எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைய போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற மனநிலையில் முத்தமிழறிஞர்

 கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் குறித்து தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து தனிநபர் விமர்சனங்களை முன்வைத்து பரப்புரை செய்து வருகிறார்.

தான் ஆட்சி செய்த காலத்தில் செய்த நலத்திட்டங்கள், மீண்டும் வெற்றி பெற்றால் செய்யப் போகும் நலத்திட்டங்கள் என்பது பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதே ஆக்கப்பூர்வமான தேர்தல் பரப்புரை‌. அதை விடுத்துத் தி.மு.க தலைவர்களைக்குறித்து வன்மத்தோடு ஒரு நாலாந்தர நபர் போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அநாகரீகத்தின் உச்சம். அவர் வகித்த / வகிக்கும் பொறுப்புக்கு அது அழகன்று.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஒரு ஆடியோவின் அடிப்படையில், முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி பேசினார். ஆனால் அந்த ஆடியோ ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என்று கூறி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியுபர் மாரிதாஸூக்குத் தனது வழக்கறிஞர் மூலம் சட்ட அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா.  போலியாக தயாரிக்கப்பட்ட ஆடியோவின் அடிப்படையில் பேசியதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற போது ஒட்டு மொத்த தமிழ்நாடே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. முதல்வரானவுடன் மு.க.ஸ்டாலின் மிகுந்த சிரத்தை எடுத்து செயலாற்றி ஆக்சிஜன் தங்கு தடையின்றி மருத்துவமனைகளுக்குக் கிடைத்திட வழிவகை செய்தார். அத்துடன் PPE கவச உடை அணிந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகளை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார். PPE கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற முதல் முதலமைச்சரான மு க ஸ்டாலினை "அவர் கொரோனாவிலேயே போயிருப்பார்" என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது அவரது நெஞ்சத்தில் இருக்கிற கொடூரமான வஞ்சத்தைக் காட்டுகிறது

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019, 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2021, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2024 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என தொடர்ச்சியாக பத்து தோல்விகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பிலே நின்று கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை ஒருமையில் பேசி வருகிறார்

அரசியல் நாகரீகம் என்பதன் பொருள் என்னவென்று விளங்காத எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கு முடிவுரை எழுதும் விதமாக  வர இருக்கிற சட்டமன்றத் தேர்தல் அமையப் போகிறது.  பத்து தோல்வி பழனிச்சாமி இந்த தேர்தலின் முடிவில் மொத்த தோல்வி பழனிச்சாமியாகத் தனித்து நிற்கப்போகிறார், தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தரப் போகும்  தண்டனை அதுதான்!

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.