திமுக, அதிமுக கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இன்னும் முழுமையாக முடிவடைந்து விடவில்லை! எனினும், திமுகவிற்கும், முதன்மைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது! அதிமுக கூட்டணியிலோ ஒரு தேக்க நிலை தொடர்ந்து நீடிப்பதைப் பார்க்கிறோம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது என்பதால், இப்போது பேச்சு வார்த்தைகள் நடப்பது இயல்பான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என்பது உறுதி!
பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் நடக்கின்றன என்பதைத் தாண்டி, அவை எங்கே நடக்கின்றன என்பதன் மூலமாகவும் அதிகார மையம் எது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்! திமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடக்கத்தில் இருந்து திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில்தான் நடந்து வருகிறது! ஆனால் அதிமுக தலைமையோ, அடிக்கடி தில்லிக்குப் பறக்க வேண்டி இருக்கிறது!
இப்போது அதிமுகவின் தலைவர் பழனிச்சாமி மட்டுமல்லாமல், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் தில்லியில் அமித்ஷாவின் வீட்டுக் கதவு எப்போது திறக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்!
அந்தக் கூட்டணியை பாஜகதான் முடிவு செய்கிறது என்பதும், இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி, தில்லிக்குக் காவடி தூக்குவது மட்டும்தான் என்பதும் தெளிவாகி இருக்கிறது !
கூட்டணிப் பேச்சு வார்த்தைகளையே இங்கு நடத்த இயலாதவர்கள், நாளை ஒருவேளை, தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை முடிவு செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெறுவார்கள்?
எனவே இது வெறும் தேர்தல் பிரச்சனையாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டின் சுயமரியாதையோடு தொடர்பு கொண்ட சிக்கலாகவும் இருக்கிறது! தமிழ்நாடு எப்போதும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், மக்கள் திமுகவை ஆதரிப்பதே சரியானது என்பதை, இன்றைக்குப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களே தெளிவாகச் சொல்கின்றன!
ஆம், நம் கழகத்தின் தலைவர் சொல்வது போல, இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும், தில்லிக்கும் இடையில் நடைபெறுகிற தேர்தல்தான் !
- சுப. வீரபாண்டியன்