பாரதிய ஜன சங்கம், சுருக்கமாக ஜனசங்கம் என்ற கட்சி, ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக டில்லியில் ஆர்.எஸ்.எஸ். உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. அந்த ஜனசங்கம் தான் இன்று பாரதிய ஜனதா கட்சியாக உருமாறி உள்ளது. இந்து ராஷ்டிரம் என்ற பெயரால் நால்வருண, வருணாசிரம ‘மனுராஷ்டிரத்தை’ இந்திய ஒன்றியத்தில் நிறுவிட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் இன் குறிக்கோளை நிறைவேற்றிட அரசியல் செய்யும் கட்சிதான் பா.ஜ.க.

இதற்காக மதக்கலவரங்களை உருவாக்கும். இனக்கலவரங்களைத் தூண்டும். மத-இனத் துவேசங்களை விதைக்கும். உயர் ஜாதி என்று சொல்லப்படும் முக்கியமாக பார்ப்பனர் தவிர ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, மலைவாழ் மக்களுக்குக் கல்வி, உயர் வேலை வாய்ப்புகள் கிடைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும். அதற்காக சட்டம் இயற்றும்.தகுதித் தேர்வுகளை நுழைக்கும். மாறாக நாட்டின் முன்னேற்றத்தையோ, மக்களுக்கான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தவோ முன்வராத ஒரு பாசிச கட்சிதான் ஆர்.எஸ்.எஸ் இன் பா.ஜ.க.stalin rahul mamta and soniaகடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க நாட்டிற்கும், மக்களுக்கும் என்ன செய்தது? அரசுடைமையான சொத்துகள் விமானம், ரயில்வே, வங்கிகள், எல்.ஐ.சி, துறைமுகம் என ஒவ்வொன்றாக அதானி, டாடா போன்ற கார்ப்பரேட் குழுமங்களிடம் விற்றுக் கொண்டு இருக்கிறது. விவசாயத்திற்குக் கொடுக்கும் பணம் திரும்ப வராவிட்டால் அவரின் டிராக்டரைப் பறிமுதல் செய்வதும், மல்லையா போன்ற காப்பரேட் பெருமுதலாளிகளின் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்வதும் இந்தப் பாசிச பா.ஜ.கவின் வாடிக்கையாக இருக்கிறது.

பா.ஜ.க அரசுக்கு எதிரா இருக்கும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் முடக்க முயற்சிப்பது, அமலாக்கத்துறை, புலனாய்வு அமைப்புகளை ஏவி விடுவது போன்ற சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் பா.ஜ.க அரசு இனியும் நீடிக்கக் கூடாது, 2024 தேர்தலில் தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் இப்பொழுது முக்கிய எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போட்ட விதையைத் தொடர்ந்து முதல் கட்டமாக நிதிஷ்குமார், தேஜஸ் யாதவ் முயற்சியில் பாட்னாவில் 18 எதிர்கட்சித் தலைவர்கள் பா.ஜ.கவுக்கு எதிராகக் கூடினார்கள்.

உடனே பா.ஜ. க சங்கிகள் சொன்னார்கள், ‘ பார்.. பார்! மோடி என்ற ஒருவரை எதிர்க்க 18 கட்சிகள் கூட்டு சேர்கின்றன’ என்று.

இரண்டாம் கட்டமாக காங்கிரஸ் தலைவர் கார்கே முன்னெடுப்பில் பெங்களூருவில் 19-07-2023 அன்று 26 எதிர்கட்சித் தலைவர்கள் கூடிப் பேசினர்கள். இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, தி.மு.க சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஆர் பாலு உட்பட ஆம்ஆத்மி,

திருணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று மக்களிடம் அறிமுகம் ஆகியுள்ள நிறுவனமயப் பட்டுள்ள 26 அரசியல் கட்சிகள் ஒன்று திரண்டு ஒரு நம்பிக்கையின் எழுச்சியை ஏற்படுத்தியது.

இதைப் பார்த்த பா.ஜ.க. கதிகலங்கிப் போனது. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த பா.ஜ.க கடந்த ஒன்பது ஆண்டு கால பாசிச ஆட்சியின் காரணமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து கொண்டு வருவதை உணர்ந்து, என்ன செய்கிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரே நாளில் ஒரு போட்டிக் கூட்டத்தைக் கூட்டியது டில்லியில்.

அந்தக் கட்சியில் பா.ஜ.க, அ.தி.மு.க இந்த இருகட்சிகள் மட்டுமே மக்கள் அறிந்த கட்சியாகும். தவிர சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே (அணி), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (அணி), நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, பாரதிய சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தியின் (ஓர் அணி) , ராஷ்டிரிய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ், மகாராஷ்டிராவின் ஜன் சுராஜ்ய சக்தி, கோவாவைத் தளமாகக் கொண்ட மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி, உத்தரப் பிரதேசத்தின் நிர்பல் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம் (நிஷாத் கட்சி), பஞ்சாபின் சன்யுக்த் (திந்த்சா), மேகாலயாவின் மலைமாநில மக்கள் ஜனநாயக கட்சி, ஹரியானா லோகித் கட்சி, கேரள காமராஜ் காங்கிரஸ், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட துண்டு துக்கடா கட்சிகளை வைத்து வண்டி ஓட்டி இருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க. கூட்டிய கூட்டத்தில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதில் பாஜகவை தவிர்த்து 37 கட்சிகள் கடந்த முறை மொத்தம் 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகள் தலா ஒவ்வொரு எம்.பி களை வைத்துள்ளது. ஒன்பது கட்சிகள் கடந்த எந்தத் தேர்தலிலும் போட்டியிடாதவை. மொத்தம் 25 கட்சிகளுக்கு எம்பிக்களே இல்லை!

அடடா! அரசியலில், பொருளாதார நிலையில், ஒன்றிய அரசின் அதிகாரத்தின் வலிமையில், ஒன்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் ஓரிரண்டைத் தவிர, பெயர் தெரியாத ‘லெட்டர் பேட்’ கட்சிகளை வைத்து எதிர்கட்சிகளுக்கு எதிராகக் கூட்டம் போடுகிறது என்றால் பா.ஜ.க. பயந்து, அரண்டு போயிருக்கிறது என்றுதானே பொருள்!

“நாற்பதும் நமது! நாடும் நமது “ என்கிறார் நம் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

கொடநாடு கணக்கே தெரியாத எடப்பாடி டில்லியில் போய் சொல்கிறார் 2024 தேர்தலில் 350 சீட்டுக்களில் என்.டி.ஏ வெல்லும் என்று. உண்மைதான்! 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லப் போவது

I N D I A எதிர்க் கட்சிக் கூட்டணிகளே!

எழில்.இளங்கோவன்

Pin It