நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும் பாஜக-அதிமுக கூட்டணியும் முதன்மையாக போட்டியிடுகின்றன. பாஜகவின் மறைமுகக் கூட்டாளிகளாக நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகின்றனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 'பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கும் தமிழக உரிமைகளுக்கும் எதிரான கூட்டணி. எனவே அக்கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. மாறாக திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மட்டுமே வாக்களிக்க வேண்டும்' என தமிழ்நாடு முழுவதும் எங்கள் அமைப்பு சார்பாக பரப்புரை செய்ய உள்ளோம்.

ஏனென்றால் வர்ணாசிரம அடிப்படையிலான சமஸ்கிருத ஆதிக்க, மதவாத நாடாக இந்தியாவை மாற்றும் கொள்கையைக் கொண்ட ஒரு சனாதன பாசிச அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்த ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவே பாஜக.

இந்த பாஜக 12 ஆண்டு காலமாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருவதுடன் பல மாநில அரசுகளையும் கைப்பற்றி பல் தேசிய இன நாடான இந்தியாவை ஒற்றைத் தேசமாக அறிவிக்க வேலை செய்து வருகிறது.

அதற்கு இன்னும் சிம்ம சொப்பனமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆரியப் பார்ப்பனிய சனாதன தர்மத்துக்கு எதிரான நீண்ட நெடிய போராட்ட மரபைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.

அந்த சனாதன எதிர்ப்பு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக விளங்கிய திராவிட இயக்கமும் அதன் சமூக நீதி, மாநில உரிமை, இந்தி ஆதிக்க எதிர்ப்பு கொள்கைகளும் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய அளவில் தொழில் வளர்ச்சியிலும் மனித வளக் குறியீட்டிலும் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளன. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு ஒன்றிய பாஜக அரசு தந்து வரும் பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி பல துறைகளிலும் தமிழகம் முன்னேறி வருகின்றது.

இந்த பாஜக ஒன்றிய அரசு தமிழகத்துக்கு செய்த வஞ்சனைகள் ஏராளம்.

* நீட் தேர்வு திணிப்பு, உதய மின் திட்ட திணிப்பு

* ஒன்றிய பட்ஜெட்டுகளில் தமிழக நலன்கள் தொடர்ந்து புறக்கணிப்பு

* தமிழ்மொழி வளர்ச்சிக்கு புதிய நிதி ஒதுக்க மறுப்பு, இந்தி மொழித் திணிப்பு

* இங்கிருந்து வாரிச் செல்லும் வருவாய்களில் இருந்து தமிழகத்துக்கு தேவையான பங்கைத் தர மறுப்பது

* பேரிடர்களின் போது உரிய நிதி தர மறுப்பு, கல்வி, மெட்ரோ ரயில் திட்டங்கள். 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கிய நிதியையே தர மறுப்பது

*கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட மறுப்பது

* திருப்பரங்குன்றத்தை கலவரக் காடாக்கும் முயற்சி

* 19க்கும் மேற்பட்ட மாநில அதிகாரங்கள் பறிப்பு

என பாஜகவின் தமிழக விரோத நடவடிக்கைகள் நீளும்.

இத்தகைய தமிழர் விரோத ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கைபிடியில் இருந்து வருகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவளித்து நியாயப்படுத்தி வருகிறவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று வரை தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து வரும் பாஜக ஒன்றிய அரசின் தமிழக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வாய் திறக்காமல் திமுக எதிர்ப்பை மட்டுமே மையப்படுத்தி பொய்களை கூச்சநாச்சம் இன்றி பரப்பி வருகிறார்.

இந்த பாஜக-அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமைகள் முற்றாக பறி போகும்; தமிழகம் இது வரை அடைந்துள்ள முன்னேற்றமும் வளர்ச்சியும் பின்னடைவை சந்திக்கும்; மத நல்லிணக்கச் சூழல் கெடும். எனவே தமிழர் விரோத பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்.

திராவிட பாரம்பரிய இயக்கமான திமுக சமூகநீதி, மாநிலசுயாட்சி கொள்கைகளை உயர்த்திப் பிடித்து வருவதுடன் தமிழகத்தில் சனாதனப் பாசிசத்தைத் தடுக்கும் ஒரு தடுப்பு அரணாகவும் உள்ளது. இதுவரை தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை பாதுகாத்து மேலும் வளர்க்க திமுக வெற்றி பெறுவது அவசியமாகும். எனவே தான் திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

தமிழ்த் தேசியம் பேசியே திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக சீமானையும், திராவிடம், பெரியார் என்று பேசியே திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக நடிகர் விஜய்யையும் அரசியலில் இறக்கிவிட்டுள்ளது ஆர்எஸ்எஸ்.

இவர்கள் பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திமுக எதிர்ப்பை மட்டுமே மையப்படுத்தி ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவைகளாக இயங்குபவர்கள். இவர்கள் மூலம் பாஜக-அதிமுக கூட்ட கூட்டணி எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க பாஜக திட்டமிடுகிறது.

எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுவே!

* தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் காவு வாங்கத் துடிக்கின்ற ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் அதன் அடிமையாக உள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்!

* திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும்!

புரட்சிகர இளைஞர் முன்னணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.