தமிழ்நாட்டு ஆளுநருக்கு அடுத்தபடியாக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போதெல்லாம் ஒரு விவாதமும், தேவையற்ற சிக்கல்களும் ஏற்படுகின்றன! இப்போது, ஒரு நாளேட்டுக்கு அவர் கொடுத்திருக்கும் சிறப்பு நேர்காணல், பெரிய வெறுப்பு நேர்காணலாக அமைந்திருக்கிறது!

nirmala sitaraman 194எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல், திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். எதற்காக? ஒன்றிய அரசுக்கு நாம் வரிப்பணமாக ஒரு ரூபாய் அனுப்பி வைத்தால், அங்கிருந்து வெறும் 26 காசுகள் மட்டுமே திரும்ப வருகின்றன என்ற நடப்பு உண்மையை எடுத்துச் சொன்னதற்காக! ஒன்றிய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்கும் நிதிப் பகிர்வுத் தொகை ஒருதலைப் பட்சமாக உள்ளது என்ற உண்மை வெகுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்று நினைக்கிறார் அவர். ஏன் இந்த ஓர வஞ்சனை என்று கேட்டால், அதற்கு உண்மையான விடையைச் சொல்லாமல், எந்த விளக்கமும் தராமல், இது பிரிவினைவாதம் என்று கூறி வாயடைக்கப் பார்ப்பதுதான் அவருடைய தந்திரமாக இருக்கிறது.

நியாயம் கேட்பதைப் பிரிவினைவாதம் என்று சொல்வது பாசிச முகத்தின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். இதே போன்றதொரு கோரிக்கையைக் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி அவர்கள் கேட்டாரே, முன் வைத்தாரே, அவரும் ஒரு பிரிவினைவாதிதானா? நீங்கள் உடைத்தால் மண் சட்டி, நாங்கள் உடைத்தால் பொன் சட்டியா?

எல்லோர்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடலின் நோக்கம் என்று பலமுறை சொல்லி ஆகிவிட்டது. அவர்களின் காதுகளில் அது விழுவதில்லை. அந்தக் கோட்பாடு, அவர்களுக்கு அடிப்படையிலேயே ஏற்புடையதும் இல்லை. அதனால்தான் நம் மாண்புமிகு முதலமைச்சர் மிகச் சரியான - நிர்மலா சீதாராமனுக்கு உரிய நெற்றி அடியாக - ஒரு விடையைச் சொல்லி இருக்கிறார்!

பிறப்பின் அடிப்படையில் வர்ண வேறுபாட்டைக் கற்பிக்கின்ற, ஏற்றத்தாழ்வை எப்போதும் விரும்புகின்ற அவர்களுக்கு நம் திராவிட மாடல் கோட்பாடு பிரிவினை வாதமாகத்தான் தெரியும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.

கருப்பும் காவியும் எப்போதும் முரண்பட்டுத்தான் இருக்கும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நம் கொள்கை. பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது அவர்களின் வாடிக்கை! இந்தப் பிரிவினை காலகாலமாக நமக்குள் இருக்கிறது, என்றென்றும் இருந்தே தீரும்! எனவே அவர்களின் பார்வையில் நாம் பிரிவினைவாதிகளாகத்தான் தோன்றுவோம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It