ஏப்ரல் 4ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரப் போகிறார், ரோட் ஷோ நடத்தப் போகிறார், அனைத்து பாஜக வேட்பாளர்களையும் அழைத்துப் பேசப் போகிறார், தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப் போகிறார் என்று கொளுத்திப் போட்டார்கள் சில பாஜகவினர்.

தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளை அப்படியே ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகப்போகிறார் என்று இப்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. ஏன் இந்தத் திடீர்மாற்றம்? எல்லாம் பாஜகவில் தொடர்ந்து நிலவும் குழப்பங்கள்தான்.

என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொன்னார் அமித்ஷா. அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமைப்போம் என்று தன்பங்குக்கு எடப்பாடியும் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போதே தெரிந்தது இவர்களுக்கிடையே இருப்பது ஏழாம் பொருத்தம் என்று. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நிகழ்வது ஊரறிந் ரகசியம்.

தொகுதி உடன்பாட்டின்படி 27 தொகுதிகள் பாஜகவுக்குக் கிடைத்தும் இதுவரை (01-04-2026) முழு வேட்பாளர் பட்டியலை அறிவிக்க பாஜகவால் முடியவில்லை. சிங்காநல்லூர் தொகுதியை எதிர்பார்த்தார் அண்ணாமலை, கிடைக்கவில்லை. அடுத்து வடகோவையைக் குறி வைத்தார். அதை வானதி சீனிவாசன் பிடித்துக் கொண்டார். எப்படியும் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தித் தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்ற பியூஸ் கோயல் மூலம் மேலிடம் எடுத்த முயற்சியை ஏற்கவில்லை அவர்.

பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகள் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாதவை என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர். குறிப்பாக கிணத்துக்கடவு, திருப்பூர் போன்ற தொகுதிகளைப்பெற பாஜக தவறிவிட்டது என்று உள்ளடி வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு இடையே இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தடுமாறிக் கொண்டு இருக்கிறது பாஜக. இந்தச் சூழலில் மோடியின் தமிழகம் - புதுச்சேரி பயணம் முடிவானதால் கடுப்பாகிப்போன பிரதமர் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புதுச்சேரி புறப்படுகிறாராம் எந்தத் தீர்வும் காணாமல், என்பது இப்போதைய செய்தி!

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.