அளவுக்கு அதிகமாக மதுவருந்தியதால் தன்னிலை அறியாது தள்ளாடும் குடிமகன்களை, டாஸ்மாக் அமைந்துள்ள தமிழ்நாட்டு வீதிகளில் அன்றாடம் பார்க்கிறோம். இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார், நெடுநல்வாடை தந்த நக்கீரர்.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் இத்தகைய காட்சி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர...
என்று போகிறது பாடல்.
ஆறு போல அகலமான மதுரை நகரத்துத் தெருக்களில் மக்கள் சுற்றித் திரிகிறார்களாம். எவ்வாறு? லேசாக மழைச்சாரல் விழுந்து கொண்டிருக்கிறது. பகல் பொழுது கழிந்து விட்டது. எனினும், கள்ளை அதிகமாகக் குடித்ததால், மழைத்துளி தன்மேல் விழுவதையும் பொருட்படுத்தாது, பகல் பொழுது கழிந்த பின்னரும் தாம் விரும்பிய இடங்களிலெல்லாம் சுற்றித் திரிகிறார்களாம், மதுரை நகரத்து மக்கள்.
டாஸ்மாக்கில் குடித்துவிட்டு குடிமகன்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள், அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகிக் காண்பவர்களை நகைக்க வைக்கின்றன. குடிமகன்கள் செய்யும் அக்கப் போர்களால் பெண்கள் சாலையில் நடக்க முடியாத சூழல் உள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
உண்ணற்க கள்ளை என்று கூறும் வள்ளுவர், கள்ளுண்போர் சான்றோரின் நல்லெண்ணத்தைப் பெற மாட்டார்கள் என்கிறார் (குறள் 922). உடல் நலத்துக்குக் தீங்கான மதுபானங்களைத் தடை செய்வது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அரசை வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக உள்ளது (அங்கம் 47). ஆனால் இன்று அரசே மதுக்கடைகளை நடத்தும் அவலம் நிகழ்கிறது.
தமக்குக் கேடு தருவதோடு நில்லாது, பிறருக்கும் கேட்டினை விளைவிக்கும் மதுவை மறப்போம். மானுடம் காப்போம்.