'பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்'என்று நேரிடையாகக் கேட்கவில்லை என்பதைத் தவிர, மற்ற எல்லாப் பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்று ஒரு விமர்சனம் இன்று எழுந்திருக்கிறது!

இது உண்மைதானோ என்று கருதத்தக்க வகையில்,  அண்மையில் சில ஆணைகளை அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது!

அவற்றுள் ஒன்று, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையே மாற்றி இருப்பது!  ஒரு நிர்வாகத்தை முடக்கிப் போடுவதற்கு இதனை விட எளிய வழி வேறு ஒன்றும் இருக்க முடியாது!

இந்திய ஒன்றிய அரசோ நேரடியாகவே சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.  அவற்றுள் ஒன்று,  கடந்த மாதம் 25ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டத் திருத்தம் (FCRA) 2026' என்பதாகும்!

வெளிநாட்டில் இருந்து இங்குள்ள அமைப்புகளுக்கு, கட்சிகளுக்கு - ஏன் - தனி மனிதர்களுக்கு வரும் நிதியைக் கூட ஒழுங்கு செய்வதற்காக 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை,  மேலும் கடுமையாக்கி இந்தத் திருத்தச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது!

இதன் உள்நோக்கம்,  இங்குள்ள சிறுபான்மையினரின் நிதிப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பதே ஆகும்! 

தனி நபர்கள் கூட,  வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறக் கூடாது என்று இந்தச் சட்டத் திருத்தம் சொல்கிறது!

சரியான முறையில் கணக்கு காட்டப்படவில்லை என்றால்,  தனி நபர்கள் மற்றும் இயக்கங்களின் சொத்துகளை முழுமையாகப் பறிமுதல் செய்து விடுவதற்கும் இந்தத் திருத்தம் வழி வகுக்கிறது!

 இவ்வாறு வரும் தேர்தலில்,  நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்க் கட்சிகளை - குறிப்பாகத்  தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணியை ஒடுக்குவதற்கான எல்லா முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள்,  மேலும் என்னென்ன விதமான வேலைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

என்ன நடந்தாலும், தாமரையின் பக்கம் தலை வைத்துக் கூடப்  படுப்பதில்லை என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது என்பதை,  பாஜக 'மே 4' அன்று புரிந்து கொள்ளும்!

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.