நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர், நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி. வழக்கமாக ஆளும் பாஜக தான் அவை நடைபெற ஒத்துழைக்காது என்பது ஊருக்கே தெரிந்த சங்கதி. இதோ, நாடாளுமன்றம் தொடங்கியவுடனே பாஜக தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது.

நாட்டில் விவாதிக்க வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது என்றாலும், மிக முக்கியமாக SIR என்று அழைக்கப்படும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் என்பது நாடாளுமன்றத்தில் முதலில் விவாதிக்கப் படவேண்டிய ஒன்று. மனிதன் குழந்தையாகப் பள்ளியில் சேர்ந்ததில் இருந்து, சுடுகாட்டுக்குப் போவது வரையும் ஆதார் அட்டையைச் சான்றாகக் காட்ட வேண்டி இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மட்டும் ஆதாரைச் சான்றாக ஏற்க மாட்டாதாம்.

பீகாரில் SIR மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டார்கள். நீதிமன்றத் தலையீட்டால் அது 47 லட்சம் ஆயிற்று. அதற்கான விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் தரவில்லை.

இப்பொழுது SIR பணியில் பல்வேறு குழப்பங்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் 6.5 கோடி மக்களின் வாக்குகளை 30 நாள்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம்.

ஆணையம் தரும் பதிவு விண்ணப்பத்திலேயே ஏகப்பட்டக் குழப்பம். இதில் வேலைப்பழுவும் அடங்கும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டார்கள்.

இது மக்களின் குடியுரிமை பற்றிய பிரச்சனை என்பதால் இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று. அப்படி விவாதிக்க எதிர்கட்சிகள் சொன்னால், அதை ஏற்க மறுப்பது ஜனநாயகப் படுகொலையாகும். நாடாளுமன்றம் மக்களுக்கானது. அவைகளை அங்கே விவாதிக்க விடவில்லை என்றால் வேறு எங்குதான் போய் . விவாதிப்பது?

எதிர்கட்சிகளின் தீவிர நெருக்கடியின் பின்னர் SIR குறித்து 9 ஆம் தேதி விவாதிக்கலாம் என்கிறார் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர்.எதிர்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாறாக நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற பாஜக வழிவிடுவதும் இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் சர்வாதிகாரம் தலைதூக்கிக் கொண்டு இருக்கிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.