பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) மேற்கொள்ளப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்த ஒரு குடிமகன் கூட வாக்குரிமை பெறாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக SIR மேற்கொள்ளப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
ஆனால் பீகாரில் SIR மேற்கொள்ளப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6% குறைந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து 47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் SIR மேற்கொள்ளப்படுவதற்கு தலைமை தேர்தல் ஆணையர் கூறும் காரணம் சரியானது அல்ல என்பதை உணர முடிகிறது.
இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. முந்தைய 8 முறையும் வாக்குரிமை மட்டுமே சரி பார்க்கப்பட்டது. தற்போது குடியுரிமையை சரி பார்ப்பது தான் இதன் உண்மையான நோக்கம். அதற்காகவே 11 ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. அசாம் மாநில மக்களின் குடியுரிமை ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு SIR மேற்கொள்ளப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு ஆதார் அட்டை 12வது ஆவணமாக இதில் சேர்க்கப்பட்டாலும் திருத்தப் பணியின்போது, ஆதார் அட்டை ஓர் அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்கப்படும். குடியுரிமை, பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் (BLO) வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வாக்காளர்களின் விவரங்களை சேகரிப்பார். அப்போது 2002-2004 இக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் எந்த ஆவணமும் தரத் தேவை இல்லை.1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் அனைவரும் SIR இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தையும், பெற்றோர் யாரேனும் ஒருவருடைய ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய ஆவணம் மற்றும் பெற்றோர் இருவரின் ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விடுபட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முதல் மேல்முறையீடு மற்றும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். தற்போது SIR மேற்கொள்ளப்பட இருக்கிற 12 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்கள் இன்னும் ஆறு மாத காலத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அப்படி இருக்கையில் இங்கு நீக்கப்படும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் குறைவாகவே உள்ளது. அதற்குள்ளாகவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விடும். அதன் பிறகு அவர்களால் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள இயலாது.
SIR நடைமுறை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் உடனடியாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிறகு போதிய கால அவகாசத்துடன் விரிவாக மேற்கொள்ளலாம். அப்படியில்லாமல் உடனடியாக அவசரகதியில் இதை மேற்கொள்வது பாஜகவுக்கு ஆதரவாக அமையும் என்ற சந்தேகம் வலுப்படுகிறது. பீகாரில் நடத்தப்பட்ட SIR இல் பா.ஜ.கவுக்கு ஆதரவான வாக்குகள் சேர்க்கப்பட்டதையும், அதற்கு எதிரான வாக்குகள் நீக்கப்பட்டதையும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி ஆதாரத்தோடு வெளிப்படுத்தினார்.
அதனால் தான் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த நடைமுறையை எதிர்க்கிறது. தி.மு.க இது குறித்து ஆலோசிக்க நவம்பர் இரண்டாம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. பாஜக எதைச் செய்தாலும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிற அ.தி.மு.க SIR நடைமுறையை வரவேற்கிறது.
தி.மு.க அக்கட்சியின் வழக்கறிஞர் அணியினருக்கும், வாக்குச்சாவடி முகவர்களுக்கும் (BLA2) SIR குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் ஏற்கனவே பயிற்சி அளித்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முழக்கத்தை வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து