அம்மையார் வானதி சீனிவாசன் அவர்கள் கொஞ்சம் விபரமாகப் பேசுவார் என்று பார்த்தால், அது பாஜகவிடம் இல்லையே என்று பின்னர் புரிந்தது.
அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் (01-04-2026) , திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரைக் 'கருணாநிதி தேசம்' என்று பெயர் மாற்றி விடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார், ஐயோ பாவம்! 'தமிழ்நாடு' என்ற இனிய, அழகான பெயரை ஏன் மாற்ற வேண்டும்? ஒருவேளை கருணாநிதி தேசம் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று சூசகமாகச் சொல்கிறாரோ, அம்மையார்.
அந்த மை காய்வதற்குள் 'தட்சிணப் பிரதேஷ்' என்று தமிழ்நாட்டின் பெயரை மாற்றி விடுவார்கள் என்றும் அவரின் புலம்பல் தொடர்கிறது. ஏற்கனவே ஒருமுறை தமிழ்நாடு உள்பட தென்பகுதியை 'தட்சிணப் பிரதேஷ்' என்ற பெயரில் அமைக்க டில்லி முயன்றதை தந்தை பெரியார் தலைமையிலான திராவிடப் பெரும்படை தகர்த்துச் சாய்த்து விட்டார்கள் என்ற வரலாறு கூட வானதிக்குத் தெரியவில்லை.
சாரி மேடம், எங்கள் முதலமைச்சருக்குப் பொறுப்பான வேலைகள் நிறைய இருக்கின்றன.
போகிறபோக்கில் 1998 திமுக ஆட்சியில் கோவை மதக் கலவரம் குறித்தும் பேசியிருக்கிறார். அப்படியானால் 2016 இலும் அங்கே மதக்கலவரம் ஏற்பட்டதே. அதற்கு யார் காரணம் என்றும் அவர் விளக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அமைதிச் சோலையாகவும், மதநல்லிணக்க அடையாளமாகவும் இருந்து வருகிறது. இதைப் பொறுக்காத பாஜக திருப்பரங் குன்றத்தில் நுழையப் பார்த்தது. இப்போது வானதி சீனிவாசன் எக்ஸ்பதிவும் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது.
எப்படி இருந்தாலும் இது 'தமிழ்நாடு', இங்கே காவிகளின் ஊசிப் பட்டாசு கூட வெடிக்காது!
- கருஞ்சட்டைத் தமிழர்