"வாரத்துக்கு ஒருமுறை டெல்லிக்குச் சென்று அமித் ஷா வீட்டின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி நிற்கிறார். அதிமுகவின் தலைமையகம் சென்னை. பழனிச்சாமியின் தலைமை அலுவலகம் டெல்லி... எஜமானர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்றாக வேண்டும் ! " கனகச்சிதமாகச் சொல்லியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். மானஸ்தர், எடப்பாடி பழனிச்சாமி. எப்படியோ டில்லியின் தலையைத் தடவி பியூஸ் கோயலை ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வரவழைத்துவிட்டார் அவர். தொகுதி உடன்பாடும் பாஜக, பாமக, அமமுகவுடன் முடித்துக் கொண்டது அந்த என்டிஏ கூட்டணி.

அதற்குப் பிறகு எடப்பாடி, "விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகளோடு 20 நாள்கள் பேசிக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். பாருங்கள், நாங்கள் காலையில் பேசினோம், மாலையில் தொகுதி உடன்பாடு முடித்து விட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

அவருக்குக் கொஞ்சம் விபரம் புரியவில்லை என்று தோன்றுகிறது. ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை 'அறிவாலய'த்திற்கு அழைத்துப் பேசுகிறார், விவாதிக்கிறார், முடிவு செய்கிறார். அது வெளிப்படைத் தன்மையாக இருக்கிறது. என்டிஏ கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து எங்கே, எப்போது, யார் யாருடன் பேசி முடிவெடுத்தார்கள்? எடப்பாடி, டி.டி.வி.தினகரன், அன்புமணி எல்லோரும் டில்லிக்கு ஓடி ஓடி அமித்ஷாவிடம் தானே பேசினார்கள். தொகுதி உடன்பாடு டில்லியில் முடிந்தது ரகசியமாக. ராயப்பேட்டையில் கையெழுத்தானது வெளிப்படையாக.

அடுத்ததாக, செய்தியாளர்களிடம் 'அறிவுக்கொழுந்து' அன்புமணி ராமதாஸ் "கடந்த ஐஞ்சு வருசம் தமிழ்நாட்டுல ஆட்சி நரகமா இருந்திச்சி" என்று சிலிர்த்துப் பேசியிருக்கிறார். 'அந்த நரகம்' என்ன என்பதை இங்கே சிறிது பார்ப்போம்:

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மகளிருக்கான இலவச பேருந்துப் பயணம், திட்டம், கட்டணமில்லா மருத்துவ சேவைகள்,

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் மூலம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி,

மக்களைத் தேடி மருத்துவம், பசுமை தமிழ்நாடு இயக்கம், இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 மூலம் விபத்து சிகிச்சை,

பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்,

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன், பெண்கள் முன்னேற்றம், மீனவர் நலன், நீர் மேலாண்மை, உள்கட்டமைப்பு என்று வளர்ச்சிக்கான பல திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கி, நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும் இவைகளை எல்லாம் "நரகம்" என்று சொல்கிறார் அன்புமணி என்றால் அவர் மருத்துவரா? அல்லது மன நோயாளியா? அவரின் பார்வையில் 'சொர்க்கம்' எது என்று சொல்ல வேண்டும். பாஜகவின் உத்திரப் பிரதேசத்தைச் சொல்வாரா அவர்? அவருக்கு மக்கள் சொல்வார்கள் ஏப்ரல் 23ஆம் நாள் தேர்தலில் எது நரகம் என்று.

தலைவர் கலைஞர் அவர்கள் 2011ஆம் ஆண்டு, தனது 88 ஆம் பிறந்தநாளில் விடுத்த அறிக்கையில் "கூடாநட்பு கேடாய் முடியும்" என்று சுட்டிக்காட்டி இருந்தார். அத்தகைய நட்பில், அமித்ஷாவின் பிடியில் பாஜக வுடன் இருக்கிறார் எடப்பாடி. பீகாரில் வலிமையானவராக, முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்வை எப்படிக் 'கூடி இருந்தே' பாஜக முடித்ததோ, அப்படி முடிக்கப் போகிறது எடப்பாடியை . "பீகாரில் என்ன நடந்ததோ அதுதான் இங்கே இந்தத் தேர்தலில் நடக்கப் போகிறது" என்று அதே ராயப்பேட்டை, செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியாக உறுதிசெய்கிறார் டி.டி.வி.தினகரன், எடப்பாடியை அருகில் வைத்துக் கொண்டு.

எப்படியோ, டில்லி முதல் ராயப்பேட்டைவரை எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் காத்துக் கொண்டும், இருக்கிறார்கள், அடுத்தமாதம் 'ஒருவிரலால்' உதயசூரியனைக் கோட்டைக்கு அனுப்ப!

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.