பல்வேறு சுற்றுச்சுழல் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முகிலன் காணாமல் போய் 20 நாட்களுக்கும் மேலாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் சொல்லி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரைக் கொன்று போட்ட ஸ்டெர்லைட் மற்றும் அரசு கள்ளக்கூட்டை அம்பலப்படுத்திய பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து அவர் காணாமல் போகச் செய்யப்பட்டார். ‘ஸ்காட்லாந்து யார்ட்’ காவல் துறைக்கு இணையாக சொல்லப்படும் தமிழக காவல்துறை மர்மமான முறையில் முகிலனை தீவிரமாகத் தேடி வருகின்றது. பொதுவாக எஸ்.வி. சேகர், எச்.ராஜா போன்ற பார்ப்பனர்கள் மட்டும்தான் தங்களுடைய மந்திர சக்தியால் தமிழக போலீசை ஏமாற்றுவார்கள்; மாய உருவெடுத்து அவர்களுடனேயே போவார்கள், வருவார்கள், பொதுமேடைகளில் பேசுவார்கள், ஆனாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் முகிலன் அப்படிப்பட்டவர் அல்ல. அவரிடம் எந்த மந்திர சக்தியும் இல்லை. அவரால் ‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீசாரை எல்லாம் 20 நாட்களுக்கும் மேலாக நிச்சயம் ஏமாற்ற முடியாது. ஆனாலும் ‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீஸ் இருட்டுக்குள் எருமையைத் தேடுவது போன்று இன்னும் தேடிக் கொண்டே இருக்கின்றது.
ஒரு பக்கம் இந்த மண்ணின் மக்களுக்காகவும், அவர்களின் சுகாதாரமான வாழ்விற்காகவும் போராடிய முகிலனை காணாமல் போகச் செய்த இந்த அரசு, இன்னொரு பக்கம் இந்த மண்ணின் சூழலை நாசமாக்கி, ஆன்மீகம் என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடித்துக் கொண்டும், கொட்டமடித்துக் கொண்டும் இருக்கும் ஜக்கி வாசுதேவனை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது. காடுகளை அழித்து யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்து, ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டு இருக்கின்றான் ஜக்கி. மகா சிவராத்திரி என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இவன் அடிக்கும் லூட்டி எல்லை மீறி சென்று கொண்டு இருக்கின்றது. நடிகைகளை அழைத்து வந்து விடிய விடிய ஆடவிட்டு அனைவருக்கும் ‘ஆன்மீக’ பரவசத்தை அளித்துக் கொண்டு இருக்கின்றான். மலைத்தள பாதுகாப்புக் குழுமத்தின் அனுமதியும், நகர் ஊரமைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அனுமதியும் பெறாமலே சட்ட விதிகளை மீறிக் கட்டிடம் மற்றும் சிலை எழுப்பப்பட்டதாகவும், வன உயிரினங்களின் வாழிடங்கள் அபகரிக்கப் பட்டுள்ளதால், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை விளைவிப்பதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு அவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. பல அமைப்புகள் ஜக்கியின் அயோக்கியத்தனத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் தன்னுடைய பணபலத்தால் அனைவரையும் விலைக்கு வாங்கியுள்ள ஜக்கி 112 அடியில் நிறுவப்பட்ட ஆதியோகி சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல பேரை கலந்து கொள்ளச் செய்து தான் ஒரு சர்வ வல்லமை பொருந்திய கார்ப்ரேட் சாமியார் என்பதை நிரூபித்தான். ஜக்கி காட்டை அழிக்கின்றான் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் மாநில முதல்வரில் இருந்து நாட்டின் பிரதமர் வரை ஏன் இவனை ஆதரிகின்றார்கள் என்பதில்தான் இது போன்ற கார்ப்ரேட் சாமியார்களின் முக்கியத்துவம் அடங்கியிருக்கின்றது.
முதலாளித்துவம் ஆழமாக வேர்கொள்ள, வேர்கொள்ள அது தோற்றுவிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், அதனால் ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகளும், மனித விழுமியங்களின் சிதைவும், உளவியல் சித்தரவதையும் மனிதர்களை அதில் இருந்து விடுபட துரத்தி அடிக்கின்றன. தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள அறிவியல் ரீதியான முறைகளை தேடிச் செல்வதைவிட, ஏற்கெனவே சமூகத்தால் கட்டியமைக்கப் பட்டிருக்கும் யோகா போன்ற பழம்பெருமைகளில் தங்களை கரைத்துக் கொள்வதன் வாயிலாக மனவிடுதலையை அடைய முடியும் என நம்புகின்றார்கள். பொதுவாக இது போன்ற நபர்கள் அனைவரும் தனக்கான விடுதலை என்பது ஒட்டு மொத்த சமூக விடுதலையுடன்தான் சாத்தியம் என்பதை நம்ப மறுப்பவர்களாகவும், போராட்டம், ஆர்ப்பாட்டம், சித்தாந்தம் போன்றவற்றை அருவருப்பாகப் பார்க்கும் புல்லுறுவிகளாகவுமே இருப்பார்கள். இது போன்ற நபர்கள்தான் கார்ப்ரேட் சாமியார்களின் வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.
இது போன்ற சாமியார்கள் ஒருபக்கம் போலியான மனவிடுதலையைக் கொடுப்பவர்களாகவும், பார்ப்பன இந்துமதத்தின் சீழ்பிடித்த சனாதன தர்மத்தைக் காப்பவர்களாகவும், அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்தை மாற்றித் தரும் ஏஜென்ட்டுகளாகவும், தன்னை நம்பும் லட்சக்கணக்கான அடிமைகளின் மூலம் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான கருத்தியலைப் பரப்புவர்களாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகப்பெரிய ஓட்டு வங்கிகளாகவும் உள்ளார்கள். இதனால்தான் எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் எந்தவித கூச்சமும் இன்றி இது போன்ற சாமியார்களின் அயோக்கியத்தனங்களுக்கு உடந்தையாக இருக்கின்றார்கள். அதனால்தான் ஜக்கி போன்றவர்களால் காடுகள், மலைகள் என அனைத்தையும் ஆட்டயப் போட முடிகின்றது.
கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதி நடந்த சிவராத்திரி விழாவுக்கு பக்த கோடிகளுக்கு ஆன்மீகப் பரவசத்தை அள்ளிக் கொடுக்க தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைளும், அதற்கு சட்ட அங்கீகாரத்தை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். மத்திய மாநில அரசுகள் அனைத்தும் இது போன்ற சாமியார்களுக்கு அடியாள் படையாக செயல்படும் பிற்போக்கு சக்திகளால் ஆளப்படுவதால், உண்மையிலேயே இவனின் அயோக்கியத்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைப்பவர்களால் கூட எதுவும் செய்ய முடியாமல் போகின்றது.
"கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவின்போது, வன விலங்குகளால் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்" என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைவிட நமக்கு வேறு என்ன சாட்சி வேண்டும், ஜக்கி காடுகளை ஆக்கிரமித்து அதை அழித்துதான் தனது சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி உள்ளான் என்பதற்கு.
சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கட்டணமாக பெற்றுக்கொண்டு யோகாவை மார்க்கெட் செய்யும் இந்தக் காவிப்பயல் இன்றைய தேதிக்கு இந்தியாவின் மிகப் பெரும் கோடிஸ்வரனாக வலம் வருகின்றான். ஆனால் தமிழ் மக்கள் தங்களின் வளங்களை இழந்தும், வனவிலங்குகள் தங்களின் வாழிடங்களை இழந்தும் கேட்பாரற்று நிற்கின்றார்கள். சுற்றுச்சூழலுக்காக போராடுபவர்களை சுட்டுக் கொன்றும், காணாமல் போகச் செய்தும் கார்ப்ரேட்டுகளின் ஏவல் நாய்களாக வேலை செய்யும் அதிகார வர்க்கம், சுற்றுச்சூழலை நாசம் செய்து ஆன்மீகம் என்ற பெயரில் அயோக்கியத்தனங்கள் செய்து கோடிகளை சுருட்டும் போலிச் சாமியார்களுக்கு கைகட்டி சேவகம் செய்கின்றது. தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் பெரும் அபாயமாக ஜக்கி மாறி இருக்கின்றான். தமிழ்மண்ணின் மீதும், மக்களின் மீதும் யாருக்கெல்லாம் உண்மையான அன்பும், அக்கறையும் உள்ளதோ அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி நம்முடைய சுற்றுச்சுழலை அயோக்கியர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. அதை தவிர்ப்போமானால் இன்னும் முகிலன்கள் காணாமல் போய்க்கொண்டே இருப்பார்கள், ஜக்கிகள் காடுகளையும், மலைகளையும் அழித்துக் கொண்டே இருப்பார்கள்.
- செ.கார்கி