தமிழ்நாட்டில் திருக்கோவில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பா.ஜ.க பின்பலம் கொண்டவர்களால் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது. அதன் சூழ்ச்சி புரியாத பக்தர்கள் சிலரும் அதை ஆதரித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை திருக்கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து வெளியேறி அத்திருக்கோவில்கள் தனியார் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையும், அறநிலையத்துறையின் அவசியத்தையும் நமக்கு அண்மையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் காணிக்கை ஊழல் நமக்கு உணர்த்தி இருக்கிறது.ayothi ramar templeஅயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை, காணிக்கை பணம் திருடப்பட்டதன் மூலம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு 15.06.2026 அன்று சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் விஷ்வாஸ், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி கிரண், நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், மூத்த அதிகாரிகள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி 23.06.2026 அன்று உத்தரப்பிரதேச அரசுக்கு 20 பக்க அறிக்கையை அளித்தது.

காணிக்கை பெட்டி பொறுப்பாளர் ராம்சங்கர், காணிக்கை பணம் எண்ணும் பிரிவில் பணிபுரியும் அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, சுபாஷ் சந்திர வஸ்தவா, கருணேஷ் பாண்டே, மணீஷ், அவினாஷ் சுக்லா, ராம்சங்கர் மிஸ்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதன் பிறகு நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ் அதிகாரியும் அறக்கட்டளை உறுப்பினருமான கிருஷ்ண மோகன் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அப்பாவி பக்தர்களின் மதவெறியை தூண்டி, அடுத்த மதத்தினரின் வழிபாட்டு தளத்தை இடித்து, அந்நிலத்தை அபகரித்து கட்டப்பட்ட இக்கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது நேரில் சென்ற பிரதமர் மோடியோ, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ தற்போது வரை இக்கோவில் காணிக்கை ஊழல் குறித்து வாய் திறக்கவில்லை.

அயோத்தி ராமரை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் நபின் "ராமர் கோவில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்துகின்றன. அவர்கள் ஒரு காலத்தில் ஸ்ரீராமரின் இருப்பைக் கேள்வி கேட்டு ராமர் கோவில் இயக்கத்தை எதிர்த்த வரலாற்றைக் கொண்டவர்கள். ஆகவே எதிர்க்கட்சிகள் இதைபற்றிப்

பேசுவது வேடிக்கையானது" என்று கூறியுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை திசை திருப்பி இந்த விவகாரத்தை மூடி மறைக்க பா.ஜ.க முயல்வது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

அதேபோல் "எங்கப்பன் குதிருக்குள் இல்ல" என்ற கதையாக ஆடிட்டர் குருமூர்த்தி இது தொடர்பாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் "இது வெறும் திருட்டு மட்டுமே. ஊழலோ மோசடியோ அல்ல. பிற மாநிலங்களிலுள்ள அரசு அறநிலையத்துறையை விட வேகமாக இந்த விவகாரத்தில் இக்கோவில் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது" என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

ஆயினும் அவரது கட்டுரையில் "ஜுன் 4 ஆம் தேதி காணிக்கை திருட்டு பற்றி தெரிய வந்தது. ஜூன் 5 ஆம் தேதி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் உள்விசாரணைக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் அவினாஷ் சுக்லா வீட்டில் இருந்து காவல்துறை வருவதற்கு முன்பே ரூ.58 லட்சம் கைப்பற்றப்பட்டது. உள்விசாரணை மூலம் திருடு போன பணத்தை முழுமையாக மீட்க முடியும் என்று

ஜுன் 7 ஆம் தேதி சம்பத் ராய் முடிவெடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் பூதாகரமானதால் ஜூன் 13 ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு உத்தர பிரதேச மாநில அரசுக்கு அறக்கட்டளை கோரிக்கை விடுத்தது" என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் விசாரணையை அறக்கட்டளை நிர்வாகம் ஏறத்தாழ 10 நாட்கள் தாமதப்படுத்தி உள்ளது என்பது புலனாகிறது. இந்த காலகட்டத்தில் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

முழுமையாக விசாரணை முடிவடையாத தருணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் கிரி "பொதுச் செயலாளர் சம்பத் ராய் எந்த தவறும் செய்யவில்லை. அவர் சார்ந்த நபர்கள் மட்டுமே தவறுகளை செய்துள்ளனர்" என்று கூறியிருப்பதன் மூலம் இந்த விவகாரத்தில் கோவில் பணியாளர்களை மட்டும் பலிகடாவாக்கி விட்டு இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும், இந்துத்துவா அமைப்புகளையும் காப்பாற்றும் நடவடிக்கையில் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபடுகிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

"கோவில், கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக் கூடாது" என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப, உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு இந்த சதிச் செயலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதுடன் தனியார் அறக்கட்டளை வசமிருக்கும் அயோத்தி ராமர் கோவில் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் பக்தியின் மீதும், நீதியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கை காப்பாற்றப்படும்.

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.