இன்று மீண்டும் ‘பராசக்தி’

1952-ல் ஒரு 'பராசக்தி' வந்து தமிழ்நாட்டின் சமூகக் கட்டமைப்பையே கேள்வி கேட்டு உலுக்கியது. இதோ, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு 'பராசக்தி' வெளியாகவுள்ள நிலையில் அதன் ட்ரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

சுதா கொங்கராவின் இயக்கத்தில், 1965-களின் காலக்கட்டத்தைக் கண்முன் நிறுத்தும் ட்ரைலர், நம் நரம்புகளில் தமிழ் உணர்வை பாய்ச்சுகிறது.

 "நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தித் திணிப்பிற்குத்தான் எதிரானவர்கள்" என்ற அந்த ஒற்றை வசனம், திராவிட இயக்கம் காலம் காலமாக முன்வைக்கும் தெளிவான அரசியலைப் பறைசாற்றுகிறது.

parasakthi 700இந்தத் திரைப்படம் வெறும் கற்பனையல்ல, நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்தின் வரலாறு.

1965 ஜனவரி 26 அன்று இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டம் அமலுக்கு வந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகமும், மாணவர் சமூகமும் கிளர்ந்தெழுந்த அந்த வீரம் செறிந்த நாட்கள் ட்ரைலரில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளன. தாளமுத்து, நடராசன் தொடங்கி கீழப்பழுவூர் சின்னசாமி வரை, 'தமிழ் வாழ்க' என்று முழக்கமிட்டுத் தீக்கிரையான அந்த வீரத் தியாகிகளின் வலியை இந்தப்புதிய 'பராசக்தி' மீண்டும் நினைவூட்டுகிறது.

ரயில் மறியல்கள், தடியடிகள், துப்பாக்கிச் சூடுகள் என ஒரு மாநிலமே போர்க்களமாக மாறிய அந்த வரலாற்றுச் சூழலை, இன்றைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அன்று பேரறிஞர் அண்ணா தொடங்கி வைத்த அறப்போர், தலைவர் கலைஞர் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல் என திராவிட இயக்கம் இந்த மண்ணில் மொழிப்பற்றை ஒரு அரசியல் கொள்கையாக மாற்றியது. 1965-ல் இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் கிளர்ந்தெழுந்தபோது, திராவிட இயக்கத்தின் மாணவர் படைதான் முன்னணியில் நின்றது.

ஒரு தலைமுறையே "இந்தித் திணிப்பை" எதிர்த்துச் சிறை சென்றது. கீழப்பழுவூர் சின்னசாமி போன்ற தியாகிகளின் வீர மரணம், இன்றும் நம் நரம்புகளில் தமிழ் உணர்வை ஏற்றுகிறது.

இன்று அந்த வரலாற்றை ஒரு கலைப்படைப்பாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திராவிட இயக்கம் என்பது வெறும் அரசியல் அதிகாரம் மட்டுமல்ல; அது தமிழின் மானம் காக்கப் பிறந்த இயக்கம்.

 பழைய 'பராசக்தி' சமூகச் சீர்திருத்தத்தைப் பேசியது என்றால், இந்தப் புதிய 'பராசக்தி' நம் மொழி உரிமையை மீட்டெடுத்த அந்த வரலாற்றுப் போராட்டத்தைப் பேசப்போகிறது.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பது வெறும் வாசகமல்ல, அது நம் வாழ்வுரிமை. இன்றைய தலைமுறைக்கு நம் முன்னோர்கள் செய்த தியாகத்தைச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.”உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு!" என்ற முழக்கம் மீண்டும் திரையரங்குகளில் ஒலிக்கப் போகிறது!

அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத அந்த 'பராசக்தி'யை மீண்டும் திரையில் காணக் காத்திருப்போம்!

- நெல்லை பாபு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.