"2026 தேர்தல் களம் ஆரிய, திராவிடப் போரின் மற்றொரு களம்தான்" தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், 25-01-2026 காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசியிருக்கிறார். இது ஏதோ போகிற போக்கில் சொன்னதல்ல, பொருள் பொதிந்த, சிந்திக்க வைக்கும் பேச்சு.

mk stalin 458மாடு மேய்த்துக் கொண்டு நாடோடிகளாகக் கைபர் - போலன் கணவாய்களின் வழியாக சிந்து சமவெளிக்குள் ஆரியர்கள் எப்போது நுழைந்தார்களோ (கி.மு.1500) அப்போதிருந்தே தொடங்கியது ஆரிய - திராவிடப் போராட்டம். சரியாகச் சொன்னால் இப்போராட்டம் இன்றைக்கு 3526 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

 ஆரியர்கள் அறிவாளிகள் இல்லை, ஒழுக்கமானவர்கள் இல்லை, குடிகாரர்கள், சூதாடுபவர்கள், நேர்மையற்ற வஞ்சக குணம் கொண்டவர்கள் என்று டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார். அதற்குச் சான்றாக அவர்களின் இராமாயண, மகாபாரத இதிகாசங்களைத் தூக்கிப் போடுவார். ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மதத்தால், அதன் கற்பனைப் பொய்களால் மதிமயங்கிய வடநாட்டு மக்கள், மதம் என்ற அடிப்படையில் இவர்களிடம் வீழ்ந்தார்கள். ஆனால் தமிழர்களிடம் இவர்களின் வித்தை என்றும் பலித்ததில்லை.

வடக்கிலிருந்த இரு ஆரிய மன்னர்கள் கனகன் - விசயன் தமிழரை இழித்துப்பேசினார்கள் என்பதற்காகப் படை நடத்தி கங்கைக்கரைக் குயிலாலுவத்தில் அவர்களின் செறுக்கழித்துத் தலையில் கல்லேற்றிச் சுமக்க வைத்து தமிழ்நாடு வந்தவன் தமிழன் சேரன் செங்குட்டுவன். இரண்டாம் கரிகாலனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் அதே கங்கைக் கரையில் ஆரியப் படைகளைச் சிதறடித்தனர் என்பது பண்டைய வரலாறு.

1938 களில் இந்தியை ஆட்சிமொழியாக்க எடுத்த நடவடிக்கைகளை ஐயா தந்தை பெரியார், மறைமலையடிகளார், திரு வி.கல்யாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் இணைந்து தோற்கடித்துத் தடுத்து நிறுத்தினார்கள். உண்மையில் சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் தாய்மொழியே இல்லை. கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தபோது அவர்கள் பேசிய மொழி 'ஆர்ய' என்ற ஈரானிய பிராந்திய மொழி வடிவின் ஒன்று. பின்னர் பாணினி என்பவர் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'அஷ்டாத்யாயி' என்ற சமஸ்கிருதத்தை தங்களின் தாய்மொழி என்று ஆக்கிக் கொண்டார்கள். அதன் முன்வடிவம் இந்தி. அதனால் இந்தியைத் திணிக்க ஆரியப் பார்ப்பனர்கள் முயல்கிறார்கள்.

அப்படியே 1965ஆம் ஆண்டு இந்தியை ஆட்சிமொழியாக்க முயன்றதன் விளைவாக, ஒன்றியப் பார்ப்பன அரசுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்து, திமிர்ந்து எழுந்து நின்றவர்கள் தமிழர்கள். மதங்களை உருவாக்கி சனாதனத்தை நிலைப்படுத்த, அதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, மொழி ஆதிக்கத்தைக் கையில் எடுத்து 'ஒரே பாரதம்' என்று ராம ராஜ்ஜியத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறது, ஆரிய பார்ப்பனியம்.

சாதிபேதமற்ற, சமத்துவத்தில், அறிவியல் விஞ்ஞானத்தை மக்களுக்கு அளித்துப் பகுத்தறிவு உலகத்திற்காக உழைக்கிறது, திராவிடம்! அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகிறது ஆரியம். அதன்மூலம் மக்களை அடிமையாக்கத் துடிக்கிறது, ஆரியம்.

திராவிடம் ஆரிய அடிமை விலங்கை உடைக்கும் கூராயுதம். ஒவ்வொரு காலத்திலும் ஆரிய - திராவிடப் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதனால்தான் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பொதுத்தேர்தலும், ஆரிய - திராவிடப் போரின் களம் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எச்சரிக்கையை ஏற்று, அந்நிய ஆரிய என்டிஏ கூட்டணியைத் தோற்கடிப்போம்.

உதயசூரியன் தலைமையேற்கும் இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம், தமிழ்நாட்டில்!

எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.