்களாக உருவாக்குவதற்கும் ஏற்படுத்திய திட்டம் தான் "நான் முதல்வன்”.
கல்விக் கட்டமைப்பைப் புதுமைப்படுத்தி, கல்வி கற்கும் சூழலை எளிமைப்படுத்தி, இளைஞர்களின் திறன்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடனும் நவீன தொழில் உலகின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்துவதுமே இத்திட்டத்தின் அடிப்படை அம்சமாகும்.
“நான் முதல்வன்” திட்டம் அதிநவீன டிஜிட்டல் தளத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தளம் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநெறிகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் பயிற்சிகள் பற்றிய புதுப்புது தகவல்களை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற்றுத் தங்களின் வாழ்க்கை இலக்குகளை அடைய உதவுகிறது.
இத்திட்டத்தின் நோக்கங்கள் வருமாறு:
1. “நான் முதல்வன்“ திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதாகும். இது மாநிலத்தின் வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான திறன் மேம்பாட்டு முயற்சியாக கருதப்படுகிறது. இந்த இலக்கை அடைவதன் மூலம் தமிழ்நாடு தேசிய அளவில் திறன் மேம்பாட்டில் முன்னணி மாநிலமாக உருவாகும்.
2. மாறிவரும் உலக சந்தைக்கு ஏற்ப இளைஞர்களுக்குத் தொழில் நுட்பத் திறன் பயிற்சியளித்து, அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை கணிசமாக அதிகரிக்க முடியும். இதன் வாயிலாக மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது.
3. தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், விவசாயம், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் நவீன தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கிறது.
4. அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதலை வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இதன் மூலம் மாணவர்கள் மேல் படிப்பு குறித்து சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
5. மத்திய அரசு பணிகளுக்கான தயாரிப்பில் சிறந்து விளங்கும் நோக்கத்துடன், இத்திட்டம் ஆண்டு தோறும் 1000 சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குகிறது. UPSC தேர்வுக்கான சிறந்த பயிற்சியை இத்திட்டம் வழங்குகிறது.
6. பல்வேறு துறைகளிலிருந்து வரும் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் நடைமுறை அனுபவங்களையும் தொழில் உலகின் உண்மையான சூழலையும் புரிந்துகொள்ள முடிகிறது.
7. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு இத்திட்டம் மூலம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூபாய் 7,500 வீதம் உதவித் தொகை வழங்கப் படுகிறது.
நான் முதல்வன் ஏற்படுத்திய தாக்கங்கள்:
1. நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் செயல்திறனும் மேம்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது, அதற்கேற்ப பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
2. இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பெறும் திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திறன்களைப் பெற்றதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் போட்டித்திறனுடன் செயல்பட முடிகிறது. பல்வேறு நிறுவனங்கள் இந்த பயிற்சி பெற்ற மாணவர்களை விரும்பி பணியமர்த்துகின்றன.
3. திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் பல இளைஞர்கள் தங்களின் சொந்த தொழில்களை ( Start Up) தொடங்கும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் தொழில் முனைவோர் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. புதிய வணிக யோசனைகள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் உருவாகி வருகின்றன.
4. நான் முதல்வன் திட்டம் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத் தக்கப் பங்களிப்பை வழங்கி வருகிறது.
5. பல உலக நிறுவனங்கள் தங்கள் தொழில் மையங்களை தமிழ்நாட்டில் உருவாக்கிட இத்திட்டம் ஊக்குவித்துள்ளது. இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
6. இத்திட்டம் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. சமூக நீதியை வளர்ப்பதிலும் இத்திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது.
எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேலும் விரிவாக்கி, புதிய தொழில்நுட்பங்களை சேர்த்து, சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் திட்டங்கள் தமிழ்நாட்டை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் உலக அளவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாக்கும்.
“நான் முதல்வன்” திட்டம் வெறும் கல்வி திட்டம் மட்டுமல்ல, மாறாக தமிழ்நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சமூக புரட்சியாகும். இதன் மூலம் ஒவ்வொரு தமிழ்நாட்டு இளைஞனும் உண்மையிலேயே “நான் முதல்வன்” என்று நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய நிலையை, முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஏற்படுத்துவார்.
இப்படி இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் சிந்தித்து செயல்படுகிற அந்தத் தலைவரின் கரத்தை வலுபடுத்துவதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு.
- நெல்லை பாபு