ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தர்ராஜன் அவர்களிடம் கருஞ்சட்டைத் தமிழர் இதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல்.
அண்மையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையின் அலுவலகம் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதே போல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இச்செயல்பாடுகள் மூலம் தமிழ்நாடு அரசும் நீதிமன்றமும் மக்கள் நலனுக்கு ஆதரவான போக்கைக் கடைபிடிப்பதாகப் பார்க்கலாமா?
நீதிமன்றத்தையும் தமிழக அரசையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேசத் துரோக வழக்குகளை நீக்கியது, முதல் குற்றப் பத்திரிக்கைகளை (FIR) நீக்கியது என மிகச் சரியான பார்வையோடு இவ்வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசை அப்படிப் பார்க்க முடியாது. ‘தாமிர உருக்காலைகளுக்குத் தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது’ என்கிற கொள்கை முடிவை அரசு எடுக்காமல், வெறும் அரசாணை (G.O.) பிறப்பித்திருக்கிறது. இவ்வரசாணையைச் சட்டப்படி எளிதில் வென்றுவிடுவார்கள்.
ஆனால் கொள்கை முடிவினில் உச்ச நீதிமன்றமோ, மத்திய அரசோ தலையிடமுடியாது. தொழிற்கொள்கை முடிவு முழுக்க மாநில அரசின் உரிமையாகும். மத்திய அரசிடம் உறுதியாக நின்று மாநில உரிமைகளுக்காகப் போராடும் அரசாக இருக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் அரசு அப்படியில்லை.
எனவே தமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.
இது போன்ற போராட்டங்களால் வேலை வாய்ப்பு குறைகிறது, அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது, தொழில் வளர்ச்சி குன்றுகிறது என்பது போன்ற ஊடகக் கருத்துகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஊடகங்களுக்கான அழுத்தத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். ஊடகங்களில் பணியாற்றக் கூடிய முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு இருக்கும் எல்லைகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். என்னதான் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவான செய்திகளைப் போட வைத்தாலும், மக்கள் வாங்கிப் படிப்பதில் தான் அவ்வூடகத்திற்குப் பெருமை இருக்கிறது. எனவே ஊடகங்கள் மக்களுக்கான குரலாக ஒலிக்க வேண்டும். 1 கோடி வாசகர்கள், 50 இலட்சம் வாசகர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டுதானே மற்ற விளம்பரங்களை ஊடகங்கள் பெறுகின்றன. அப்படி இருக்க, அதற்குக் காரணமான மக்கள்தான் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செய்திகளையே ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
கிராம சபைகள் கூடித் தீர்மானம் நிறைவேற்றினால், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் செயல்பாட்டைத் தடுக்கமுடியும் என்கிற கருத்து பற்றி...
கிராம சபைகள் கூடித் தீர்மானம் நிறைவேற்ற முழு உரிமையும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அப்படி கிராம சபைகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் அது குறியீட்டளவில் முதன்மையான விசயமாக இருக்கும். அது மிகவும் முக்கியமான ஆயுதமாகவும் இருக்கும். ஆனால் நடைமுறையில் எந்த அளவிற்கு அது நீதிமன்றத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘நியாம்கிரி’ பிரச்சினையில் 14 கிராமசபைகள் கூடித் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆனால் அதே முக்கியத்துவத்தை மீத்தேன் திட்டத்திற்கோ, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திற்கோ கொடுப்பார்களா என்றால் அது சந்தேகம்தான்.
ஆனாலும் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது ஒரு நல்ல முயற்சியே ஆகும். அது ஒரு முக்கியமான முன்நகர்வு.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இந்தியா முழுக்க இருக்கும் வெவ்வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளின் நிலைப்பாடு பற்றி...
ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்த வரையில், துப்பாக்கிச் சூடு நடந்த பின்பு இந்தியா முழுதும் அதற்கு எதிரான போராட்டங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் நடத்தின. டெல்லி முதலான இடங்களில் இயங்கும் அமைப்புகள் நமக்குத் தோழமையாக இருக்கின்றன. பல நேரங்களில் அவர்கள் நமக்காகக் குரல் கொடுக்கின்றனர்.
மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எனத் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, அரசு எட்டுவழிச் சாலைத் திட்டத்தை அறிவிக்கிறது. இதனால் மற்ற போராட்டங்கள் நீர்த்துப் போகிறதா?
அரசிற்கு எதைப் பற்றியும் கவலையில்லை. தன்னை இயக்குபவர்களுக்குத், தன்னைக் கட்டிக் காப்பாற்றுபவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் செய்யும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எனத் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டாலும் அவர்களால் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை அறிவிக்க முடிகிறதென்றால் அவர்கள் யாருடைய நலனுக்காக இயங்குகிறார்கள் என்பது விளங்கும்.
இப்படி மாற்றி மாற்றி மக்கள் விரோதத் திட்டங்களை அறிவித்து நம்முடைய கவனத்தைச் சிதறடிப்பதே அரசின் பணியாக இருக்கிறது. ஆனால் இன்று மக்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிற காரணத்தால் அரசு எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், தமிழ்நாட்டின் மையக்கருதுகோளாகச் சூழலியல் பிரச்சினை மாறவேண்டும் என்பதே. அதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
நேர்காணல்: மா.உதயகுமார்